(Reading time: 13 - 26 minutes)

"நீ கல்யாணத்துக்கு சம்மதிச்சட்டன்னு அம்மா சொன்னாங்க... ரொம்ப சந்தோஷம் அண்ணா.. வாழ்த்துக்கள்.." என்று கை குலுக்கினான்.

இந்த திருமணம் குறித்து பேச்சு வந்தாலே துஷ்யந்த்க்கு பிடிப்பதில்லை... ஏன் அவனின் சந்தோஷ மனநிலையே மாறிவிடுகிறது... அந்த மாற்றம் அவன் முகத்திலும் தெரிய ஆரம்பித்துவிடுகிறது... ஆனால் செல்வா அதை கவனிக்கவில்லை...

"அண்ணா... இன்னிக்கு நீ கல்யாணம் செஞ்சுக்க போற பொண்ணை, அம்மாவும் அத்தையும் பார்க்கப் போறாங்க... கூட நானும் போலாம்னு இருக்கேன்.." என்றான்.. அவர்களின் பேச்சில் இடைப் புகுந்தார் விஜி...

"செல்வா... அது என்ன இன்னும் பொண்ணுன்னு சொல்லிக்கிட்டு, அண்ணின்னு கூப்பிடு.."

"கூப்பிடலாம்.. முதல்ல அந்த பொண்ணு கல்யாணம் முடிஞ்சு வீட்டுக்கு வரட்டும்.. அப்புறம் கூப்பிடலாம்..." என்றான்..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மதுவின் "மார்பில் ஊறும் உயிரே..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

அந்த சாரு தான் இந்த வீட்டு மருமகளாக வரப் போகிறாள் என்று தெரிந்ததும், எவ்வளவு உரிமையாக அவளை அண்ணி என்று அடிக்கடி அழைப்பான்... அம்மாவும், அத்தையும் அவளை மருமகளாக நினைக்காமல், மகளாகவே நினைத்துக் கொண்டாடினர்... அண்ணனோ எப்போதும் போல அன்பை வெளிக்காட்டாவிட்டாலும், மனைவியாக போகிறவள் என்ற மரியாதையையும், உரிமையையும் முன்பே கொடுத்திருந்தான்... ஆனால் இவ்வளவுக்கும் அவள் செய்தது துரோகம்.... தகுதியில்லாதவளை அண்ணியாக அழைத்ததற்கு வெட்கிப் போனான்... செல்வா மனதில் இவ்வாறான சிந்தனைகள் ஓடிக் கொண்டிருக்க,

அது கோமதிக்கும் புரிந்ததோ.. என்னவோ... "விடு விஜி... நர்மதா இவனை விட வயசுல சின்னவ தானே... கல்யாணம் ஆனதும் தானா முறை வச்சு கூப்பிட போறான்.." என்றார்..

அப்போது தான் அந்தப் பெண்ணின் பெயரைக் கேட்டவன்... "அம்மா பொண்ணு பேரு என்ன சொன்னீங்க... நர்மதாவா..??" என்றுக் கேட்டான்..

"ஆமாம் செல்வா... பொண்ணு பேரு நர்மதா.. ஸ்கூல்ல டீச்சரா வேலை செய்யறா... பார்க்க அழகா, லட்சணமா இருப்பா தெரியுமா.." என்று செல்வாவிற்கு சொல்வது போல் துஷ்யந்திற்கு சொல்லிக் கொண்டிருந்தார் கோமதி...

பின்னே... பெண் பார்த்துவிட்டு வந்ததும் போட்டோ காண்பித்து விவரம் சொல்லலாம் என்றால், உங்களுக்கு பிடிச்சிருக்குல்ல, அதுபோதும் என்றான்... நிச்சயம் முடித்துவிட்டு வந்து விவரத்தை சொன்னால், அவசர வேலையாக டில்லிக்கு கிளம்பிவிட்டான்... சரி இப்போதாவது விவரத்தை கேட்கட்டும் என்று நினைத்தார் அவர்...

ஆனால் அதை துஷ்யந்த் கேட்டானா தெரியவில்லை... ஆனால் அது செல்வாவை பாதித்ததோ... நர்மதாவா..?? என்று மறுபடியும் ஒருமுறை தன்னை தானே கேட்டுக் கொண்டான்...

"அண்ணா... நீயும் எங்கக் கூட வர்றியா.. இன்னும் பொண்ணை நீயும் பார்க்கல இல்ல..." செல்வா கேட்டதும், துஷ்யந்த் என்ன பதில் சொல்வது என்று யோசிக்கும் போதே, அவனின் மனநிலையையும் கோமதி அறிந்தாரோ...

"உன்னோட அண்ணன் இப்பத்தானே வந்தான்... கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும்..." என்றார்..

இன்னும் தன் அண்ணன் இந்த திருமணத்துக்கு முழுமனதாக சம்மதிக்கவில்லையோ என்று அப்போது தான் செல்வாவும் யோசித்தான்... கடந்தக் காலத்தின் தாக்கம் இன்னும் அவன் மனதில் இருக்கிறது... திருமணம் முடிந்தால் எல்லாம் சரியாகிவிடும்... என்று உடனே சமாதானமும் ஆகிவிட்டான்...

இந்த நேரம் இங்கிருந்து தப்பித்தால் போதும் என்பது போல்... "அம்மா நான் போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கிறேன்..." என்று சொல்லிவிட்டு துஷ்யந்த் தனதறைக்கு செல்ல...

"சரி நீ ரெடியாகி வா செல்வா... நாம கிளம்பலாம்..." என்று கோமதி சொன்னதும், செல்வாவும் ஏதோ சிந்தனையோடு தனதறைக்கு சென்றான்.

றைக்குள் வந்ததும், ஃப்ரஷ் ஆகி வேறு உடைக்கு மாறிய துஷ்யந்த்... ட்ரஸ்ஸிங் டேபிளில் இருந்த ட்ராவிலிருந்து ஒரு சாவியை எடுத்தான்...

அந்த அறையின் ஒருபுறம் முழுவதும் இருந்த வார்ட்ரோப்களில் ஒரு அறையையும் மட்டுமே அவன் பூட்டி வைத்திருப்பான்... அந்த அறையை திறந்தவன்... அலுவலகத்திற்கு எடுத்துப் போகும் தன் பையை திறந்து அதிலிருந்து அந்த பெட்டியை எடுத்தான்... அது கங்காவிற்கு வாங்கிய ஜிமிக்கி...

மறுபடியும் ஒருமுறை அந்த பெட்டியை திறந்தவன், அந்த ஜிமிக்கி கங்காவின் காதுகளில் ஆடிக் கொண்டிருந்தால், எப்படி இருக்கும் என்று கற்பனை செய்துக் கொண்டான்... பின் அந்த அறையின் ஒரு அடுக்கில் அதை வைத்தான்...

அந்த அறை முழுவதும் இதுபோல பரிசுப் பொருட்கள் நிறைய குவிந்திருந்தது... 50 ரூபாயிலிருந்து, லட்சம் மதிப்புள்ள வரையான பொருட்கள் நிரம்பியிருந்தது... தங்கம், வெள்ளி, வைரம், பிளாட்டினம் என்று இதுபோல் காதில் போடும் அணிகலனிலிருந்து, காலில் போடும் கொலுசு வரை எல்லாமே இருந்தது... புடவை, சல்வார், ஹேண்ட்பேக், வாலட், செருப்பு முதற்கொண்டு எல்லாமே இருந்தது... எல்லாம் பிரிக்காமல் பேக் செய்து புத்தம்புதிதாகவே இருந்தது...

இதையெல்லாம் கங்காவிற்கு வாங்க வேண்டும் என்று அவன் தேடி தேடி வாங்கவில்லை... இப்போது எப்படி ஜிமிக்கியை திடிரென்று தோன்றி வாங்கினானோ, அதேபோல் தான் மற்ற பொருட்களையும் வாங்கினான்...

ஆனால் வாங்கிய எதையும் இதுவரை அவளிடம் கொடுத்ததில்லை... கொடுத்தாலும் அவள் வாங்கமாட்டாள் என்பது அவனுக்கு தெரியும்... அதையும் மீறி அவளிடம் கொடுத்து, அவள் அதை வேண்டாமென்று சொல்லி, அப்படி சொல்லிவிட்டோமே என்று அதற்கும் அவள் வருத்தப்படுவாள் என்று தெரியும்... அந்த வருத்தத்தை கூட அவளுக்கு கொடுக்க இவன் விரும்பவில்லை...

ஆனால் என்றாவது ஒருநாள் இந்த பரிசுப் பொருட்களை உரிமையோடு கொடுக்கும் நேரமும் இவனுக்கு வரும் என்று இந்த ஆறு வருடமாக காத்திருக்கிறான்.. அதற்குள் இந்த பொருட்கள் மக்கிக் கூட போகலாம்... ஒரு ஐந்து நிமிடமாவது அவளுக்காக வாங்கி வைத்திருக்கும் இதையெல்லாம் அவள் அணிந்தாலே போதும்... அந்த நாட்களுக்காக இவனும் நம்பிக்கையோடு காத்துக் கொண்டிருந்தான்... ஆனால் இப்போதோ..??

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.