(Reading time: 14 - 27 minutes)

37. மருவக் காதல் கொண்டேன்... - மீரா ராம்

Maruva kathal konden

பொழுது புலர்ந்த அந்த அதிகாலை வேளையிலேயே, தன் தோள்களில் ஒரு பெரிய துணிமூட்டை மாட்டிக்கொண்டு கிளம்பினாள் சதி….

அரண்மனையின் பின்புறம், சதியின் இரு சகோதரிகளும் பணிப்பெண்களிடம் கட்டளைப் பிறப்பித்துக்கொண்டிருந்தனர்…

“சதியை விட்டு விட்டு தாங்கள் இருவரும் எங்கும் செல்லகூடாது… புரிகிறதா?...”

“புரிந்தது…”

“நேரத்துடன் விரைந்து அரண்மனையும் திரும்பிடல் வேண்டும்… அதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்…”

“அப்படியே ஆகட்டும்…”

சதியின் இரு சகோதரிகளும், மாறி மாறி பணிப்பெண்களிடம் உரையாடிக்கொண்டிருக்க,

“அக்கா… நான் கிளம்புகிறேன்….” என்றபடி வந்தாள் சதி அங்கே…

தங்கையின் தோளில் இருந்த அந்த துணிமூட்டை, அவர்கள் இருவரையும் கலங்கடித்தது வெகுவாய்…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சகியின் "நிர்பயா" - சமூகத்தில் நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கும் பெண்ணின் கதை...

படிக்க தவறாதீர்கள்..

“விரைவில் அரண்மனை திரும்பிவிடு சதி…” என்றவர்கள், பணிப்பெண்களிடம் “ம்ம்.. செல்லுங்கள்…” என்று ஆணையிட, சதி விழித்தாள்…

“அக்கா… இவர்கள் இருவரும் எங்கே வருகிறார்கள்?...”

“உன்னுடனே வருவார்கள்… உன் தோளில் இருக்கும் துணிமூட்டையை முதலில் என்னிடம் கொடு….”

“என்ன?.....”

அதிர்ந்து போனவளாய் சதி தன் சகோதரிகளை பார்க்க,

“இன்னும் என்ன யோசனை சதி?... கொடு அதை…”

“அக்கா, யாமே அனைத்திற்கும் பொறுப்பு… இதில் இவர்களையும் உடன்படுத்துவது முறையல்ல…”

“உன்னை எப்படி அதிக தொலைவு, நாங்கள் தனியே அனுப்புவது?...”

“அதை நான் பார்த்துக்கொள்கிறேன்…” என்றவள் இரண்டு அடி எடுத்து வைத்தபோது, அவளுடனே அந்த இரு பணிப்பெண்களும் வர, சதி கோபம் கொண்டாள்…

“நீங்கள் ஏன் என்னுடனே வருகிறீர்கள்?...”

“தங்களுடன் வர சொல்லி எங்களுக்கு ஆணைப் பிறப்பிக்கப்பட்டுள்ளது…”

“யார் ஆணை விதித்தது?...”

“அது நானே… மகளே….”

குரல் வந்த திசையை நோக்கி திரும்பிய சதி, அங்கே பிரசுதி வருவதைக் கண்டாள்…

“அன்னையே… எனக்கு யாருடைய உதவியும் வேண்டாம்… நானே சென்று வருகிறேன்….”

அவள் பொறுமையாக கூற, அவளது மூத்த சகோதரியோ வெடித்தாள்…

“இன்னும் உன் பிடிவாதத்தை நீ விடப்போவதில்லையா சதி?... நேற்று நேர்ந்த நிகழ்விற்கு தந்தையிடம் மன்னிப்பு கேட்டிருக்கலாம்… அதைவிட்டுவிட்டு பிடிவாதமாய் நீ தண்டனையை வேண்ட, அவரும் அதற்கு எத்தகு தண்டனையை உனக்கு வழங்கிவிட்டார்?... அதில் அதிகம் யார் பாதிப்பு அடைந்திருப்பார்கள் என்று நினைக்கிறாய்?...”

மன வேதனையுடன் மூத்தவள் பேச, சதியோ அமைதியாக இருந்தாள்…

“விடு மகளே… நடந்ததை மாற்ற முடியாது… நடக்கப்போவதை பார்ப்போம்… நேரம் வேறு ஆகிக்கொண்டே போகிறது…”

பிரசுதி நினைவுபடுத்த, சதிக்கும் நேரம் சென்று கொண்டிருப்பது புரிந்தது…

“மகளே… சதி… இவர்கள் உன்னுடனே வரட்டும்… நீ சேகரிக்கும் மலர்களை அவர்கள் சுமந்து வருவார்கள்… மறுக்காதே….”

பிரசுதி வற்புறுத்த, அதற்கு மேலும் மறுக்காமல் சரி என்றவள், நகரும்போது, சதியின் மூத்த சகோதரி, அவளின் தோளிலிருந்து அந்த மூட்டையை எடுத்தாள்…

“இப்போது சென்றுவா சதி… விரைவில் திரும்பி வந்துவிடு….”

சதியும் இனி வாதாடி பயனில்லை என்று தெரிந்து கொண்டு, நடக்க ஆரம்பித்தாள் அரண்மனையை விட்டு வெளியேறியபடி…

மகள் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்த பிரசுதியின் கண்களில் நீர் கோர்ப்பதை எவ்வளவு முயன்றும் அவரால் தடுக்க முடியவில்லை….

ஆசை மகள்… செல்லமாய் வளர்த்த மகள்… இன்று வெறும்காலோடு தரையில், நடந்து செல்கிறாள்… அதுவும் காடு, மேடு, மலை என அனைத்தையும் நோக்கி…

என் செல்ல மகளின் பாதங்கள் தாங்குமா?...

கண்களில் வழியும் கண்ணீரை துடைத்து எடுத்தும் எண்ணமே இல்லாது, மகள் தன் கண் பார்வையிலிருந்து மறையும் வரை பார்த்துக்கொண்டே இருந்தார் பிரசுதி…

அவள் தன் கண் பார்வையிலிருந்து மறைந்ததும், தன்னை சரி செய்து கொண்டு, மகள்களிடம் திரும்பியவர்,

“நீங்கள் இருவரும் உள்ளே செல்லுங்கள்…” என கூற, அவர்களும் சதி சென்ற திசையையே திரும்பி திரும்பி பார்த்துவிட்டு, பின் உள்ளே சென்றனர்…

அவர்கள் இருவரும் சென்றதும், அவரும் மெல்ல அடி எடுத்து வைத்து உள்ளே வருகையில், நேற்று அரண்மனையில் நடந்த நிகழ்வுகள் அவரின் மனக்கண்ணின் முன் வந்தது…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.