அவையில் உள்ள அனைவரும், பிரஜாபதியின் முடிவினை எதிர்பார்த்து காத்திருக்க, அவரும் தன் பதிலைக் கூறினார்…
“எனது மகள் சதி செய்தது நிச்சயம் அனர்த்தமே… அதில் எள்ள்ளவும் சந்தேகமில்லை… அதனால் அவளுக்கு தண்டனை கொடுப்பது அரசனாகிய எனது கடமை… அவள் என் மகள் என்பதால் விதிவிலக்கு அளிப்பது சாத்தியமன்று… அரசனுக்கு ஓர் நியாயமும், மக்களுக்கு ஓர் நியாயமும் என் ராஜ்ஜியத்தில் இல்லை… யாராக இருந்த போதிலும் தவறு செய்தால் அவர்களுக்குரிய தண்டனை வழங்கப்படும்… அதில் மாற்றமே இல்லை…”
“எனினும் சுவாமி… இதில் சதியின் தவறு….”
பிரசுதி குறுக்கிட்டு மீண்டும் பேச ஆரம்பிக்க,
“சதி செய்த அனர்த்தம், ஸ்ரீநாராயணனுக்கு செய்யும் பரிகாரத்திலேயே உள்ளது…” அவர் பிரசுதியினை கண்டுகொள்ளாது கூற,
“கூறுங்கள் தந்தையே… எத்தகு பரிகாரமானாலும், நான் செய்ய தயாராக இருக்கிறேன்….” என்றாள் சதி விரைவாக…
“கவனமாக கேட்டுக்கொள் பிரசுதி… சதி செய்த தவறுக்கு, ஒரு இலட்சம் தாமரை மலர்களில் ஸ்ரீமன் நாராயணின் நாமத்தை எழுத வேண்டும்… அதுவும் எண்ணி எழே நாட்களில்….”
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
உஷாவின் "புதிர் போடும் நெஞ்சம்..." - காதல் கலந்த குடும்ப தொடர்....
படிக்க தவறாதீர்கள்..
“சுவாமி………………………”
பிரசுதி உரக்க கத்த, அவரோ அதை சட்டை செய்யவில்லை கொஞ்சமும்….
“மேலும் அவள் அதுவரை என்னோடு பேசக்கூடாது… ஒருவேளை ஆகாரம் மட்டுமே உண்ண வேண்டும்… அந்த ஏழு நாட்களும் அவள் இந்த அரண்மனையின் எந்த சுகபோக வாழ்க்கை முறையையும் அனுபவித்தல் கூடாது…”
“தந்தையே… தாங்கள் அளித்த தண்டனையை நான் மனமுவந்து ஏற்கிறேன்… ஆனால், தாம் என்னிடம் உரையாடாமல் இருப்பதை மட்டும் என்னால் ஏற்க இயலாது தந்தையே…”
சதியின் கண்களில் கிட்டத்தட்ட, கண்ணீர் உதித்து வழிய ஆரம்பிக்க,
“பிரசுதி… இதுவே என் முடிவு… இதில் எந்த மாற்றமும் இல்லை….”
அவர் மகளிடம் பேச விரும்பாது, மனைவியிடம் கூற,
“சுவாமி அவள் நம் மகள்… தங்களின் செல்ல மகளுக்கு தாம் இத்தகு கொடிய தண்டனையை கொடுப்பதா?... அவையில் உள்ள சான்றோர்கள் அனைவரும் இப்படி சிலையென சமைந்து போய் நிற்கின்றீர்களே ஏன்?...”
பிரசுதி தன் மனக்குமுறலை வெளிப்படுத்த,
ராஜகுரு காசியப்பர் அமைதியாக இருக்க, பிருகு மட்டும் பிரஜாபதியின் அருகே வந்தார்…
“பிரஜாபதி தட்சரே… தண்டனை என்பது தவறு செய்தவர்கள் திருந்துவதற்காக கொடுக்கப்படுவது தானே தவிர, கொடுமை புரிவதாக இருத்தல் கூடாது… எனினும் சதியின் மீது யாதொரு தவறும் இல்லை… அறியாமல் அவள் செய்த தவறுக்கு இத்தனை பெரிய தண்டனை ஏற்புடையது தானா?...
“மகரிஷி பிருகு… அதை அவள் அந்த அனர்த்தத்தை நிகழ்த்தும் முன் யோசித்திருக்க வேண்டும்… எனினும் அவள் அதை செய்யவில்லை… அவள் செய்யப்போகும் காரியத்தால் அவளது தந்தையான நான் எத்தகு அவமானத்தை சந்திக்க நேரிடும் என்ற எண்ணமே இல்லாது அவள் அந்த அனர்த்தத்தை உலகை ஆளும் பரந்தாமனின் சிற்பத்தில் இடமளித்து, இந்த பிரம்மாபுரத்திற்கே இழுக்கு ஏற்படுத்திவிட்டாள்… அது மாபெரும் தவறு...”
“அறியாமல் செய்தது எவ்வாறு தவறாகும் பிரஜாபதி?...”
“அவள் அறிந்திருக்க வேண்டும்… அவள் செய்யப்போகும் காரியத்தால் ஏற்படும் பின்விளைவுகளை அறிந்திருக்க வேண்டும்… அதனை அவள் செய்யாமல் புரிந்த செயல், இன்று அனர்த்தம் ஆகி நிற்கிறது…”
“சுவாமி, அது அனர்த்தமாகவே இருந்துவிட்டு போகட்டும்… அவளை மன்னித்துவிடுங்கள் சுவாமி… நம் மகளுக்கு இந்த கொடிய தண்டனை வேண்டாம் சுவாமி… உங்களிடம் நான் மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்… தயவுசெய்து….”
அவள் அடுத்த வார்த்தை பேசும் முன்,
“பிரஜாபதி தட்சன் என்னும் நாமத்தைக்கொண்டவனாகிய நான், இந்த பிரம்மாபுரத்தின் அரசன்… அரசவையில் நான் எடுக்கும் முடிவே, இறுதியானது… இங்கு நான் அரசன் மட்டுமே… அதை புரிந்து கொள் சுயம்புவின் மகளே…”
“சரி பிரஜாபதி… ஒரு மனைவியாக என் கணவரிடம் போராடுவதற்கு இது நேரம் இல்ல என்று உரைத்துவிட்டீர்கள்… எனில் ஒரு தாயாக நான் தங்களிடம் மன்றாடுகிறேன்… என் மகள் அறியாது செய்த தவறை மன்னித்தருளுங்கள்… மன்னித்தருளுங்கள்…..”
அவர் கைகூப்பி, கெஞ்சி கேட்டுக்கொள்ள, சிலையாக இருந்தார் பிரஜாபதி…
“இந்த தண்டனையின் மூலம், தவறு செய்தவர் எவராக இருந்தாலும் தண்டனை உண்டு என்ற எண்ணம் பிறக்கும் அனைவரின் மனதிலும்… அதுவே தவறு செய்யும் எண்ணத்தை தடுக்கவும் செய்யும்… அரசனின் மகளாக இருந்தாலும் அவள் செய்த தவறு நியாயப்படுத்தப்பட மாட்டாது என்பதனை இந்த உலகம் அறிந்து கொள்ளும் இப்போது….”
“தாம் செய்தது சரியே பிரஜாபதி… தவறுக்கு நிச்சயம் பரிகாரம் வேண்டும்… அதை தான் தாம் சதிக்கும் அளித்திருக்கிறீர்கள்… எனவே இது எந்த வகையிலும் பிழையாகாது…”
அதுநேரம் வரை அமைதியாக இருந்த ராஜகுரு காசியப்பர், பிரஜாபதியிடம் கூற, அனைவரும் அதிர்ந்து விழித்தபடி அவரை பார்த்தனர்…