(Reading time: 11 - 21 minutes)

மேலியா உறக்கத்திலிருந்து விழித்தாள். தான் எவ்வளவு நேரம் உறங்கினோம் என்று அவளுக்கே தெரியாது. அவளையறியாமல் உறங்கி இருக்கிறாள். அது ஒன்றும் அவ்வளவு நிம்மதியான உறக்கம் என்று கூறிவிட முடியாது.

காலையில் நடந்த சமபவங்களை கோர்வையாக எண்ணிப் பார்த்தாள். திடீரென ஒரு சப்தம்! அது போன்ற சப்தத்தை அவள் கேட்டிருக்கிறாள். குண்டு காயங்களோடு உயிருக்கு போராடுபவர்களின் கடைசி அலறல்கள் இவ்வாறாகத் தான் இருக்கும். ஆனால், இங்கு தான் வெடிவிபத்து ஏற்படவில்லையே. பிறகு, ஏன் இந்த சப்தம் என அவள் பயந்தபடி நாராயணனின் அறையை எட்டிப் பார்த்தபோது அதிர்ச்சியில் உறைந்தாள்.

நாராயணன் நெஞ்சை அழுத்திப் பிடித்தபடி வலியால் துடித்துக் கொண்டிருந்தார். உடனே, ஓடிச் சென்று அவரைத் தாங்கிப் பிடித்த அமேலியா, "யாராச்சும் வாங்க !" என அவளுடைய மொழியில் கத்தினாள். பதறியபடி ஓடி வந்த மேகலா, நாராயணனை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு புறப்பட்டதை நினைத்துப் பார்த்தாள்.

காலையில் சென்றவர்கள் இன்னும் வீடு திரும்பாதது அவளுக்கு பயத்தைத் தந்தது. ஒருவேளை, அந்த பெரியவருக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்திருக்குமோ என மனம் பதைபதைத்த அமேலியா, அவர் நன்றாக மீண்டுவர கடவுளைப் பிரார்த்தித்தாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சகியின் "நிர்பயா" - சமூகத்தில் நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கும் பெண்ணின் கதை...

படிக்க தவறாதீர்கள்..

படுக்கையில் இருந்து மெல்ல எழுந்து வீட்டை ஒரு முறை சுற்றிப்பார்த்தாள். அவ்வப்பொழுது கண்ணாடி ஜன்னல் வழியே வீட்டின் உரிமையாளர்கள் வருகிறார்களா என நோட்டமிட்டாள்.

குளிர் காலமாதலால் சீக்கிரமாகவே இருள் சூழ ஆரம்பித்தது. விளக்குகளை எரியவைத்த அமேலியா மேற்கொண்டு என்ன செய்வதென்று புரியாமல் குழம்பினாள்.

நாராயணனின் அறைக்குள் நுழைந்தாள். அவருடைய பெட்டி திறந்த நிலையிலேயே இருந்தது. அ ருகில், சிதைந்த கோலத்தில்  ஒரு புகைப்படத்தைக் கண்டாள்.

இந்த புகைப்படத்தை கையில் வைத்தபடி தானே அவர் வலியால் துடித்தார்?.ஏன் இந்த புகைப்படத்தின் மீது காதல் அவருக்கு? இந்த புகைப்படத்தில் இருப்பவர் யார்? என கூர்ந்து நோக்கியவளுக்கு  நாராயணன் இளவயதில் தன் மனைவியோடு இருந்த புகைப்படம் தான் அது என புரிந்தது. புகைப்படம் சிதிலமடைந்துவிட்டதால் அவருடைய மனைவின் முகம் தெளிவாக இல்லாததைக் கண்டு ஏமாற்றப் பெருமூச்சை விட்டாள்.

வீட்டின் கதவு மணி ஒலித்தது.  அமேலியா திடுக்கிட்டாள். அவள் மனம் படபடத்தது. மீண்டும் மணியின் ஒலி விடாமல் ஒலித்தது. அமேலியா மெதுவாக  கதவின் அருகே சென்றாள். வந்திருப்பவர் யாராக இருக்கும் என எண்ணி பயந்தாள்.  

மணியொலியோ தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருந்தது. தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கதவைத் திறந்த அமேலியா நிம்மதி அடைந்தாள்.

வாசலில் நிலா நின்றிருந்தாள். அமேலியாவைக் கடந்து உள்ளே சென்ற நிலா சோபாவில் தனது பள்ளிப்பையை போட்டுவிட்டு அமர்ந்தாள். நிலாவின் முகத்திலும் சோகம் படர்ந்திருந்தது.

அமேலியா நிலாவின் பள்ளிப்பையை எடுத்து அவளது அறையில் வைத்துவிட்டு நிலாவிற்கு மாற்றுத்துணி கொண்டுவந்து கொடுத்தாள். அதை வாங்கிய நிலா வேண்டா வெறுப்போடு கையில் வைத்துக்கொண்டாள்.

நிலாவின் தலையை வாஞ்சையோடு வருடியபடி, 'என்ன  சோகமா இருக்க?' என்று சைகையில் கேட்டாள் அமேலியா.

"இன்னைக்கு ஏதாச்சும் ஒண்ணு நடக்கும்னு தெரியும். ஆனா அது இவ்ளோ பெருசா இருக்கும்னு தெரியாது"

நிலா கூறுவது புரியவில்லை என்றாலும் அவள் சோகத்தோடு எதையோ சொல்கிறாள் என்று மட்டும் அமேலியாவிற்கு புரிந்தது. அது நிச்சயம் தாத்தாவைப் பற்றியதாகத் தான் இருக்கும் என்று எண்ணிக்கொண்டாள்.

"இன்னைக்கு அம்மா ஸ்கூலுக்கு போன் பண்ணி எல்லாத்தையும் சொன்னாங்க. இதுக்கு காரணம் நான் தான் அக்கா" என்று கலங்கிய கண்களோடு அமேலியாவை நோக்கினாள் நிலா.

அவளது கண்ணீரைத் துடைத்த அமேலியா, 'தாத்தாவிற்கு எதுவும் நடக்காது' என்று சைகை மொழியில் ஆறுதல் கூறினாள்.

சோபாவில் இருந்து எழுந்த நிலா, தன் தாத்தாவின் அறைக்குச் சென்று அங்கிருந்த தன் பாட்டியின் சிதைந்த போட்டோவை தூக்கிக்கொண்டு வந்து அமேலியாவின் கையில் கொடுத்தாள்.

"இது தான் என் பாட்டி. தாத்தாவுக்கு பாட்டியை ரொம்ப பிடிக்கும். நான் தான் போட்டோவை உடைச்சிட்டேன். வேணும்னு பண்ணல. தெரியாம நடந்துபோச்சு. அதனால தான் தாத்தா இப்போ ஹாஸ்பிடல்ல இருக்காரு"

அமேலியா போட்டோவை வெறித்துக்கொண்டிருந்தாள். அவள் மனதில் வேதனை வழிந்தோடியது. போட்டோவை கீழே வைத்துவிட்டு நிலாவை கட்டியணைத்து சாந்தப்படுத்தினாள். அதன்பின் அவ்வீட்டில் நிசப்தம் நிரம்பியது. அமேலியாவின் மடியில் நிலா துயிலில் ஆழ்ந்தாள்.

மணி எட்டரையைக் கடந்தது. வீட்டின் முன் கேட் திறக்கும் சப்தம் கேட்டு கண்விழித்தாள் அமேலியா. அவளது இதயம் லேசாக படபடத்தது  மடியில் படுத்திருந்த நிலாவின் உறக்கம் கலையாதவாறு அவளை சோபாவில் படுக்க வைத்துவிட்டு வருவது யாரென ஜன்னல் கண்ணாடி வழியாக பார்த்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.