(Reading time: 11 - 21 minutes)

காரை நிறுத்திவிட்டு வசந்த் நடந்து வருவது தெரிந்தது  ஒருவித வெறுப்புணர்ச்சி அவள் முகத்தில் பரவியது. சில நொடிகளில் கதவு மணி ஒலித்தது.

தயக்கத்தோடு கதவைத் திறந்தாள் அமேலியா. வீட்டினுள் நுழைந்த வசந்தின் கண்கள் அமேலியாவை நோக்கின. அதனை அவளும் உணர்ந்தாள்.

காலையில் இருந்து பரபரப்பாக இயங்கியதாலும் பயணம் செய்திருந்த களைப்பினாலும் மிகவும் சோர்வோடு இருந்த வசந்த் பிரிட்ஜை திறந்து குளிர்ந்த நீரை பருகினான்.

இரவின் வெண்பனி மழைச் சாரல் போல் தூறிக் கொண்டிருக்கும் வேளையில் குளுமையான நீரை எப்படி இவனால் பருக முடிகின்றது என ஆச்சர்யமடைந்தாள் அமேலியா.

சிறிது நேரம் ஹாலில் உலாவிய வசந்த், மாடியில் உள்ள தனது அறைக்குள் சென்று மறைந்தான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தேவியின் "பாயும் மழை நீயே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

அவன் அறைக்குள் நுழையும் வரை பயத்தோடு இருந்த அமேலியா நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.

வசந்த் நிம்மதியான குளியலை போட்டுவிட்டு தலையைத் துவட்டியபடி கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்துக் கொண்டான்.

அப்போது அவனது செல்பேசி ஒலித்தது.ஜெசிகா தான் அழைத்தாள்.

"சொல்லு ஜெசி"

"அப்பாவுக்கு இப்போ எப்படி இருக்கு வசந்த்?"

"பரவாயில்லை. அக்கா தான் கூட இருந்து பாத்துக்குறாங்க"

"சாப்பிட்டியா?"

"பசிக்கல"

"உன்கிட்ட ஒரு மாடல் போட்டோ கொடுத்து அவளை ஓவியமாய் வரஞ்சிட்டு வர சொன்னேனே, அதை முடிச்சிட்டியா?" 

"ஐயோ! நான் மறந்துட்டேன். சாரி ஜெசி"

"விளையாடுறியா வசந்த். நாளைக்கு எடுக்க போற விளம்பர சூட்டிங்கிற்கு அந்த ஓவியம் தான் ரொம்ப முக்கியம்"

"ரியலி சாரி ஜெசி.  உனக்கே தெரியும் இந்த வாரம் முழுக்க நான் எவ்வளவு டென்ஷன்ல்ல இருந்தேன்னு"

"எனக்கு புரியுது வசந்த். ஆனா மத்தவங்க உன் விளக்கத்தை ஏத்துக்கமாட்டாங்க"

"இப்போ நான் என்ன செய்யணும்னு சொல்ற?"

"எப்படியாவது நாளைக்கு பத்து மணிக்குள்ள ஓவியத்தை ரெடி பண்ணிடு"

"முயற்சி பண்றேன்" என்று கூறிய வசந்த்,என்ன செய்வதென்று குழம்பினான். நிச்சயம் இந்நேரத்தில் இவ்வேலையை முடிப்பது சாத்தியமே இல்லாத விஷயம் என்பது வசந்திற்கு தெரியும். அதனால், எந்த முடிவையும் அவனால் எடுக்க முடியவில்லை.

வேண்டா வெறுப்போடு செல்போனை எடுத்த வசந்த், இரண்டு  வருடங்களாக தன்னுடன் நட்போடு இருக்கும் ஓவியர் ஒருவரை தொடர்பு கொண்டான்.

எந்த ஓவியமாக இருந்தாலும் தத்ரூபமாக வரைந்து காட்டும் திறனுள்ளவர் அவர். அவர் மட்டும்  இந்த உதவியைச் செய்தால் நிச்சயம்  தன் வாழ்வில் என்றென்றும் பேசப்படும் என்று எண்ணியவாறு அவரின் குரலைக் கேட்க காத்திருந்தான். மூன்று நொடிகளுக்கு பின் அழைப்பு ஏற்கப்பட்டது.

"சொல்லுங்க வசந்த்"

"சார் உங்க கிட்ட ஒரு உதவி"

"என்ன?"

"அவசரமா ஓவியம் ஒண்ணு வரஞ்சி தரணும், அதுவும் நாளைக்கு பத்து மணிக்குள்ள"

"இது நடக்குற காரியமா வசந்த்?"

"நீங்க மனசு வச்சா நடக்கும் சார்"

"உங்களுக்கு உதவணும்னு நினைச்சா கூட இப்போ என்னால முடியாது வசந்த். நான் குடும்பத்தோட சுற்றுலா வந்திருக்கேன்"

"ஓகே சார்  உங்களை தொந்தரவு செஞ்சதுக்கு மன்னிச்சிடுங்க"

"பரவாயில்லை, நீங்க வேற முயற்சி பண்ணி பாருங்க, சாரி வசந்த்"

"ஓகே சார்" என இணைப்பைத் துண்டித்தான் வசந்த்.

இணைப்பு துண்டிக்கப்பட்ட பின் போனை வேகமாய் வீசி எறிந்து தன் வேதனையை வெளிப்படுத்தினான் வசந்த்.

இனி அவனால் எதுவும் செய்ய முடியாது, யாரும் உதவவும் மாட்டார்கள். நாளை வேலை பறிபோகப்போகிறது. மீண்டும் விளம்பரக் கம்பெனியில் வேலை தேடுவதா அல்லது கனவுகளைத் தொலைத்து மற்றவர்களைப் போல் வாழப் பழகிக்கொள்வதா என்று வேதனையடைந்தான் வசந்த்.

தூக்கம் வரவில்லை. அங்கும் இங்கும் நடந்தான். மேற்கொண்டு யாரிடமாவது உதவி கேட்கலாமா என்று எண்ணினான். ஆனால், யார் தான் உதவி செய்வார்கள்.

இந்த உலகில் தான் மட்டும் தனியாய் பயணப்படுகிறோம் என்று நினைத்த வசந்த்,  தொலைக்காட்சியை ஓட விட்டான். ஆக்க்ஷன் காட்சிகள் நிறைந்த படம், துப்பாக்கிகளால் சண்டை நடைபெற்றுக் கொண்டிருந்தது. துப்பாக்கி குண்டுகளின் சப்தம் அறை முழுதும் நிரம்பியது.

"வீல்!" என அலறல் சப்தம். வசந்த் திடுக்கிட்டு எழுந்து அறைக் கதவைத் திறந்தான். .

அமேலியா மயக்க நிலையில் வீழ்ந்து கிடந்தாள்.

தொடரும்...

Episode # 15

Episode # 17

{kunena_discuss:983}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.