(Reading time: 11 - 21 minutes)

அமேலியா - 16 - சிவாஜிதாசன்

Ameliya

சந்தும் ஜெஸிகாவும் மருத்துவமனையின் வளாகத்திற்குள் நுழைந்தார்கள். அவர்களின் நடையில் வேகமும் பதட்டமும் அதிகரித்தது.

தன் செல்பேசியில் மேகலாவை தொடர்பு  கொண்டான் வசந்த்.  "அக்கா எங்கே இருக்க?"

"நாலாவது மாடியில் இருக்கேன். நீ எங்க இருக்க?" மேகலாவின் குரலில் வேதனையின் சாயல் அதிகமாய் தெரிந்தது.

"ஹாஸ்பிடல் வந்துட்டேன்" என கூறி இணைப்பைத் துண்டித்தான் வசந்த்.

சில நிமிடங்களிலேயே மேகலா கூறிய இடத்திற்கு வந்து சேர்ந்தான். மேகலா ஓர் அறையின் வாசலின் எதிரே போடப்பட்டிருந்த இருக்கையில் தனியாக அமர்ந்திருந்தாள். வசந்தைக் கண்டதும் அவளையறியாமல் கண்ணீர் பெருகிற்று.

"அக்கா என்ன ஆச்சு?" வசந்திற்கும் அழுகை முட்டிக்கொண்டு வந்தது.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

வத்சலாவின் "வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

"அம்மாவோட போட்டோ உடைஞ்சி இருந்ததை பார்த்து நெஞ்ச பிடிச்சிட்டு கீழே சரிஞ்சிட்டாருடா. நான் பயந்து உடனே ஹாஸ்பிடல் கொண்டு வந்துட்டேன்"

"அப்பாவுக்கு இப்போ எப்படி இருக்கு?".

"டாக்டர்ஸ் எதுவும் சொல்லலை. ட்ரீட்மெண்ட் நடந்துட்டு இருக்கு"

வசந்த் மேற்கொண்டு எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்தான். ஜெசிகா மேகலாவுக்கு ஆறுதல் கூறிக்கொண்டிருந்தாள்.

 நாராயணன் இருக்கும் அறையில் டாக்டர்ஸ் வருவதும் போவதுமாய் இருந்தார்கள். நேரம் கடந்துகொண்டே இருந்ததே தவிர நாராயணனைப் பற்றி எந்தத் தகவலும் தெரியவில்லை. மணி இரண்டைத் தாண்டி ஓடிக்கொண்டிருந்தது.

அப்போது, நர்ஸ் ஒருவர் அவர்களிடத்தில் வந்து, "டாக்டர் உங்களை பார்க்க விரும்புறார்" என்று கூறி விட்டு அவர்களின் பதிலை எதிர்பாராமல் நாராயணன் இருந்த அறைக்குள் சென்றார்.

வசந்தும் மேகலாவும் ஒருவித பயத்தோடு டாக்டர் அறையின் முன்னே நின்றார்கள். உள்ளே செல்வதற்கு முன் கதவை மெல்ல தட்டினான் வசந்த்.

"உள்ளே வாங்க" அதிகாரமிக்க குரல் அவர்களை அழைத்தது.

முதலில் வசந்த் அறைக்குள் நுழைய அவன் பின்னே மேகலாவும் நுழைந்தாள்.

நாராயணனின் ரிப்போர்ட்டை பார்த்துக்கொண்டிருந்த அந்த நாற்பது வயதைக் கடந்த டாக்டர், தன் மூக்குக் கண்ணாடியின் வழியே அவர்களை ஒரு பார்வை பார்த்தார்.

"உட்காருங்க" அவர் வாயில் இருந்து அந்த சொல் உதிர்ந்ததும் மீண்டும் தன் கவனத்தை ரிப்போர்ட்களில் திருப்பினார்.

தயக்கத்தோடு இருவரும் அவர் முன் அமர்ந்தனர்.

"மிஸ்டர் நாராயணனுக்கு நீங்க எந்த உறவுமுறைனு தெரிஞ்சிக்கலாமா?"

"நாங்க அவர் பிள்ளைகள் டாக்டர்" என்றாள் மேகலா.

"நல்லது. உங்க அப்பாவுக்கு இது செகண்ட் அட்டாக் தானே?"

"ஆமா டாக்டர்"

"முதல் அட்டாக் எப்போ ஏற்பட்டுச்சு?"

"நாலு வருஷத்துக்கு முன்னாடி டாக்டர்"

டாக்டரிடத்தில் சில நிமிட மௌனம் உருவானது.

"அவர் உயிருக்கு ஏதாவது...?" என்று மெதுவாய் இழுத்தான் வசந்த்.

"தற்சமயம் எந்தவொரு அபாயமும் இல்லை மிஸ்டர்.."

"வசந்த்"

"ஆனா..." டாக்டரிடம் வார்த்தை தடைபட்டது.

"என்ன டாக்டர்?"

"இனி அவரை கவனமா பார்த்துக்கணும். மனசளவுல ரொம்பவே பாதிக்கப்பட்டிருக்கார். இன்னொரு தடவை அட்டாக் வந்தா, நிலைமை மோசமாவதற்கு வாய்ப்புகள் அதிகம்"

வசந்தும் மேகலாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

"இனி அவர் வாழப்போற காலத்துல எந்த கஷ்டமும் அவருக்கு ஏற்படாம பார்த்துக்கோங்க"

"இப்போ அவரை நாங்க பார்க்க முடியுமா டாக்டர்?"

"இப்போ தான் சிகிச்சை முடிஞ்சிது. அவர் மயக்கத்துல இருக்காரு. அதனால பொறுமையா இருங்க"

"சரி டாக்டர்" என்று கூறி இருவரும் டாக்டரிடம் விடைபெற்று வெளியே வந்தனர்.

அவர்களுக்காக காத்திருந்த ஜெசிகா, "டாக்டர் என்ன கூறினார்?" என வசந்த்திடம் விசாரித்தாள்.

"தற்சமயம் வரை பிரச்சனை இல்லை"

வசந்த் சொன்ன தோரணையே நாராயணன் என்ன நிலையில் இருக்கிறார் என்று ஜெசிகாவிற்கு கூறிற்று.

மேகலா மௌனமாக இருக்கையில் அமர்ந்தாள். அவளுக்குள் பல கேள்விகள் உருவாகின. தன்னால் தான் அப்பாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டதோ என குற்ற உணர்ச்சியில் குமுறினாள். அமேலியா வந்ததில் இருந்தே அப்பா நிம்மதியிழந்து காணப்பட்டார். அன்று நடந்த நிகழ்வுகள் எல்லாமே அவருக்கு வேதனை தரும் சம்பவங்களாகத்தான் அமைந்தன.

மேகலா வாய்விட்டு கதறி அழுதாள். வசந்தும் ஜெஸிகாவும் அவளுக்கு ஆறுதல் கூறினார்கள். ஆனால், எந்த வார்த்தைகளும் அவளின்  கண்ணீருக்கு தடைபோட முடியவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.