(Reading time: 15 - 29 minutes)

02. இவள் எந்தன் இளங்கொடி - முத்துலெட்சுமி சுப்பிரமணியன்

Love

பூரணசந்திரனின் முழுக்கிரகணங்கள் அந்த இருவழிச்சாலையின் இருபுரங்களிலும் இருந்த அடர்த்தியான மரங்களைத்தாண்டி வழிப்பாதையில் தன் வெண்நிற கதிர்களை வீசிக்கொண்டிருந்தது. இயல்பான வேகத்தை மீறி தன் காரை செலுத்திக்கொண்டிருந்தவனின் மனம் ஒரு நிலையில் இல்லை, மூன்று வருடம் அவன் கட்டிக்காத்த மனதிடம் உடைகிறதோ? என்ற அச்சம் அவனுள் எழுந்தது. “யாரிவள்!” அவள் விழிகளை நேரே சந்திக்கும்போது ஏற்படுகிற உணர்வு அவனை எங்கோ தள்ளியது, “ரொம்ப வலிக்குதா?” அவள் கேட்டது நினைவில் வர புன்னகைத்துக்கொண்டு வெகு நாளைக்குப்பின் தன் காரின் சீரியோ செட்டை ஆன் செய்தான், இரவு நேரத்தில் ஒளிபரப்பப்பட்ட இனிமையான இசையை இரசித்தவாரே காரை இயக்கினான்.

 நகரத்தை விட்டு சற்றே விலகியிருந்த அவனது வீடு நடுநசியிலும் மின்விளக்குகளில் ஒளிர்ந்து கொண்டிருந்தது. தெருவரை விழுந்த அந்த வீட்டின்  வெளிச்சம், இன்னும் அந்த வீட்டின் குட்டிதேவதை “விஷ்ணுப்பிரியா” உறங்கவில்லை என்பதை எடுத்துக்காட்டியது! பாதி உறக்கத்திலிருந்த செக்யூரிட்டி, கேட்டைத்திறக்க, காரை ஷெட்டில் விட்டு தாவி வீட்டின் உள்ளே பறந்தான் சிவா. அவனைக்கண்டதும் தன் பாட்டியின் இடுப்பிலிருந்து இறங்கி துள்ளி ஓடிவந்தவளை அள்ளி மார்போடு அனைத்துக்கொண்டான்.

“விஷ்ணு குட்டி” என்று அவள் கண்ணங்களில் ஏழெட்டு முத்தங்களைப் பதித்தான், அத்தனையையும் வாங்கிக்கொண்டு லேசாக சிணுங்கியவள் அவன் தோளில் சாய்ந்தாள்.

“விஷ்ணுகுட்டி அப்பாவ தேடினியா?”

“ம்ம்.. என்று மேலும் கீழுமாய் தலை அசைத்தாள்!”

“எந்தக்கண்ணு தேடுச்சு?”

“இந்தக் கண்ணு, இல்ல இந்தக் கண்ணு” என்று மெதுவாக தன் இமைகளைத்தொட்டுக் காண்பித்தாள்.

தன் கைகளில் அவளை அள்ளிக்கொண்டு மாடி படிகளை ஏறநினைத்தவன், தன் அம்மாவிடம், “அம்மா, நீங்க சாப்பிட்டீங்களா? இன்னிக்கு கொஞ்சம் லேட் ஆயிடுச்சு, சம்பந்தம் சார் வீடு வரைக்கும் போயிட்டு வர்றேன்.. அதான் லேட்!”

“பரவாஇல்லப்பா, உனக்கு ஆயிரம் வெளி வேலை இருக்கும், இவளை சமாளிக்கிறதுதான் கஷ்டம், ஏழுமணிலேயிருந்து நீ எப்ப வருவன்னு என்ன தொலைச்சு எடுத்துட்டா! நான் சாப்பிட்டாச்சுப்பா, விஷ்ணுவுக்கும் ஊட்டியாச்சு, வழக்கம் போல இரண்டு இட்லிதான் சாப்பிட்டா!”

“அம்மா அந்த காய்ச்சல் மருந்து?”

“அத தான் குடிக்கவே மாட்டிக்கிறா, நீயே கொடித்திரு..!” என்று தன் அறையை நோக்கி மெதுவாக நடந்தாள். இனி விஷ்ணுவின் பொறுப்பு சிவாவின் கைகளில் என்பதுபோல் இருந்தது அவள் செய்கை. தன் படுக்கை அறையைநோக்கி நடந்தாள் சிவாவின் அம்மா செண்பகாதேவி.

இரவு உடைக்குள் தன்னை புகுத்திக்கொண்டு கட்டிலில் சாய்ந்தவன், விஷ்ணுவை உறங்கவைக்க ஏதேதோ கதைகள் சொன்னான், அத்தனை கதைகளிலும் ஒரு தேவதை இருந்தாள், அவள் விஷ்ணுவை தன் கைகளுக்குள் வைத்து பாதுகாத்தாள், சின்னஞ்சிறியவள் தான் கேட்ட கதைகளின் தாக்கத்தில் உறங்கிப்போனாள், கதைகளை பிதற்றியவன் அந்த தேவதையின் முகம் தந்த போதையில் உறக்கமிழந்துப்போனான். இரவு நகர்ந்தது.

திகாலை கடற்கரையின் அழகை இரசித்தவாரே நடந்தாள் தர்ஷினி. எப்போதும் வேகவேகமாய் நடப்பவள், அன்று மார்புக்கு குறுக்கே கைகளைக்கட்டிக்கொண்டு வெகு நேரம் கடலை நின்று இரசித்தாள், பின் மெதுவாக நடந்து வீடு திரும்பினாள், வீட்டிற்குள் அவள் நுழையும்போது, மாணிக்கம் அடுக்களையில் ( சமையலறை ) சமைத்துக்கொண்டே பேசிகொண்டிருந்தார், யாராக இருக்குமென தர்ஷினிக்கு நன்றாக தெரியும்..

“ம்ம் மாணிக் அங்கிள், அப்புறம் சொல்லுங்க.. நீங்க கூப்பிடதும் லஷ்மி ஆன்டி உங்கக்கூட வந்துட்டாங்களா? அப்புறம் உங்க மேரேஜ் எப்படி நடந்துச்சு?” சமையலறை சிலாபில் அமர்ந்துகொண்டு, மாணிக்கத்தோடு அலவலாவிக்கொண்டிருந்தாள் காவ்யா.  நடைபயிற்சிகான ட்ராக் சூட் டிஷர்ட் அனிந்து தலைமுடியை உயர்த்திகட்டி, ஆயாசமாக கதை அளந்துக்கொண்டிருந்தாள்..தர்ஷினி உள்ளே நுழைந்ததைக் கண்டவள், அவளைப்பார்த்து புன்னகைத்துவிட்டு தன் வேலையை மீண்டும் தொடர்ந்தாள்..மாணிக்கம் காவ்யாவிற்கும், தரிஷினிக்கும் காஃபி டம்ப்ளரை நீட்ட, “ஹயையோ அங்கிள் எவ்வளவு முக்கியமான மேட்டர்ல இன்டிரவல் விடுறீங்க..ப்ளீஸ் கன்டினியூ…!” என்றாள் காவ்யா

தர்ஷினி வாசலைப்பார்த்து, “வாங்க சம்பந்தம் அங்கிள்,” என்றுரைக்க

சிலாபிலிருந்து தாவி இறங்கினாள் காவ்யா

“ஐயோ, ஹிட்லர் அதுகுள்ள ரிட்டர்ன் ஆயிட்டாரா?” என்று வெளியே எட்டிபார்த்தவள், அங்குயாருமில்லாததுகண்டு தர்ஷினியைப்பார்த்து முறைக்க…

“ஏண்டி, எத்தன வருஷமா இந்த ஓல்டு லவ் ஸ்டோரியையே கேப்ப? ம்ம்? - தர்ஷினி

“ஓல்டு இஸ் ஆல்வேஸ் கோல்டு மச்சி, சரி பரவயில்ல அப்ப அந்த பிள்ளையார் கோவில் சிவனாண்டிய பத்திய லவ்ஸ்டோரிய  நீ சொல்லு.. நான் அங்கிள்கிட்ட  இந்த ஓல்டு லவ்ஸ்டோரி எதுவும் கேக்கல…” என்று கூறி குறும்பாக சிரிக்க..,

அவள் யாரைப்பற்றி பேசுகிறாள் என்பது புரிந்ததும் காவ்யாவை தர்ஷினி முறைத்தாள்.

மாணிக்கம் அது இளவட்டங்களின் உரையாடலென உணர்ந்ததால் புன்னகைத்துவிட்டு, தன் வேலையை தொடர, இருவரும் காஃபியை உருசித்தவாரே, தோட்டதிற்குள் நுழைந்தனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.