(Reading time: 18 - 36 minutes)

பிரஜைகளே… பிரஜாபதி தட்ச மகாராஜா, அவரது மகள் சதி தேவியுடன் இங்கு வருகை தருகிறார்…..”

மந்திரி அறிவித்ததும், பிரஜாபதி தட்ச மகாராஜா வாழ்க வாழ்க என்ற கோஷங்கள் வானைத் தொட்டன…

பிரஜைகளின் முன் மகளை வர சொன்னவர், “என் பிரஜைகளே, தங்களை எந்த தீய சக்திகளிலிருந்தும் நான் காப்பதற்கு சாமர்த்தியவற்றவன் என தோன்றுகிறதா?... கூறுங்கள்…” என கேள்வி எழுப்ப,

“இல்லை… இல்லை…” என்ற கோஷங்கள் எழுந்தன உடனேயே…

“கடினமான பல சந்தர்ப்பங்களிலிருந்தும் தங்களை நான் காக்கும் ஆற்றல் அற்றவன் என தோன்றுகிறதா?... கூறுங்கள்…”

மறுமுறையும் அவர் கேள்வி எழுப்ப,

“இல்லை… இல்லை…” என்ற பதில்களே வந்தன மக்களிடமிருந்து…

“எனது ஆட்சியின் கீழ் இருக்கும் பிரஜைகளுக்கு யாதொரு பயமும் இல்லை… நீயோ என் மகள்… எனில் உனக்கு எதற்கு பயம்?... உன் அறியாமையால் நீ செய்த செயல்களே உனது பயத்திற்கு காரணம்… அதனால் அதற்கு நான் இன்றே முற்றுப்புள்ளி வைக்கிறேன்…” என்றவர் பிரஜைகளிடம் திரும்பி,

“என் மீது தாங்கள் அனைவரும் வைத்திருக்கும் நம்பிக்கையினைக் கண்டு என் மனம் பரவசமடைகிறது… நீங்கள் அனைவரும் என் சக்தியைப் பற்றி கேள்வியுற்றிருப்பீர்கள்… எனினும் அதனில் உங்களுக்கு ஏதேனும் ஐயங்கள் இருந்தால், அது இன்றே விலகிவிடும்… ஏனெனில் எனக்கு இருக்கும் சக்தியின் ஒரு சிறு துளியை நான் இன்று தங்களுக்கு காட்டவிருக்கிறேன்…” என கூறிவிட்டு மந்திரியை அழைத்தார்…

அவரும் பிரஜாபதியின் அருகே அந்த தாம்பூலத்தை நீட்ட, அதிலிருந்து நெற்கதிர் ஒன்றை எடுத்து, “பஞ்ச பூதங்கள் எவை எவை?...” என சதியிடம் கேட்க,

“அக்னி… வாயு, ஜலம், பூமி மற்றும் ஆகாயம்…” என்றாள் அவள்…

“இவை அனைத்துமே தனித்தனி மகத்துவம் வாய்ந்தவை அல்லவா?...”

“ஆம் தந்தையே… இவை ஐந்துமே மகத்துவம் பெற்றவை… மேலும் இவற்றைக் காட்டிலும் ஆற்றல் மிக்கது எவையும் கிடையாது…”

“நல்லது… இப்பொழுது அந்த பஞ்ச பூதங்களும் உன் தந்தையின் முன்னால் அவற்றின் தனித்தன்மையை வெளிப்படுத்தும்…. அப்பொழுது அறிந்து கொள்வாய் நீ, உன் தந்தையான இந்த பிரஜாபதியின் ஆற்றலை… என்னை விடவும், சக்தி வாய்ந்தவன் இப்பிரபஞ்சத்திலேயே இல்லை என நீ உணரும் நேரம் தொலைவில் இல்லை மகளே… உனது பயமும் அகன்றிடும் அக்கணமே…”

அவர் மகளிடம் உரைத்துமுடித்துவிட்டு, அந்நெற்கதிரை, ஒரு பணியாளிடம் கொடுத்து, அந்த பரந்து விரிந்த இடத்தின் நடுவே, ஒரு மேசையின் மீது வைக்க சொல்ல, அவனும் வைத்துவிட்டு அகல, பிரஜாபதி தன் கைகளை காட்ட, ஓம் என்ற மந்திரங்கள் அங்கிருந்த அந்தணர்கள் முழங்கியதும், எங்கிருந்து வந்ததென்றே தெரியாமல், அக்னி பாய்ந்து வந்து அவரின் முன் வணங்க,

“எதையும் நொடியினில் சாம்பலாக்கிடும் அக்னி… தட்ச பிரஜாபதியான நான் உனக்கு ஆணையிடுகிறேன்… அங்குள்ள நெற்கதிறை உன் சக்தியால் எரித்து பஸ்பமாக்கிவிடு…”

அவர் ஆணையிட்ட மறுகணமே, தன் முழு சக்தியையும் வெளிக்கொணர்ந்து அக்னியானவன் முயல, நெற்கதிர் அப்படியே இருந்தது எந்த சேதாரமும் இல்லாது…

அனைவரும் அப்படியே திகைத்து நிற்க, அடுத்து, நிலத்தை அழைத்தார் பிரஜாபதி… அதுவும் தன் முழு சக்தியை உபயோகப்படுத்தி அதனை இருந்த தடம் தெரியாமல் அழித்துவிட முயல, ஏனோ நிலத்தினால் எதுவுமே செய்ய இயலவில்லை…

“பார்த்தாயா மகளே… தனித்தனி மகத்துவம் வாய்ந்த தத்துவங்களின் ஆற்றலை… அவைகளினால் எனது இந்த சாதாரண நெற்கதிரை கூட ஒன்றும் செய்திடமுடியவில்லை… எனில் என் மகள் நீ… உனக்கு பயத்தை, துன்பத்தை விளைவிக்கும் ஆற்றல் யாருக்கு இருந்திடக்கூடும்?... யாருக்கும் அத்தகு துணிவும் இல்லை, சக்தியும் இல்லை…”

“எனில், அந்த மகாதேவனாலும், அவரின் ஆட்களாலும் எனக்கு துன்பம் நேர்ந்திடாதல்லவா தந்தையே…”

“உன் நந்தவனத்தில் உள்ள மலர்களை அழித்துவிட்டால், உன் மனநிலை எப்படி இருக்கும்?...”

“மிகுந்த மனவேதனை ஏற்படும்…”

“ஆக, உனக்கு வேதனை அளிக்க வேண்டுமானால், அந்த நந்தவனத்தை அழித்திட்டால் போதுமானது… அப்படித்தானே… எனில் எனக்கு வேதனை தரவேண்டுமானால், உனக்கு துன்பம் கொடுத்திட்டால் போதும்…. நான் மன வேதனைக்குள்ளாக…”

“தந்தையே……”

“ஆம் மகளே… இது அந்த மகாதேவனின் சூழ்ச்சி…”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.