“தட்சரின் மகா மண்டல சபைக்கான அழைப்பு விடுத்திருக்கிறாரே… என்ன காரணமாக இருக்கும்?...”
அத்ரி மகரிஷி யோசனையில் ஆழ்ந்திருக்க, அவருக்கு வணக்கம் தெரிவித்தபடி அங்கே வருகை தந்தார் ததீசி மகரிஷி…
“தங்களின் முகத்தினில் சிந்தனைக் கோடுகள் தெரிகிறதே…”
“ஆம் ததீசி மகரிஷி… தட்சரிடமிருந்து மகா மண்டல சபைக்கான அழைப்பு வந்திருக்கிறது… சென்ற முறை சிவலிங்க பூஜையினை அகிலத்தில் மேற்கொள்ளக்கூடாது என்று கூறியது நினைவில் உள்ளது…”
“அவர் எவ்வளவு பிரயத்தனம் செய்தாலும் அதனை மட்டும் அவரால் மேற்கொள்ளவே முடியாது… அதை நடைமுறைப்படுத்திடவும் முடிந்திடாது….” என்றார் ததீசி மகரிஷி உறுதியுடன்…
“நாம் பூஜித்து போற்றும் அந்த மகாதேவர் ஒருபுறம்… இன்னொரு புறமோ மகாதேவரை பூஜிக்கக்கூடாது என்று கூறும் தட்ச மகாராஜா ஒருபுறம்… அவரின் புதல்விகளான ரேவதி மற்றும் ரோகிணியை எனது புதல்வன் சந்திரனுக்கு மணமுடித்திருக்காவிட்டால், நானும் இந்த சபைக்கான அழைப்பினை ஏற்காமல் இருந்திருப்பேன்… எனினும் இந்த முறை எனக்குப் பதிலாக சந்திரனை மட்டும் அனுப்பி வைக்கலாம் என எண்ணியிருக்கிறேன்…”
அத்ரி மகரிஷி கூறியதும், அப்போது அங்கு வந்த அவரின் மனைவி அனுசுயா, ததீசி மகரிஷியை வணங்கிவிட்டு, “வேண்டாம்… தாமே சென்று வாருங்கள்… அவனை அங்கு அனுப்புவது எனக்கு சரி என்று தோன்றவில்லை…” என்றார் தம் கணவரைப் பார்த்து…
அவரோ மகன் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு பழகிக்கொள்ள வேண்டும் என கூற,
அனுசுயாவோ ததீசி மகரிஷியிடம், “தாங்களாவது கூறுங்கள்… சந்திரனை அங்கு அனுப்ப என் மனம் ஏனோ ஒப்பவில்லை…” என கூற,
“தாங்கள் கவலை கொள்ளாதீர்கள்… நடக்கும் சபை அகிலத்திற்கு நல்லதையே நிகழ்த்தும்… பல மாற்றங்களும் ஏற்படலாம்… யார் அறிவார்?... சந்திரனே கூட அந்நல்லதுக்கு காரணமாக மாறலாம்…” என கூற,
அனுசுயாவோ, “சிவ-சதியின் இணைவிற்காக நமது மகனை சங்கடத்திற்குள்ளாவது சரியா?...” என தம் கணவரிடம் கேட்க,
“ஒரு பெரும் நிகழ்வு நிகழ்வதற்கு நம் மகனின் பங்களிப்பு அவசியமாகிறது… அதற்காக நீ பெருமை தான் கொள்ள வேண்டுமே தவிர, இப்படி கலங்கி நிற்க கூடாது…” என்றார் அத்ரி மகரிஷியும்…
“உலகில் பிறந்திடும் ஜீவராசிகளின் விதி, அவரவர் ஜனித்த வேளையே எழுதப்பட்ட ஒன்று.. நடப்பவை எதுவாகிலும் நல்லதே நடந்திடும் தாயே… தாம் கவலை கொள்ளாதீர்கள்…”
ததீசி மகரிஷியும் அவருக்கு நம்பிக்கை அளித்தார்…
அதே நேரம், சந்திரன், தன் மனைவி ரோகிணியோடு, தேரில் வர, அவனது முகத்தில் இருந்த சிந்தனைகளைக் கண்டவள்,
“தங்களின் முகத்தில் வாட்டம் ஏன் சுவாமி?...” என வினவ
“உன் தந்தையின் அழைப்பும், திடீரென நிகழப்போகும் சபைக்கான காரணமும் அறியவில்லை… அதனால் தான் யோசனையில் ஆழ்ந்துள்ளேன்…” என்றான் சந்திரன்…
“காரணமின்றி தந்தை எதையும் நிகழ்த்தமாட்டாரே…”
‘ஆம்… உன் தந்தை காரணமின்றி எதையும் செய்ய மாட்டார்… அவர் என்ன நினைக்கிறார் என எண்ணிப்பார்த்திடவும் யாராலும் முடியாது…”
“தந்தை இந்த சபையில் தங்களுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார்… எனில் இதில் அவர் தங்களுக்கும் ஒரு மகத்தான ஸ்தானத்தை அளித்திருக்கிறார்… அது பெருமையான விஷயம் அல்லவா?...” என்றவள் அவன் புன்னகைப்பதை பார்த்துவிட்டு,
“போகும் வழியில், நாம் ரேவதி அக்காவையும் அழைத்துக்கொண்டு தானே போகிறோம்…”
“ஆம்… ஆனால் அதற்கு முன்னால் நாம் எனது பெற்றோரை சந்திக்க வேண்டும்…” என்றதும் அவளும் சரி என்றாள்…
இருவரும் அத்ரி மகரிஷியின் இருப்பிடம் வர, மகனைக் கண்டதும் புன்னகை மலர்ந்தது அனுசுயாவிடம்…
அந்த புன்னகை சற்று நேரத்திலயே மறைய, அவரின் முகத்தினைப் பார்த்துவிட்டு, அவன் அவரிடம் என்ன என்று வினவ, ஏதுமில்லை என்றார் அத்ரி மகரிஷி…
“என்ன நேர்ந்தது தாயே… என்னைப் பற்றிய கவலையா?...”
அவன் கேட்டறிய,
“பெற்றவளுக்கு என்றுமே பிள்ளைகள் மீது கவலைகள் இருக்கத்தான் செய்யும்… அது இயற்கை… நீ அதனை எண்ணி கலங்காமல், மகா சபைக்கு சென்று வா… மகாதேவரின் அருள் என்றும் உன்னுடன் இருக்கும்… அவர் உன்னை இரட்சித்து அருள்வார்…”
அத்ரி மகரிஷி வாழ்த்தி விடை கொடுக்க, அனுசுயாவோ, மகனுக்கு புன்னகை மயமாக விடைகொடுத்தார்…
அவர்கள் இருவரும் சென்றதும், “அவனுக்கு சங்கடம் ஏதேனும் நிகழப்போவதாக இருந்தால் அதனை அவனுக்கு உணர்த்திவிடுங்கள் சுவாமி…”
அனுசுயா வேதனையுடன் கூற,
“உன் மனதின் நிலையை என்னாலும் அறிய முடிகிறது… அவன் எனக்கும் புதல்வனே…” என்றார் அத்ரி மகரிஷியும்…
“எனக்கென்னவோ மனது சரியில்லை…”
“உன் கவலைகள் அனைத்தையும் மகாதேவரிடத்தில் ஒப்படைத்துவிடு… சந்திரனுக்கு துன்பம் நேராமல் அவர் காத்தருள்வார்… இன்று வரை நம்மை காப்பவரும் அவர் தானே…”
அத்ரி மகரிஷி தெளிவுடன் கூறிவிட்டு, அங்கிருந்த சிவலிங்கத்தை வணங்கிட, அவரைத் தொடர்ந்து, அனுசுயாவும் சிவலிங்கத்தினை வணங்கினார்…