(Reading time: 8 - 16 minutes)

தீபன் அவளை நோக்கி நீ என்ன வேண்டுமானாலும் முடிவு எடு, நான் எப்போதும் உன் பக்கம் தான் என்பது போல் புன்னகைக்க அது தந்த ஆறுதலை என்னவென்றுச் சொல்ல?, அடுத்து நிற்பது ஜீவன் ஆனால் அவன் கண்களில் ஏன் அந்த கலக்கம்? எந்த விஷயமானாலும் கலகலக்க வைப்பாயேடா? இப்போது என்னடா ஆயிற்று?

அடுத்து நிற்பது யார்? தன்னைக் கவர பிரத்தியேகமாக எதையும் செய்ய வேண்டாமல் வேலையின் நடுவில் சுறு சுறுப்பாய் பணியிடம் நடைப் பயிலுவதையும், கேள்வி கேட்பவருக்கு சன்னமாய் புன்னகைச் செய்து ஒரு வார்த்தை அதிகமாய் பேசினாலும் வரி நியமித்து விடுவார்கள் என்பது போல அளவாய் பேசுவதிலும், நிமிர்ந்து நின்று சட்டையை மடித்து விட்டாலே போதும் புஜபலம் காண்பித்து மனதை அள்ளுவதிலுமாக இவளின் உள்ளத்தை கொஞ்ச கொஞ்சமாய் குத்தகைக்கு எடுத்தவனல்லவா? செய்வதெல்லாம் செய்து விட்டு உனக்கு அங்கென்ன வேலை? என்னிடம் கேள்விகள் பல கேட்கிறார்களே? வா வந்துப் பதில் சொல் என அவள் உள்ளத்தால் அழைப்பு விடுத்தாள்.

ரூபன் வெகுவாக வருந்திக் கொண்டு அங்கு தலைக் குனிந்து நின்றிருந்தான். அவன் வருத்தம் அனிக்காவை இப்படியொரு இக்கட்டில் மாட்டி வைத்து விட்டோமே என்பதாக இருந்தது. திருமணம் ஆகிவிட்டது என்று தான் சொன்னவுடன் காவலர் சென்று விடுவார் என்கின்ற அவன் அனுமானம் பொய்த்துப் போயிருந்ததே அதன் காரணம். இப்போது அவளை தான் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தி விட்டோமோ? நேர் வழியில் தன்னுடைய காதலை நிறைவேற்ற எவ்வளவு முயன்றும் கடைசியில் இப்படி எல்லோரும் முன்பாக தலை குனியும் விதமாக ஆகி விட்டதே? ஏற்கெனவே தற்கொலை முடிவிற்கு வந்திருந்தவள் இதனை எப்படி எடுத்துக் கொள்வாளோ? அவளுக்கு இது இன்னுமொரு அதிர்ச்சியாக அமைந்திருக்கும். என்னச் செய்வது? என செய்யும் வழியறியாமல் பெரும் திகைப்பில் இருந்தான்.

சில நிமிடங்கள் ஆகியும் சுற்றும் முற்றும் பார்த்தவளாக பதில் பேசாமல் இருப்பவளைப் பார்த்து கவலை மேலிட பிரபா அருகில் வந்து உடல் நலம் விசாரிக்கவும், முகத்தை வருடவும் செய்தாள். அனிக்காவிற்க்கும் பல நாட்களாக தான் அனுபவித்த மன அழுத்தம், தூக்கமின்மை மற்றும் உடலின் பால் காட்டிய அலட்சியம் எல்லாம் ஒன்றுச் சேர்ந்து மிகவும் சோர்வாக இருந்தது. அண்ணியிடம் ஒன்றும் பிரச்சினையில்லை என்று பதிலிறுத்தாள்.

உடனே மறுபடி காவலர் கேள்வி வெளிப்பட்டது. அவருக்கு அவர் வேலை முக்கியமாயிற்றே. பொய் சொல்ல விரும்பாதவள் உண்மையைச் சொன்னால் என்னாகும்? தன் தந்தையின் கண்களில் தெரியும் ஆவேசமே பதில் சொன்னது ரூபனை மண்ணோடு மண்ணாக சாய்க்காமல் அவர் கோபம் தீராது என்பது.

அதை விடுத்து ரூபனுக்கு ஆதரவாக பொய் சொன்னால் என்னவாகும்? இதோ என்னைச் சுற்றி இருக்கும் என் வீட்டினர் அனைவருக்கும் நான் அன்னியப்பட்டுப் போவேன். அப்படி நான் எதையாவது செய்து வைத்தால் அதற்கு பின்னால் ஒரு நொடியாவது என்னைக் குறித்து எண்ணுவார்களோ இல்லை முற்றிலுமாக என்னை தலை முழுகி விடுவார்களோ? என்னாகுமோ? யாருக்கு தெரியும்? மறுபடி நான் இவர்களை பார்க்க முடியுமோ? முடியாதோ அம்மாவை, அப்பாவை, அண்ணா, அண்ணியை, குட்டி ஹனியை எல்லோரையும் பிரிய நேருமே? ஆமாம் நீ இவர்களை பிரிவது குறித்து இதற்கு முன்னால் எப்போதும் முடிவெடுக்காதவள் தானே? என அவள் மன சாட்சி நேரம் காலம் இல்லாமல் அவள் தற்கொலை முயற்சியை இடித்துக் காட்டியது. குடும்பமா? காதலா? என்னும் கேள்விக்கு பதில் சொல்ல அவள் மிகவே திணறினாள்.

சொல்லும்மா? உங்க ரெண்டு பேருக்கும் மேரேஜ் ஆகிடுச்சா? பொறுமையின்றி காவலர் கேட்க இம்முறை தயங்காமல் பதில் வந்தது.

ஆம் ஆயிற்று.

எனக்காகவா தலைக் குனிந்திருந்த ரூபன் நிமிரா விட்டாலும் உள்ளம் அவனிடம் கேட்டது.

எப்போ மேரேஜ் பண்ணிகிட்டீங்க? காவலர் தொடர்ந்தார்.

ஃபிஃப்த் டிசம்பர்

சட்டென்று தலை நிமிர்ந்தான் ரூபன், இது அவன் அவளிடம் கடற்கரையில் காதல் சொன்ன நாளல்லவா?

அப்படின்னா மேரேஜிக்கு அப்புறம் சேர்ந்து வாழலியா? 

காவலரின் கேள்வி ரூபனை சுருக்கென்று தைத்தது. இதென்ன இப்படி ஒரு நிலைமையில் இவளைக் கொண்டு வந்து நான் நிறுத்தியிருக்கின்றேன். இதற்கு என்னப் பதில் சொல்வாள் அவள். சட்டென்று அவள் மறுப்பக்கம் போய் நின்றுக் கொண்டான். அவள் கையைப் பற்றியவனாய்,

ஏன் சார் இன்னும் என்னோட ஃபேமிலி ஹிஸ்டரி எல்லாம் கேட்பீங்க போலிருக்கு. உங்களுக்கு எங்க மேரேஜ் பற்றி தான கேட்கனும்னு இருந்திச்சி. கேட்டாச்சில்ல, டவுட் தீர்ந்திடுச்சா. அவளுக்கு உடம்புக்கு சரியில்ல சர் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க விடுங்க ப்ளீஸ் என்றான்.

அங்கிருந்து முகம் கன்றியவறாக தன்னை திரும்பவும் பார்க்காதவராக கடந்துச் சென்ற தந்தையையும், கோபத்தில் வெடுவெடுத்தவனாக மனைவியை தரதரவென்று இழுத்துச் செல்லும் அண்ணனையும் கண்ணீரோடு பார்த்துக் கொண்டிருந்தாள் அனிக்கா.

குட்டி எபிசோட்தான். ப்ளீஸ் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க ஃபிரண்ட்ஸ்

தொடரும்

Episode # 27

Episode # 29

{kunena_discuss:970}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.