(Reading time: 11 - 22 minutes)

29. அமிழ்தினும் இனியவள் அவள் - ஜான்சி

Amizhthinum iniyaval aval

சோர்வாக மிகச் சோர்வாக அந்த மூவரும் தம் வீட்டை அடைந்திருந்தனர். தாமஸ், கிறிஸ், பிரபா இவர்களுக்கு பேசுவதற்க்கு வார்த்தைகளில்லாத நிலைமைப் போல வெறுமையாக இருந்தது. தன் அகங்காரம் தூள் தூளாகி, தன்னை அனைவரும் பார்த்து கெக்கேபிக்கேவென இழிவுப் படுத்தி சிரிப்பது போல ஒரு எண்ணம் பரவ உள்ளுக்குள்ளே கூசிப் போனார் தாமஸ்.

மகள் சொன்னது பச்சைப் பொய் என்பது அவருக்கும் தெரியும். எதற்காக சொன்னாளாம்? அந்த ரூபனை போலீஸிடமிருந்து காப்பாற்றவா? அவ்வளவு கரை காணாத காதலா அவன் மீது? பெற்று வளர்த்த என்னை விட அவன் அவளுக்கு முக்கியமாகப் போய் விட்டானா? அவ்வளவு தானா பெண் பிள்ளையின் அன்பு. எல்லோரும் சொல்வார்களே பெண் பிள்ளை மீது அதிகம் பாசம் வைக்காதே பின்னொரு நாள் தகப்பனை எட்டியும் பாராமல் கணவன் வீட்டில் ஐக்கியம் ஆகி விடப் போகிறவர்கள் என்று, இப்போது அதைத் தான் தனக்கு அட்சரம் பிசகாமல் நிறைவேற்றி விட்டாள் என் மகள். கசந்த முறுவல் ஒன்று இழையோடியது அவரது முகத்தில்.

கிறிஸ் மனைவியின் மீது கடும் கோபத்தில் இருந்தான். தன் தந்தையின் நிலை பார்த்து அவனுக்கு தாளவில்லை. ஒருபோதும் அவரது வாடிய முகத்தை பார்த்திராதவன் என்பதால் நிகழ்ந்த அனைத்திற்கும் மனைவியையே காரணமாக்கி அவள் முகத்தை எட்டியும் பார்த்திருக்கவில்லை.

பிரபாவின் நிலையையோ சொல்லி விட இயலாது. தன்னுடைய பிறந்தகத்திற்கு விஷயம் தெரிய வரும் போது புகுந்த வீட்டில் கூட இவளை ஒரு வேளை ஏதாவது சொல்லாமல் விட்டு விட வாய்ப்பு இருக்கின்றது. ஆனால், அவள் அம்மாவும், ஏனையோரும் இவளை கேள்விகள் கேட்டு ஒருவழி செய்து விடுவார்களே பெரும் கலக்கம் அவளிடத்தில்.

அனைவரும் கலைந்தது ஹனியின் குரலில் தான்.

டம்பி இங்க பாரு……என்றவளாக அவள் ராபினுக்கு தன்னுடைய விளையாட்டுச் சாமானகளையெல்லாம் எடுத்து காண்பித்துக் கொண்டிருந்தாள். அவளூக்கு "த" வராது

“பெரியப்பா தண்ணி எடுத்துக்கோங்க” என்றவளாக ப்ரீதா அந்த நேரம் மிக முக்கியமாக தேவைப்பட்ட குளிர் நீரை அவர்முன் வைத்தாள். ட்ரேயிலிருந்த மற்ற கிளாஸ்களையும் கிறிஸ் மற்றும் பிரபா முன் வைத்தாள்.

ஹனி என்று இதுவரை கவனிக்காமல் விட்டிருந்த மகளை நோக்கி பிரபா கவனம் திருப்பவும்.

நான் பாப்பாக்கு ஸ்னாக்ஸ் கொடுத்திட்டேன் அண்ணி என்று அவள் பதிலிறுத்தாள். பின்னாக வந்த தீபன் நான் தான் ஹனியை ஸ்கூல்லருந்து கூப்பிட்டு வந்தேன். அத்தைக்கு துணையா அம்மாவை இங்க தான் விட்டுட்டு போனேன் என்றவனாய் அவர்கள் கூடவே அமர்ந்தான். நிகழ்ந்தவைகளால் எக்கச் சக்க கோபத்தில் இருந்தாலும் கூட தீபனையோ ஃப்ரீதாவையோ ஒன்றும் சொல்லவியலாத நிலையாக இருந்தது.

மகளைக் காண வருவதாகச் சொன்ன சாராவை வர வேண்டாமென்றுச் சொல்லிச் சென்ற தாமஸ் எண்ணாததை அல்லவா தீபன் செய்திருக்கிறான். எல்லோரும் ஒரேவிடம் கவனம் செலுத்த வீட்டிலிருக்கும் சாராவையும், ஹனியையும் குறித்து அவர்கள் செலுத்தாத கவனத்தை பொறுப்பாக நிறைவேற்றிய தீபனை அவமானப் படுத்துவதை விட கீழான செயல் என்று வேறெதுவும் இருக்க முடியுமா? இதற்குத் தான் சொந்தங்கள் வேண்டுமோ?

கிச்சனில் குக்கர் சப்தம் எழுப்பவே சென்று அணைத்து வந்த ஃப்ரீதா. சமையல் எல்லாம் ஆயிடுச்சு நேரத்துக்கு சாப்பிடுங்க என்று புன்முறுவல் செய்தாள்.

அம்மா எங்க? தீபன் கேட்க

“அனி ரூம்ல பெரியம்மா இருக்காங்க அங்கே தான் அத்தையும் போயிருக்காங்க” என்றாள்.

ப்ரீதா, பிரபா மற்றும் சிறு பிள்ளைகள் விடுத்து அனைவரும் மாடிக்கு விரைந்தனர்.

தாமஸ் தன் மகளின் அறைக்குள் நுழைந்தார். அழுது களைத்து இந்திராவின் அணைப்பில் இருக்கும் மனைவியைப் பார்க்கவே நெஞ்சம் கனத்தது. மகள் அறையில் மகள் இல்லாத வெறுமை அதை விட பலமாக தாக்கிற்று.

மனைவியின் கண்ணில் கண்ணீர் கோடுகள் எதற்காகவாம்? சாராவின் விழிகள் தன் கரத்தையே நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தது. அவர் கரங்களில் இருந்தது என்ன?

அம்மாவின் கரத்தை திறந்தவன் அதிர்ச்சியில் உறைந்தான், வழக்கமாக தாமஸ் எடுத்துக் கொள்ளும் தூக்க மாத்திரைகள் நிறைந்த பாட்டில் அது. அதனோடு அந்த காகிதம் என்ன?

கிறிஸ்ஸை முந்திய தாமஸ் அக்காகிதத்தை நடுங்கும் விரல்களோடு எடுத்துக் கொண்டார்.

மகளின் அழகான கையெழுத்து, வருடாவருடம் வீட்டிலிருக்கும் ஒவ்வொருவர் பிறந்தநாளைக்கும் அவள் வண்ண வண்ண காகிதங்களால் அலங்கரித்து வாழ்த்து எழுதி தரும் போது மட்டுமே வாசித்த கையெழுத்து. இப்போது அப்படி என்ன எழுதியிருக்கிறாளாம். திறந்து வாசிக்கும் முன் கை நடு நடுங்கியது தாமஸிற்கு. ஏதோ தற்கொலை செய்துக் கொள்வதாக மகள் சொன்னதாக அவரும் பிறர் பேசக் கேட்டிருந்தாலும், அதற்கு அவர் அவ்வளவாக முக்கியத்துவம் கொடுத்திருக்கவில்லை.

அவரைப் பொருத்தவரை மகள் இன்னும் விளையாட்டுப் பிள்ளைதான். உண்மையாகவே இப்படியொன்றுச் செய்ய அவளால் இயலாது. ஏதோ பொய்யாக கதைக் கட்டுவதாக எண்ணி அந்த விபரத்தை அவர் காது கொடுத்தும் கேட்டிருக்கவில்லை. இப்போது இது என்ன காகிதம் அதுவும் அவருக்கே தெரியாமல் அவரது அறையினின்று அவளறைக்கு மாறிய தூக்க மாத்திரை பாட்டில் சகிதமாக.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.