16. வானவிழியழகே - நிஷா லக்ஷ்மி
ஊஞ்சலில் அமர்ந்து வேகமாக ஆடிக்கொண்டிருந்தாள் அவந்திகா.அவள் மனதில் பல சிந்தனைகள்.ப்ரொஜெக்ட் ரெவியூவிற்கு செல்ல வேண்டும்.அடுத்து வேலைக்கு செல்வதா இல்லை நிரேஷுடன் நடனப்பள்ளியில் ஓர் அங்கமாக மாறிவிடுவதா என்று தான் யோசித்துக் கொண்டிருந்தாள்.
குழந்தை என்ற ஒன்றிற்காக உருகிய போதும்.நிரேஷின் காதலில் அளவுகடந்த நம்பிக்கை ஏற்பட்ட போதிலும்,எதிர்காலத்தில் அவனையே துணையாக்கிக்கொள்ளலாம் என்ற எண்ணம் ஏற்பட்ட போதிலும்,இதோ இக்கணம் அவனுடன் சேர்ந்து வாழ அவள் விரும்பவில்லை.
காதல்,குடும்ப வாழ்க்கை என்று ஆசைப்பட்டு ஒருமுறை வாங்கிய அடி போதும்.இனியொரு முறை அவசரப்பட்டு இதுபோன்ற சிக்கல்களில் மாட்டிக்கொள்ளக் கூடாது என்பதில் மட்டும் உறுதியாக இருந்தாள்.
மீண்டும் படத்தில் நடிக்கலாம் என்ற ஆசை மனதில் துளிர்த்துவிட்டிருந்தது.எந்த நேரத்திலும்,எந்த நொடியிலும் நிரேஷ் தனக்காக எதுவும் செய்வான் என்ற நம்பிக்கை,அதோடு அவளுக்கும் தன் திறமையின் மீது அளவுகடந்த நம்பிக்கை இருந்தது.
நடிப்புக்காக என்று இருக்கும் பள்ளியில் சில காலம் பயிற்சி பெற்றிருந்தாள்.பதின்ம வயதில் நடிப்பின் மீது ஏற்பட்ட அளவுகடந்த காதலால் பலவற்றையும் கற்றுக்கொண்டிருந்தாள்.
எல்லாருக்கும் எல்லாமும் தெரிந்திருந்தாலும்,எல்லோராலும் முதல் இடத்தைப் பிடித்துவிட முடியாது என்பதை அறிந்து வைத்திருந்தவளால்,கொஞ்சம் போராடினால் வெற்றி கிடைக்கும் என்ற எண்ணத்தை மட்டும் மாற்றிக்கொள்ள முடியவில்லை.
ஒன்றை அவளுக்கு பிடித்துவிட்டது என்றால்,முழுமூச்சுடன் போராடி அதை வெற்றிபெற்றுவிட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவள்.
இப்போது அவள் ஆடிக்கொண்டிருக்கும் ஊஞ்சலின் வேகத்தை விட அவளது எண்ண ஓட்டம் வேகமேடுத்துக் கொண்டிருந்தது.
எல்லாருக்கும் இருக்கும் கனவைப் போல அவளுக்கும் ஒரு கனவு இருந்தது.அதை நிறைவேற்றிக்கொள்ள வாய்ப்பு அவ்வளவு எளிதாக கிடைக்கும் என்று அவள் நினைக்கவேயில்லை.
நிரேஷை பலமுறை தொலைக்காட்சியில் பார்த்திருந்தாலும்,தூரத்தில் இருந்து பார்க்கும் வாய்ப்பு ஓரிருமுறை கிட்டியிருந்தாலும்,அவ்வளவு நெருக்கமாக, நேரடியாக பார்க்கும் வாய்ப்பு அன்று தான் அவளுக்கு கிட்டியது.
பிரபல நடிகருக்கு விருது வழங்கும் விழா.
சிறப்பு விருந்தினராக இவனும் வந்திருந்தான்..விமான நிலையத்திலிருந்து அரங்கிற்கு செல்லும் வழியில்,சிக்னலுக்காக காத்திருந்த வேளையில் பிரபல நடிகர் வேண்டுமென்ற கார் கண்ணாடியை திறந்துவிட்டுக்கொள்ள,அதற்குள் ஒரு கூட்டமே அவரிடம் ஆட்டோகிராப் வாங்கவும், போட்டோ எடுத்துக்கொள்ளவும் கூடிவிட்டிருந்தது.
அதே காரில் அமர்ந்திருந்த நிரேஷை யாரும் கண்டுகொள்ளவில்லை.எப்போதோ ஒருமுறை டிவியில் தோன்றுவான்.மற்றபடி திரைக்குப் பின்னால் தானே அவனது வேலை.
யாரும் ஆட்டோகிராப் வாங்க தன்னிடம் வரவில்லையே என்று வெந்து நொந்துகொள்ளும் அளவிற்கு அவன் இல்லை.அனைத்தையும் அலட்சியமாக கடந்துவிடுவான்.
ட்ராபிக் வேறு அதிகமாகிவிட்டிருக்க...யாரோ ஒரு பெண் கூட்டத்தை மீறி கையசைப்பதை உணர்ந்து,தன்னையும் அறியாமல் எட்டிப்பார்த்திருந்தான்..
இவன் பார்த்துவிட்டான் என்ற மகிழ்ச்சியில் கூட்டத்தைப் பொருட்படுத்தாமல் உள்ளே நுழைந்து...”ஹைய்யோ...மாஸ்டர்”என்று அவந்திகா கத்திய கத்தலில் ஒட்டுமொத்த கூட்டமுமே ஸ்தம்பித்துப் போனது.
நிரேஷ் தன்னையும் அறியாமல் மென்னகை புரிந்து காரை விட்டு இறங்கியிருந்தான்..
“ஒரே ஒரு..ஒரே ஒரு..போட்டோ”என்றவள் அவனது சம்மதத்தையும் கேட்காமல் அவசரமாக போட்டோ எடுத்துக்கொண்டவள்...
“உங்களை டெல்லில டான்ஸ் ஸ்கூல்ல பார்த்திருக்கேன்.அப்போ பேசவே முடியலை..ஒரே தடவை..ஒரே ஒரு தடவை உங்களோட டான்ஸ் ஸ்கூல் உள்ள வர எனக்கு பெர்மிஷன் கிடைக்குமா..ப்ளீஸ்..ப்ளீஸ்”என்று கெஞ்சவே தொடங்கியிருந்தாள்.
அவனது நடனப்பள்ளியில் அவ்வளவு சீக்கிரம் உள்ளே நுழைந்துவிட முடியாது.மிகவும் பணக்காரர்கள் மட்டுமே உள்ளே நுழைய முடியும்.அதற்கும் சில காலம் காத்திருக்க வேண்டும்.திறமை இருந்தாலும்,சில பல சோதனைகளுக்குப் பின் உள்ளே நுழைய அனுமதி தரும்போது மாதங்கள் கடந்திருக்கும்..மற்றபடி வேறு யாராலும் உள்ளே நுழைந்துவிட முடியாது.
இவள் ஒருமுறை ஆசையாக பார்த்துக் கொண்டிருக்கும் போது,அவளது தோழி நீகா,”நீயெல்லாம் உள்ள வர முடியாது”என்று எள்ளலாக கூறிவிட்டு சென்றிருந்தாள்.