(Reading time: 8 - 16 minutes)

28. அமிழ்தினும் இனியவள் அவள் - ஜான்சி

Amizhthinum iniyaval aval

டந்த சில நாட்களாக தன்னுடைய வாழ்க்கையில் நிகழ்ந்துக் கொண்டிருப்பவைகளை நினைத்து மலைத்துப் போயிருந்தாள் அனிக்கா. அதிலும் கழுத்தில் இருந்த தாலியை எண்ணி திகைத்துப் போய் விட்டாள். ஒரு பெண்ணின் கழுத்தில் தாலி அனிவிப்பது என்ன மிக சாதாரண ஒரு விஷயமா? ஆணும் பெண்ணுமான இரண்டு தனிப்பட்ட நபர்கள், தங்கள் உயிரோடும் , உணர்வோடும் இணைந்து வாழ் நாள் முழுமைக்கும் மேற்கொள்ளப் போகும் பயணத்தின் அடிப்படை அல்லவா?

திருமணம் அது குறித்து பெரிதளவில் அனிக்காவிற்கு கற்பனைகள் இல்லையாயினும் தன் அக்கம் பக்கத்தினர், குடும்பத்தினருக்கு, தோழிகளுக்கு நிகழ்ந்தவைப் பார்த்து இப்படி எல்லோரையும் போல எனக்கும் திருமணம் நிகழும் எனும் மிகச் சாதாரண எதிர்பார்ப்பு அவளுக்கு உண்டே.

தனக்கு உணர்வில்லாத நேரம் கழுத்தில் தாலியை வாங்கிக் கொண்டால் அதன் மதிப்பு மாறாமல் இருக்குமா? திரைப்படத்தில் கதாநாயகன் கதாநாயகிக்கு கட்டாயத் தாலிக் கட்டும் சீன் பார்க்க நேரிடும் போதெல்லாம் இதற்கு இத்தனை ஆர்ப்பாட்டமா? விருப்பமில்லாமல் கட்டிய தாலிக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? சும்மா கழற்றிப் போட்டு விட வேண்டியது தானே என்று குருதி கொப்பளிக்க தோன்றியதெல்லாம் ஒரு முறை கண்முன் வந்துச் சென்றது. நானும் அப்படி செய்யட்டுமா? என கேட்ட மனசாட்சிக்கு அளிக்க அவளிடம் பதிலில்லை.

திருச்சபையால் அங்கீகரிக்கப் படாத, சர்சில் நடைப் பெறாத எதுவும் திருமணமில்லை என்பதில் இன்னமும் அவளுக்கு மாற்றுக் கருத்தில்லை. ஆனால், இப்போது தான் என்னவாக ரியாக்ட் செய்ய வேண்டும்? என்பதில் அவளுக்கு தெளிவில்லை.

தற்கொலைச் செய்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணியபோது மிக துல்லியமாக கனக்கிட்டு டான் டானென்று வேலைச் செய்த மூளை இப்போது எங்கே போயிற்று?

என்னது “எண்ணிய போதா?” கடந்தகாலத்தில் ஒலிக்கும் எண்ணங்கள் அப்படியென்றால் இப்போது நான் தற்கொலைச் செய்துக் கொள்ள எண்ணவில்லையா? அவளுக்கு ஆச்சரியமாயிற்று. ஏன்?......

அவளின் ஏன் என்ற கேள்விக்கு அவள் கையில் பிடித்திருந்த மின்னும் தாலியே பதிலாயிற்று.அது அவள் கழுத்தில் வந்த விதம் அவள் மனதிற்கு, அவளறிந்த நியாய தர்மங்களுக்கு பொருந்தவில்லை. ஆனால், அது அவளுக்கு தந்த ஆசுவாசம், வாழ்க்கையின் மீதான பிடிப்பு அளப்பரியது. தன்னுடைய கடந்த நாட்களின் அழுத்தங்கள் அனைத்தினின்றும் அவளுக்கு அளித்திருந்த சுதந்திர உணர்வு சொல்லற்கரியது. 

தன்னைச் சுற்றியிருப்போர் அனைவரும் தன்னிடமிருந்து தான் அறியாத நிகழ்வொன்றைக் குறித்து, தன் கழுத்தில் எப்போது எந்நேரம் தாலி ஏறியது என்பதைக் குறித்து அறிய ஆவலாக இருப்பதை அறிந்தும் பதில் சொல்ல அவள் அவசரப் படவில்லை. அவளைச் சுற்றியிருந்தோர் உடல் நலமற்றவளாகக் கருதி அவளுக்கு தேவையான நேரமளித்து காத்திருந்தனர்.

அவள் பார்வை தன்னைச் சுற்றி சுழன்றது. தான் கேள்வி கேட்க வேண்டியவனை தேடியது? எப்போதடா எனக்கு தாலி கட்டினாய்? அதுவும் என்னைக் கேளாமல்? எனக் கேட்க வேண்டியிருந்தது.

தலைமாட்டில் தமையன் உட்கார்ந்திருந்தான். அவன் கண்களில் அதென்ன ஒரு வலியுணர்வு, தங்கைக்கு சுகமில்லை என வருந்துகின்றானோ? அவன் பின்னே நின்ற அண்ணியின் கண்ணில் அப்பட்டமான பதட்டமும், பயமும். பாவம் சும்மா வீட்டில் இருந்தவர்களை அழைத்து வந்து பெரும் பிரச்சினையில் மாட்டி வைத்து விட்டோம் போலும், இதுவரை அவர்களையல்லவா எல்லோரும் கேள்வி கேட்டு ஒருவழியாக்கி வைத்திருப்பார்கள். கண்களில் மன்னிப்பை யாசித்தவளாக அண்ணியை பார்த்திருந்தாள்.

எதிரே மஃப்டியிலிருந்த காவலர் தன் கேள்விக்கு பதில் நாடி நிற்க அவரை அலட்சியப் படுத்தியவளாக பார்வை நகர அவர் பின்னாக மகள் சொல்லப் போகும் வார்த்தைகளுக்காக மிக கூர்மையாக காத்திருக்கும் அவள் அன்பு அப்பா. உலகத்திலேயே எல்லா மகளுக்கும் அப்பாதான் முதல் ஹீரோ. அனிக்காவிற்க்கும் கிஞ்சிற்றும் குறைவில்லாத ஹீரோதான் அவர். உள்ளங்கையில் மகளை வைத்து தாங்குபவரல்லவா? சின்னதொரு வலியென்றாலும் வீட்டிலேயே அருகாமையிலிருக்கும் அம்மாவை தவிர்த்து அப்பா வரும் வரை நியாபகம் வைத்துச் சொல்லிய நாட்கள் எங்கே? மனமே வெறுத்து மரிக்க ஆவல் கொண்ட போதும் பகிர இயலாத நிலைக்கு இன்று தன்னை அவர் தள்ளியதன் காரணம் என்ன? அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகுமாம். செல்வம், தற்பெருமை, பிறரை பணத்தால் அளவிடும் தன்மை இவரை என்னிடமிருந்து பிரித்து வைத்து விட்டதே.

இப்போதும் கூட அவர் கண்களில் தெரியும் அந்த இறுமாப்பு எதற்காகவாம்? உணர்ச்சியே காட்டவியலாமல் மகள் பார்வை நகர்ந்தது. எதற்கு தீண்ட தகாதவர்களைப் போல இம்மூவரையும் வாசலருகே நிற்கச் செய்ய வேண்டும்? வாசல் கதவருகே நின்ற தீபன், ஜீவன் மற்றும் ரூபனைக் குறித்தே இவ்வாறு அவள் சிந்தித்தது. அவளுக்கு அவர்களை தன் தந்தை தாமஸ் தான் சற்று தொலைவில் நிற்க கூறியிருப்பது குறித்து தெரிந்திருக்க வாய்ப்பில்லையே. அருகே விட்டால் மகளிடம் நயமாக பேசி காரியம் சாதித்து விடுவார்களோ என்கிற எண்ணத்தில் அவர்களை தள்ளியே நிறுத்தி இருந்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.