(Reading time: 8 - 16 minutes)

காலையில் டிபன் சாப்பிட்டதும் வேலை இருக்குன்னு மாடிக்கு போனவ தான். நானும் டிஸ்டர்ப் செய்யல”

“சரி நான் போய் பார்க்கிறேன்”

ஜன்னல் வழியே தூரத்து வானை வெறித்தபடியே சாய்ந்திருந்தவள் கதவு தட்டும் சத்தம் கேட்டுத் திரும்பினாள்.

“அழுதிருக்கிறாள்” வருணுக்கு அவளைப் பார்த்தும் தெரிந்து போனது.

கன்னத்தில் கண்ணீரின் தடம் இன்னும் ஒட்டிக் கொண்டு தான் இருந்தது.

எதுவும் பேசாமல் கையை கட்டியபடி அவளையே பார்த்திருந்தான் வருண்.

“அண்ணா வந்து...அவர்...வந்து டாக்டர் என்ன சொன்னார்” தட்டுத் தடுமாறி ஒரு வழியாக கேட்டு முடித்தாள்.

முதன் முதலாக தன் வாயடித் தங்கை இப்படி வார்த்தைகளோடு கண்ணாம்பூச்சி விளையாடுவதை இப்போது தான் பார்க்கிறான்.

“சொன்னார். அதெல்லாம் உனக்கு எதுக்கு. அம்மா அப்பா உனக்கு மாப்பிள்ளை பார்க்க சொல்லி என்கிட்டே சொல்லிருக்காங்க”

“அண்ணா” அப்பட்டமாக அவள் முகத்தில் அதிர்ச்சி.

“அது வந்து அண்ணா. இப்போவே எனக்கு எதுக்கு அண்ணா. உன் கல்யாணம் பர்ஸ்ட் முடியட்டும். என்னால உங்கள விட்டு எல்லாம் பிரிஞ்சு இருக்க முடியாது அண்ணா”

“ஆஹான். ரெண்டு வருஷத்துக்கு முன்னே லெக்சர் அடிச்ச அதே வாய் தான் இப்போ இதை சொல்லுதா”

“ப்ளீஸ் அண்ணா. நீ என்னை எதுவும் கேக்க மாட்டேன்னு ப்ராமிஸ் பண்ணிருக்க”

அவள் மிரட்டவும் அவன் பணிந்தான்.

“சரி வா உன் முகமே சரியில்ல. வெளில சில்லுனு வெதர் நல்லா இருக்கு. ஒரு வாக் போலாம்”

வருண் அழைக்கவும் அவளுக்குமே சற்று நேரம் இந்த இறுக்கம் தளர்ந்து வெளிக்காற்றை சுவாசித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றவே அவனுடன் கிளம்பினாள்.

அன்று காலை அவள் தனது ரிபோர்ட்ஸ் அனைத்தையும் பைல் செய்து வருணிடம் கொடுக்கவும் வருண் அதை ஒரு முறை சரி பார்க்கவென தனது சிஸ்டத்தில் ஓபன் செய்தான்.

அவன் அவ்வாறு செய்யும் முன் அவசரமாக அவன் முன் வந்து நின்ற வர்ஷினி அவன் கைகளைப் பற்றி கொண்டாள்.

“அண்ணா. நான் ஒன்னு கேப்பேன். எனக்கு நீ செய்வியா. ப்ராமிஸ் பண்ணு”

தங்கை ஏன் இப்படிக் கேட்கிறாள் என்று அறியாதவன் எப்போதும் போல குறும்பாக எதையாவது கேட்டு வைக்கப் போகிறாள் என்றே நினைத்து சரி சொல்லு செய்யறேன் என்று வாக்கு குடுத்தான்.

“ஏன் எதுக்குன்னு நீ என்னை கேட்க கூடாது. அந்த டாக்டர் கிட்ட என் பேர சொல்லாம என் ரிபோர்ட் காட்டி கேக்கணும் சரியா”

அவள் அவ்வாறு சொல்லவும் ஒரு நிமிடம் வருணுக்கு எதுவும் புரியவில்லை. பிறகு தான் அவளது ரிபோர்ட்ஸ் அனைத்திலும் அம்ருதவர்ஷினி என்ற அவளது பெயரின் பின் பாதி எடிட் செய்யப்படிருந்ததைக் கவனித்தான்.

அனைத்து ரிபோர்ட்களிலும் அம்ருதா.V என்றிருந்தது.

அப்போது கிளம்பும் அவசரம் ஆகையால் வருண் எதுவும் அவளிடம் கேட்கவில்லை. ஆனாலும் அவன் மனம் சிந்தனையிலே இருந்தது.

வர்ஷினியும் வருணும் அவர்கள் வீட்டிருக்கு அருகமையில் இருந்த பார்க்கை அடைந்தனர். அங்கே காயத்ரி அவர்களுக்காக காத்துக் கொண்டிருந்தாள்.

“அண்ணி” என்று ஓடிச் சென்று காயத்ரியை அணைத்துக் கொண்டாள் வர்ஷினி.

காயத்ரி அங்கே இருந்ததை வைத்தே வருண் அவளிடம் எல்லாவற்றையும் சொல்லி விட்டான் என்று வர்ஷினி புரிந்து கொண்டாள்.

“ப்ளீஸ் அண்ணி நீங்களும் என்னை எதுவும் கேள்வி கேட்காதீங்க” முந்திக் கொண்ட வர்ஷினி காயத்ரியை அணைத்தபடியே விசும்பினாள்.

வர்ஷினி விசும்பவும் வருண் படபடப்பான். அதைக் கண்டு கொண்ட காயத்ரி அவளை முதலில் தேற்றும் விதமாய் முதுகில் வருடிக் கொடுத்தாள்.

“வருண் நீங்க எமோஷனல் ஆகாதீங்க. எனக்கும் அம்முக்கும் காபி வாங்கிட்டு வரீங்களா ப்ளீஸ். நாங்க அந்த பெஞ்ச்ல உட்காந்திருக்கோம்”

வருண் அங்கிருந்து அகன்றதும் வர்ஷியின் முகத்தை திருப்பி அவள் விழிகளை நோக்கினாள். காயத்ரியின் பார்வையைத் தாங்க முடியாத வர்ஷினி தலை குனிந்தாள்.

தன்னிடம் முதன்முதலில் அதிரடியாய் பேசிய அம்முவா இது என்று காயத்ரியுமே ஆச்சரியம் அடைந்தாள். வர்ஷினியை இப்படி அவள் எப்போதும் பார்த்ததில்லை. எப்போதும் துள்ளித் திரியும் மான் போல படபடக்கும் பட்டாம்பூச்சியைப் போல தான் சுற்றித் திரிவாள்.

இப்போதோ நத்தை தன் ஓட்டிற்குள் சுருண்டு கொள்வதைப் போல தன்னைத் தானே எதனிடம் இருந்தோ மறைக்கப் பார்க்கிறாள். வருண் கூறியதை வைத்து ஓரளவு யூகம் செய்தாலும் தெளிவாக எதுவும் தெரியாமல் எந்த முடிவுக்கும் தாமாக வரக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தாள் காயத்ரி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.