(Reading time: 35 - 70 minutes)

46. மருவக் காதல் கொண்டேன்... - மீரா ராம்

Maruva kathal konden

யிலாய பர்வதத்தில், பிரமிக்கும்படி இருந்த அந்த நீர்ப்பிரவாகத்தின் அருகே நின்று கொண்டிருந்தான் மகாதவேன்…

அந்த குளமானது நந்தி கொண்டு வந்து சேர்த்திட்ட தாமரை மலர்களினால் நிறைந்திருந்தது….

மகாதேவனுடன் எப்போதும் இருக்கும் அந்த இரண்டு சீடர்களும், நந்தி இல்லாத அந்த நேரத்தை பயன்படுத்திக்கொண்டு மகாதேவனிடத்தில் வந்தனர்…

“பணிகிறோம் மகாதேவா… பாருங்கள் இந்த நந்தி செய்த காரியத்தினை… எங்கிருந்தோ எடுத்து வந்த இந்த தாமரை மலர்களினை எப்படி வாரி இறைத்திருக்கிறான் பாருங்கள்…. இந்த தாமரை மலர்களினால் இவ்விடத்தின் அழகே குறைந்து விட்டது…”

இருவரும் மாறி மாறி கூற, சிறு புன்னகையுடன் திரும்பிய மகாதேவனோ,

“நந்தி என் மீது அதீத அன்பு கொண்டவன்….” என்றான் உடனேயே…

“எனில் நாங்கள் தங்கள் மீது அன்பு கொண்டவர்கள் இல்லையா மகாதேவா?...”

அவர்கள் சட்டென கேட்க,

“நீங்களும் என் மீது அன்பு கொண்டவர்கள் தான்… அதனால் தான் நானும் உங்களிடம் அன்பு செலுத்துகிறேன்… நந்தி மட்டும் உயர்வு, நீங்கள் குறைவு என்று இனம் பிரித்து நான் கண்டதில்லை… அனைவரிடத்திலும் நான் சரிசமமாகத்தான் அன்பு காட்டுகிறேன்…”

“அப்படி எனில் ஒரு விண்ணப்பம்… நீங்கள் எங்களுடன் மயானத்தில் பொழுதினை கழிக்க வேண்டும்… அங்கு நாம் ஆனந்தமாக இருக்கலாம்…”

“நிச்சயம் ஒருநாள் வருகிறேன்…” என அவன் கூறிக்கொண்டிருந்த போது நந்தி வந்துவிட, அவனைப் பார்த்துவிட்டு தயங்கி நின்றனர் அவர்கள் இருவரும்…

“இருவரும் இங்கே என்ன செய்கின்றீர்கள்?...” என அவர்களை நந்தி முறைத்துவிட்டு,

“தங்களை விவாக பந்தத்தில் இணைய விடாமல் தடுப்பதே இவர்களின் நோக்கம்…. அதற்கு இவர்கள் இருவர் மட்டுமே காரணம்…” எனக்கூற,

“இவர்கள் யாதொரு தவறும் செய்யவில்லை… இன்னலினை தரும் அந்த மாயை நிறைந்த வாழ்க்கையினை துறந்த எனக்கு நான் இருக்கும் இந்த நிலையே ஆனந்தம் தரும் நிலை…” என அவன் சொல்லிமுடித்து தனது தியான நிலையில் மூழ்கிட, அந்த இரு சீடர்களும் நந்தியைப் பார்த்து சிரித்தனர் கேலியுடன்…

தோட்டத்தில் தனியே அமர்ந்து வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருந்த சதியைத் தேடி வந்தாள் அவளது சகோதரி அதிதி…

“சதி, தந்தை உன் மனதை தெளிவுபடுத்திவிட்டாரா?... இப்பொழுதாவது உன் மனதில் அமைதி பிறந்ததா?...”

“ஆம் அக்கா… என்னை மையமாக வைத்து, தந்தைக்கு சூழ்ச்சி செய்ய நினைத்திருக்கிறார்கள்… அவர்கள் செய்த அச்செயலினை நான் ஒருபோதும் மன்னிக்க மாட்டேன் அக்கா… அந்த மகாதேவனால் நான் ஆகர்ஷிக்கப்பட்டேன்… அதை நான் மறுக்கவில்லை… அந்த கனவு, அந்த உருவம், அனைத்திலும் நான் ஈர்க்கப்பட்டேன்… அதுவே சத்தியமும்… எனினும் தற்போது எண்ணிப்பார்க்கையில் அது அனைத்தும் அவர்கள் செய்த சதி என்று விளங்கிற்று… என் உணர்வுகளோடு அவர்கள் விளையாட நான் இடமளித்தது தான் வேதனை தருகிறது…”

“அவர்களின் சூழ்ச்சிக்கான காரணம் உனக்கு முன்பே தெரிந்திருந்தால், நீயும் அப்படி ஒரு சூழ்நிலையில் சிக்கி இருக்க மாட்டாய்… இப்பொழுதேனும் உனக்கு உண்மை புரிந்ததினால் இனி நீ அடுத்து எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் கவனத்துடன் எடுத்து வைப்பாய்… அதனால் கவலை கொள்ளாதே சதி… அதைப் பற்றிய சிந்தனைகளை களைந்து விடு… சரிதானா?...”

அவள் புன்னகையுடன் கேட்க, சதியும் சரி என்றாள் தெளிவான மனதுடன்….

அதிதி சென்றதும், ஒவ்வொரு மலரின் அருகேயும் சென்று அதனை ரசித்துக்கொண்டிருந்தாள் சதி… அப்போது ஒரு மலர் கீழே கிடக்க, அதன் அருகில் சென்றாள் அவள்…

ந்நேரம் கயிலாய பர்வதத்தில், பனிச்சறுக்கு ஏற்பட்டு, நீரில் கலக்க, அதுவும் உருகி, நீர் பெருகி, அக்குளத்தினை நிரப்பி, அதிலிருந்த தாமரை மலர்களை எல்லாம் தன் சுழற்சிக்குள் கொண்டு வந்து, ஆழ்ந்த தியானத்தில் இருந்த மகாதேவன் அமர்ந்திருந்த பாறை வரை நீரானது சூழ்ந்து வந்ததோடு மட்டுமல்லாமல் அவனது பாதத்தினையும் அந்நீர் தீண்ட தவறவில்லை……

தியானத்தில் மூழ்கியிருந்தவன், தன் பாதத்தில் உணர்ந்த ஸ்பரிசத்தில் கண் விழித்து பார்த்திட, அவனது பாதத்தின் அருகில் இருந்தது ஒரு தாமரை மலர்…

மெல்ல அதனை அவன் கரம் எடுத்த அதே வேளை, அங்கே சதியும், மண்டியிட்டு அம்மலரினை தன் கரத்தினில் எடுத்தாள்…

இருவரும் சிறிது நேரம் அதனை தங்கள் கைகளில் வைத்து பார்த்துக்கொண்டே இருக்க, சட்டென சதி அதனை தூக்கி எறிந்தாள்…

மகாதேவன் அதனை தன் கரத்தினில் தாங்கியிருக்க, அவனின் முன்னே வந்தனர், நாரத மகரிஷியும், நந்தியும்… அவர்களைத் தொடர்ந்து அந்த இரு சீடர்களும் வந்தனர்…

அவனின் கரம் சுமந்திருந்த மலரினைப் பார்த்த நாரத மகரிஷி, “சரியான நேரத்தில் இங்கே வரும் வரம் பெற்றிருப்பேன் போலும்… என்ன ஒரு காட்சி… ஆஹா… இதுவரை தாங்கள் எந்த பந்தத்தில் இணையக்கூடாதென்று விலகி இருக்கிறீர்களோ இன்று அதனையே தாங்கள் தங்கள் கரங்களில் ஏந்தி ரசிக்கும் மாயம் தான் என்ன மகாதேவா?...” என புன்னகையுடன் கேட்க, மகாதேவன் நந்தியிடத்தில் அம்மலரினை நீட்ட, நந்தி வந்து அதனைப் பெற்றுக்கொண்டான்…

“தாமரை தானாக நீரில் மிதந்து வந்தது நாரத மகரிஷி…”

“தாமரை அதுவும் தனித்து மிதந்து வந்ததா?... அப்படி எனில், இம்மலரின் மீது தங்களின் நாமத்தினை இயற்றிய சதி தேவியும், இங்கே தானாகவே வருவார்களோ?...” என புன்சிரிப்புடன் கேட்ட நாரதர், மகாதேவன் பதில் கூறும் முன்பே, நந்தியிடத்தில் திரும்பினார்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.