(Reading time: 35 - 70 minutes)

பின், இந்திரன் விடைபெற்று செல்ல, சந்திரனும் விடைபெற போகும் தருவாயில், வெகு நாட்கள் கழித்து, சந்திரன், ரேவதி, மற்றும் ரோகிணி இங்கே வருகை தந்திருப்பதால், சதி அவர்களை வசந்த விழா நாள் முடியும் வரையில் தங்கிட கூற, பிரஜாபதியோ சரி என கூறிவிட்டு, தான் மகா சபை காரணமாக செல்ல வேண்டியிருப்பதாகவும், அதுநாள் வரையில் வசந்த விழா பொறுப்பினை யார் கவனித்து கொள்வார்கள் எனவும் கேட்டிட, பிரசுதியோ சந்திரன் இருக்க கவலை ஏன் என்றார்…

தாம் இங்கு இல்லாத சமயத்தில் வசந்த விழாவிற்கான பொறுப்பினை சந்திரன் கவனித்துக்கொள்வார் என பிரசுதி கூறிட, சதியோ, நாங்களும் அவருக்கு உதவிடுவோம்… கவலை வேண்டாம் என்றாள் தந்தையிடம்…

அவரும், பிரஜைகளின் முன் சந்திரனுக்கு அப்பொறுப்பை கொடுக்க எண்ணம் கொண்டு, மந்திரியிடம் ஆணையிட அவரும் சரி என்றார்…

தே நேரம் கயிலாய பர்வதத்தில், மகாதேவன் எப்பொழுதும் அமர்ந்து தியானத்தில் மூழ்கியிருக்கும் இடம் வெற்றிடமாய் இருக்க, நந்தி அதனை வருடிப்பார்த்துக்கொண்டு அழுது கொண்டிருந்தான்…

அங்கு வந்த அந்த இரு சீடர்களும் நந்தியிடத்தில் மகாதேவர் குறித்து கவலையுடன் வினவ, அவனோ, அழுகையினையே பதிலாக வெளிப்படுத்தினான்…

“சொல் நந்தி… மகாதேவர் எங்கு சென்றார்?.. அவர் எங்கு சென்றிருப்பார் என உனக்கு நிச்ச்யம் தெரிந்திருக்கும்.. ஏனெனில் அவருக்கு நீயே அதீத பிரியமானவன்… சொல் நந்தி…”

“மகாதேவர் சமாதி நிலையில் உள்ளார்… வருட்த்தில் ஓர் நாள், வசந்த காலம் வரும் முன்பு, அவர் தன்னிலையை மறந்து, மௌனத்தினை அணிந்து, தியானத்தில் மூழ்கி, சிந்திக்கும் ஆற்றலையும் கடந்து, சமர்ப்பண நிலையினை எட்டுகிறார்…”

“அவ்வாறு அவர் இருக்க என்ன காரணம் நந்தி?...” அவர்களும் கேவலுடன் கேட்க,

“அதனை கேட்கும் தைரியம் என்னிடத்தில் இல்லை… அவர் எதற்காக இந்த ஒரு தினம் மட்டும் இப்படி தன்னையே இழந்து சங்கடத்தில் ஆழ்கிறார் என நான் அறியேன்…” என்றான் நந்தி கவலையுடன்…

அப்பொழுது அத்ரி மகரிஷியின் இல்லத்தில், “சந்திரனுக்கு எந்த இன்னலும் ஏற்பட்டிருக்காதல்லவா?..” என கவலைப்பட்டுக்கொண்டிருந்தார் அனுசுயா..

“மகாதேவரின் மீது நம்பிக்கை வை…” என அத்ரி மகரிஷி கூற, “எனக்கு அவரின் மீது பரிபூரண நம்பிக்கை உள்ளது…” என்றார் அனுசுயாவும்…

“அந்நம்பிக்கை ஒன்றே போதும் நல்ல பலன்களையும் தர…” என்றார் மகரிஷி காசியப்பர், இன்னும் சில மகரிஷிகளுடன்…

“தாம் அனைவரும் ஒரு சேர வந்திருப்பதால், தாம் தெரிவிக்கப்போகும் செய்தி ஒன்று துன்பத்தை தரலாம்… அல்லது பரவசத்திலும் மூழ்கச்செய்யலாம்…” என ததீசி மகரிஷி கூறியதும்,

“ஆம்… மகாதேவருடன் தொடர்புடைய செய்தி….” என்றார் காசியப்ப மகரிஷி புன்னகையுடன்…

“சபையில் ஏதேனும் துர்சம்பவங்கள் நிகழ்ந்ததா?..”

அனுசுயா பதட்டத்துடன் கேட்கவும்,

‘இல்லை…” என்றார் காசியப்ப மகரிஷி வேகமாய்…

“தட்சர் மகா சபையை அழைக்கும்போதே அனுமானித்தேன், அவர் ஒரு மகத்துவம் வாய்ந்த நிர்ணயத்தினை அறிவிப்பார் என, அதுவும் அது மகாதேவருடன் தொடர்புடைய நிர்ணயமாகத்தான் நிச்சயம் இருக்க வேண்டும்… அதனால் ஆச்சரியம் ஏதும் எனக்கு ஏற்படப்போவதில்லை.. எதுவென்றாலும் தாங்கி வந்த செய்தியினைக் கூறுங்கள் மகரிஷி…” என ததீசி கேட்டிட

“இம்முறை ஆச்சரியம் தம்மை முழுவதும் நிரப்ப போகின்றது மகரிஷி ததீசி… ஏனெனில் இன்னும் ஈர் ஐந்து தினங்களில், பாவங்களைப் போக்கும் புண்ணிய ஷேத்திரத்தில், நடக்க விருக்கும் மகா சபைக்கு, தட்ச மகாராஜா, மகாதேவரை அழைத்துள்ளார்…” என்றார் காசியப்ப மகரிஷி புன்னகையுடன்…

“என்ன?... இது நிஜம் தானா?..” அத்ரி மகரிஷி ஆச்சரியத்தில் சிக்கியவராய் கேட்க,

“ஆம்… இது சத்தியம்… பிரஜாபதி மகாதேவரை சபைக்கு அழைக்க விருப்பம் தெரிவித்திருக்கிறார்…” என்றார் காசியப்ப மகரிஷி…

அதைக் கேட்டு சில நொடிகள் எதுவும் பேசவில்லை ததீசி மகரிஷி… பின், “பிரஜாபதியின் இவ்வழைப்பினை மகாதேவரிடம் தெரிவிக்கிறேன்… அதோடு மகாதேவரை அச்சபையில் பங்கு கொள்ளவும் நான் வேண்டுகிறேன்…” என ததீசி கூறியதும் அங்குள்ளவர்களின் முகத்தில் புன்னகை பூத்தது…

கயிலாய பர்வதம் வந்தடைந்த நாரத மகரிஷி, நந்தியிடம் “ஏன் இன்று இங்கு இத்தனை அமைதி நிலவுகிறது?.. மகாதேவர் எங்கே?....” என கேட்க,

“முக்காலமும் அறிந்த தாமே, இவ்வாறு கேட்கலாமா?... மகாதேவர் மீது ஆணை… மகாதேவர் ஏன் இத்தினம் மட்டும் தனிமையை ஸ்வாசித்து, ஏகாந்தத்தில் ஆழ்ந்து போகிறார்?... கூறுங்கள் மகரிஷி…” என மன்றாட, நாரதரோ புன்னகைத்தார்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.