(Reading time: 35 - 70 minutes)

ந்தி சொல்ல மறந்துவிட்டேன் பார்த்தாயா?.. நீ சதி தேவியிடமிருந்து தாமரை மலர்களை பெற்று வந்தாலும் வந்தாய்… அங்கே பெரும் சலசலப்பே எழுந்து விட்டது… நீ சென்றதும், பிரஜாபதி தன் பிரஜைகளின் மத்தியில் தன் சக்தியை நிரூபித்தார்… அதுமட்டுமல்ல, மகா மண்டல சபைக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார்…”

“மகா மண்டல சபை என்றால் என்ன?...”

இரு சீடர்களும் தங்கள் சந்தேகத்தினைக் கேட்டிட,

“அந்த சபை யாதெனில், அகிலத்திலுள்ள மக்களுக்கு யாதொரு குறையும் இன்றி, காத்து, பரிபாலித்து வரும், தேவர்களும், சப்த ரிஷிகளும் இணைந்த ஒரு அமைப்பு… அதுவுமின்றி, இம்முறை நடக்கவிருக்கும் சபையில் ஏதோ ஒரு முக்கியமான விவாதம் நடைபெறப் போகின்றது என்றே அனைவரும் கூறுகின்றனர்…” என அந்த இரு சீடர்களிடமும் கூறியவர்,

பின் நந்தியிடம், “சிவனின் நாமத்தினையே புறக்கணிக்கும் பிரஜாபதியின் இடத்திற்கு சென்ற நீ தான் அனைத்திற்கும் காரணம்… அங்கு சென்றதோடு மட்டுமல்லாமல், சதி தேவியை சந்தித்து, தாமரை மலர்களையும் பெற்று வந்துவிட்டாய்… இது நிச்சயம் பிரஜாபதிக்கு மேலும் வன்மத்தினையே வளர்க்கும்… ஏற்கனவே பிரஜாபதிக்கு மகாதேவர் என்றால் ஆகாது… இதில் நீ வேறு சென்று அதனை மேலும் அதிகரித்துவிட்டாய்…. காண்போம்… இனி பேசித்தான் ஆகப்போவது என்ன?... நடப்பதை காண தயாரோவோம்…” என நாரத மகரிஷி ஒரு பெருமூச்சுடன் கூறி முடிக்க, நந்தியின் முகம் வாடிப்போனது…

“நாரத மகரிஷி, நந்தி என் மீது கொண்ட அதீத அன்பினாலேயே அங்கு சென்றான்… என் நாம்ம் இடம்பெற்றிருந்த மலர்கள் வீணாவதை தாங்க இயலாமல் தான் அதனை பெற்றும் வந்தான்…” என்று மகாதேவன் கூற, வாடிய நந்தியின் முகம் நொடிப்பொழுதில் மலர, நாரத மகரிஷியும் அதனை ஆம் என ஆமோதித்தார் புன்னகையுடன்…

அதன் பின்னர், சற்று நேரம் கழித்து, “பிரபு, விஸ்வகர்மாவின் வம்சத்தினர் தங்களை சந்திக்க இங்கு வந்துள்ளனர்…..” என நந்தி மகாதேவனிடத்தில் கூற, அவனும் சரி என்றான்….

“கயிலாய பர்வதத்திற்கு தங்கள் அனைவரையும் வரவேற்கின்றேன்…” என்றதும், அவர்கள் அனைவரும் அவனை வணங்கி நிற்க,

“கயிலாயபுரத்தில் தங்களுக்கு ஏதேனும் குறைவு ஏற்பட்டதா?...” என கேட்டிட,

“அப்படி எல்லாம் எதுவும் இல்லை பிரபு… இருக்க இடமளித்து எங்களின் வாழ்விலும் ஒளியேற்றிய தங்களை தரிசித்து, எங்களின் நன்றியினை தெரிவிக்கவே வந்தோம்….” என்றனர் சிற்பிகளும், அவர்களது குடும்பத்தினரும்…

“நடந்த நிகழ்வினை மறந்திடுங்கள்… அதைப் பற்றி எண்ணி வருந்திடவும் வேண்டாம்…”

“தங்களின் தரிசனம் கண்டு தன்யர்கள் ஆனோம் பிரபு…. கவலையில் ஆழ்ந்திருந்த எங்கள் மனம் தற்போது எல்லையில்லா ஆன்ந்தத்தில் திளைக்கின்றது…”

“சிற்பிகளே, வாழ்வில் என்றும் ஆனந்தம் மட்டுமே நிலைத்திருக்காது… இன்னல்களும், இரண்டற கலந்திருக்கும்…” என்றவன்,

நந்தியிடத்தில், “இவர்கள் அனைவரும், கயிலாயபுரத்தில் இருந்து இப்பர்வத்த்திற்கு நடைபயணமாக வந்துள்ளனர்… இவர்கள் களைத்திருப்பார்கள்… அதனால் இவர்கள் அனைவரும் பசியாற, ஆவண செய்… நானும் இன்று இவர்களோடு உணவு உண்ணப்போகிறேன்…” என கூற,

“இத்தகு பேறு கிடைப்பதற்கு நாங்கள் என்ன தவம் செய்தோமோ?...” என அனைவரும் உருகிப்போயினர்…

பின், அனைவரும் உண்டு முடிக்க, “இந்த கயிலாயபுரம், மற்றும், பர்வதத்தின் அடிவாரக்கற்கள், சிலைவடிக்க தகுந்தவை… இங்குள்ள நீரும், மணலும் அதற்கு உதவும்… நீங்கள் இதுவரை வசித்து வந்த இடத்தில் தாம் அனைவரும் பெற்ற இன்பங்கள் இங்கேயும் தங்களுக்கு கிடைத்திடும்…” என்ற மகாதேவனிடத்தில்,

“நிச்சயம் இங்கே நாங்கள் இன்பமுடன் இருப்போம் பிரபு….” என்ற சிற்பிகள்,

“பிரஜாபதி எங்களை நாடுகடத்திய நிகழ்வினை நாங்கள் அடியோடு மறந்திடுவோம்.. நாங்கள் இங்கே வரும்போது, சதி தேவியைக் கண்டோம்… பிரஜாபதி எங்களை நாடுகடத்தி தண்டனை அளித்தார்… அதுபோலவே சதி தேவிக்கும் அவர் தண்டனை அளித்தார்… அவர்களும் பாவம் அல்லவா?... எங்களுக்கு அடைக்கலம் கொடுத்து உதவியது போல், அவர்களுக்கும் யார் உதவிடுவார்கள்?.. ஒருவேளை, அவர் இவ்விடம் வர நேர்ந்தால், எங்களை ஏற்றுக்கொண்டது போல் அவர்களையும் ஸ்வீகரித்து கொள்வீர்களா?...” என தங்களின் மனதிலிருந்து கேட்க,

எதுவும் கூறாது அமைதியாக அவர்களைப் பார்த்தான் அவன்….

தே நேரம், பிரஜாபதியின் அரண்மனையில்,

“மகா மண்டல சபை அழைக்கப்பட்ட காரணம் ஏன் என்ற கேள்வி தம்மில் பலருக்கு எழுந்துள்ளது என்பதை யாம் அறிவோம்… இச்சபை இப்பொழுது அழைக்கப்பட்ட காரணம் பிரபஞ்சத்தில் உள்ள ஜீவராசிகளிடத்தில் மகிழ்ச்சியின்மை தென்படுகிறது… அதற்கு ஏற்ற தீர்வினை நாம் கண்டறிய வேண்டும்..”

பிரஜாபதி அழுத்தமாக கூற,

“அகில நன்மை குறித்த விவாதத்தின் போது இன்னொரு நிகழ்விற்கும் நாம் தீர்வு காண வேண்டும்… தாங்கள் அனுமதி அளித்தால் அதனை நான் கூறுகிறேன்…”

தேவேந்திரன் இந்திரன் பிரஜாபதியின் ஆணைக்கு காத்திருக்க, அவரும் சொல் என்றார்…

“தேவர்களாகிய நமக்கும், அசுர இனத்தவருக்கும் இடையே நடக்கின்ற யுத்தத்தினை நாம் அனைவரும் அறிவோம்… அவர்கள் திட்டமிட்டு புதிய புதிய சக்திகள் பெற்று அதனைக் கொண்டு நம்மை தாக்குவதையே வழக்கமாக கொண்டிருக்கின்றனர்… அதுபோக, அசுர இனத்தின் குரு சுக்ராச்சாரியார் மகாதேவனை மனதில் நினைத்து கடும் தவம் புரிந்து வருகின்றார்… ஒருவேளை இத்தவத்தில் அவர் வென்று விட்டால், மகாதேவரிடமிருந்து சஞ்சீவினி வரத்தை அவர் பெற்றிடுவார்… அவ்வாறு நடந்துவிட்டால், அவர்களை அடக்குவது அதன் பின் அரிதான ஒன்றாகிவிடும்… ஏனெனில் சஞ்சீவினியின் ஆற்றல் அத்தகையது… அது இங்குள்ள அனைவருக்கும் தெரியும்… இவ்வாறு இருக்க, அசுரரிடமிருந்து நம்மை யார் காப்பாற்றுவார்கள்?.. அந்த எம்பெருமான் வேறு, மகாதேவன் வேறு என்று தனித்தனியே பிரித்துப் பார்த்திடவும் முடிந்திடவில்லை… கயிலாய மன்னனுக்கு மகனாக கிடைத்த மகாதேவர், சாட்சாத் அந்த ஈசன் தான்… எதில் எள்ளளவும் ஐயமில்லை… இப்படிப்பட்ட சூழ்நிலையில், தன்னை துறந்து, யோகியாக வாழும் மகாதேவரோ, அவரை வேண்டி தவம் இருப்பவர்களுக்கு வரத்தினை வாரி வழங்குகிறார்… அதிலும் குறிப்பாக அசுரர்களுக்கு….”

இந்திரன் கூறியதை சட்டென மறுத்தார், மகரிஷி காசியப்பர்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.