(Reading time: 35 - 70 minutes)

பின், “உனக்கு எப்படி நான் விளக்குவது?... நான் இங்கே காலத்தை கடத்த வந்தவன் என்று நினைத்தாயா?.. இல்லை நந்தி… அவரின் இந்த சமாதி நிலை மற்றும் வைராக்கியம் அநேக தாக்கத்தின் விளைவு… நீ அனுமானித்தது நிஜம் தான்… மகாதேவர், தன்னிடமிருந்து தானே விலகுகிறார்… அத்தகு கட்டாயத்துக்கும் உள்ளானார்… அது இப்பிரபஞ்சத்தின் உயர்வுக்காகவே… அவரது அதீத பிரியத்துக்குள்ளானவரை இத்தினம் தான் துறக்க நேரிட்டது… அதனால் வந்த விளைவு தான் இது…” நாரத மகரிஷி நந்தியிடம் கூறிய அதே வேளை, மயானத்தில், நெருப்புகளுக்கு இடையே, மௌனமாக முகத்தில் கவலையுடன் அமர்ந்திருந்தான் மகாதேவன்…

“அவர் யாரை பிரிய நேரிட்டது?.. கூறுங்கள் மகரிஷி… தேவி சதியையா?... இல்லை இத்தினத்தில் தேவி சதியினை குறித்த உண்மையினை அவர் உணர நேரிடலாம்… என் யூகம் சரிதானா மகரிஷி?... தயை கூர்ந்து கூறுங்கள்…” ந்ந்தி கைகூப்பி கேட்டிட,

“சரியான நேரம் வருகையில் அதனை நீ உணர்வாய்…” என்றார் நாரதர்…

“அவரின் தனிமை எப்போது அவரை விட்டு விலகும் மகரிஷி?... அவரின் தனிமை அவரை விட்டு செல்லுமா செல்லாதா?... சொல்லுங்கள் மகரிஷி…”

“ஸ்ரீ விஷ்ணுவே மகாதேவரின் தனிமைக்கு முடிவை விரும்புகிறார்… நான் அவரின் பக்தன்.. எனவே நானும் என் பகவானின் இச்சையை நிறைவேற்றவே என்னால் ஆனதை செய்வேன்…”

“அப்படி எனில் அவர் இத்தனிமையிலிருந்து முக்தி எப்போது பெறுவார் மகரிஷி?...”

“நிச்சயம் முக்தி பெறுவார்… அடுத்தவரின் துன்பத்தினைக் காண பொறுக்காதவர் மகாதேவர்… தூய மனதோடு, பக்தியை நிரப்பி, அவரினை வேண்டினால், அவரின் முன் தோன்றுவார் ஈசன்… ஆம்… இந்நேரம் அங்கே பிரஜாபதியின் அரண்மனையில் வசந்த விழாவிற்கான ஏற்பாடுகள் யாவும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன….”

“தங்கள் வார்த்தைகளின் பொருள் எனக்கு விளங்கவில்லை மகரிஷி…”

“இங்கோ மகாதேவர், காய்ந்த சருகுகளின் இடையே தனிமையில் ஏகாந்தத்தில் மூழ்கி போகிறார்… அங்கு பிரஜாபதியின் அரண்மனையிலோ வசந்தம் துளிர்விடுகிறது… ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள், வசந்த காலம் வந்த பின்னரே, இலையுதிர் காலம் மாறும்… இப்பொழுதாவது புரிகிறதா?..” நாரத மகரிஷி கேட்டிட, நந்தியோ இல்லை என்றான் வருத்தம் மிக…

“மகாதேவரை இத்தியான நிலையிலிருந்து வெளிக்கொண்டுவர வேண்டுமென்றால், அவரை வசந்த காலத்துடன் சந்திப்பை ஏற்படுத்தினால் தான் முடியும்… இது தான் நான் ஏற்றுள்ள கடமை…”

“வெற்றி கிட்டிட்டும்… மகரிஷி.. தாம் ஏற்றுள்ள கடமை வெற்றி பெறட்டும்…” என்றவன், பின்,

“சதி தேவி இங்கே வருகையில், அவருக்கு எத்துன்பமும் நேராமல் நான் பார்த்துக்கொள்கிறேன்… மகரிஷி….” என்றான் சந்தோஷத்துடன்…

தே நேரம், வெட்ட வெளியில் நெருப்பு ஆங்காங்கே எரிந்து கொண்டிருக்க, அதன் நடுவில், எந்த உணர்ச்சியும் இன்றி அமர்ந்திருந்தான் மகாதேவன் சிலையென…

பிரஜாபதியின் அரண்மனையில், வசந்த விழா பொறுப்பினை சந்திரனிடம் பிரஜைகளின் முன் ஒப்படைத்திட எண்ணம் கொண்டு பிரஜாபதி அரசவையினை அழைத்திருக்க,

“பகடை விளையாடும் போதும், ரோகிணிக்கு தங்களின் நினைவு தான்… தங்களை விட்டு அவள் ஒருநொடி கூட பிரிந்திருக்க முடியாது போலும்… அதனால் தான் இத்தனை நாள் பிறந்தகத்தினையே அவள் மறந்தும் இருந்துவிட்டாள் என்றே தோன்றுகிறது…”

அதிதியும் கியாத்தியும் கேலி செய்ய, சிவந்த கன்னங்களுடன் ரோகிணி, சந்திரனின் கைப்பிடித்தவாறு நிற்க, ரேவதியோ கவலை தோய்ந்த முகத்துடன் சதியின் அருகில் நின்று கொண்டிருந்தாள்…

பிரசுதியும், சதியும் ரேவதியின் முகத்தினை கவனித்து செய்வதறியாது நின்றிருக்க, அங்கே வருகை தந்தார் பிரஜாபதி…

சந்திரனோடு ரோகிணி முன்னே செல்ல முயல, சதி, ரேவதியினையும் உடன் செல்ல வற்புறுத்தினாள்…

“தாம் தான் சந்திர தேவனை முதலில் மணமுடித்தவர்… தமக்கே முதல் மரியாதையும் உண்டு…” என சதி கூறிட,

“அனைத்து இடங்களிலும் மூத்தவளுக்கே அதிகாரமா?.. இளையவளாய் நான் இருப்பதால் எனக்கு மட்டும் பாரபட்சமா?..” என ரோகிணி சிறுபிள்ளை போல் கேட்டிட, பிரஜாபதியோ, அதுவும் சரிதான், நீயே உன் கணவனோடு முன்னே வா… என்றார்…

அதோடு, “ரேவதி உன்னை விட பக்குவம்பெற்றவள்… தன் தங்கைக்கு வாய்ப்பு அளிப்பதினால், வருத்தம் அடையமாட்டாள்… அப்படித்தானே மகளே?...” என ரேவதியிடம் கேட்டிட, அவளும் புன்னகையை வரவழைத்துக்கொண்டு ஆம் என்றாள்..

“நான் மகா சபை காரணமாக பயணம் மேற்கொள்ளவிருப்பதால், சந்திரனிடம் வசந்த விழா பொறுப்புகளின் நிர்வாகத்தினை ஒப்படைக்கின்றேன்… எனது நம்பிக்கையை சந்திரன் நிறைவேற்றுவான் என்றே எண்ணுகிறேன்…”

பிரஜாபதி அழுத்தத்துடன் கூற, “நிச்சயமாய்….” என்றான் சந்திரனும்…

“அனைவரும் சந்திரனுக்கு உதவுங்கள்… எனது புதல்விகள் அனைவரும் சென்று, 64 நதிகளின் நீரினை எடுத்து வருவார்கள்… அதிலும், சதி, நீ சரஸ்வதி நதியின் நீரினை எடுத்து வரவே நான் விரும்புகிறேன்…” என பிரஜாபதி கூற, மகள்கள் அனைவரும் நீரினை எடுக்க கிளம்பினர்…

பிரஜாபதி தன் அறையினில் மகாவிஷ்ணுவினை ஆராதனை செய்து கொண்டிருக்க, அங்கு வந்த மகரிஷி பிருகு,

“மகாதேவரை தாம் மகா சபைக்கு அழைத்த காரணம் யாது பிரஜாபதி?... தாம் தான் அப்படி ஒரு முடிவினை எடுத்தீர்களா என இன்றளவும் என்னால் நம்ப இயலவில்லை… நடக்க விருக்கும் இச்சபையில் நான் பங்கு கொள்ளாமல் விலகிட எனக்கு தாங்கள் அனுமதி அளித்திட வேண்டும்…”

“அதனை என்னால் வழங்க இயலாது… மகா சபையின் காரணத்தை விரைவிலேயே தாம் அறீவீர்கள்… அதுவரை அமைதி காத்திருங்கள்…” என்றார் பிரஜாபதி மகரிஷி பிருகுவிடம்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.