(Reading time: 35 - 70 minutes)

யிலாய பர்வத்தில், சதி தேவி குறித்து மகாதேவரிடம் கேட்டே ஆக வேண்டும் என எண்ணி, உணவும், நீரும் எடுத்துக்கொண்டு மகாதேவன் அமர்ந்திருக்கும் இடத்திற்கு வந்து ஆச்சரியமுற்று நின்றான் நந்தி…

“வந்துவிட்டீர்களா பிரபு… சென்ற வருடம் போல் அனேக நாட்கள் கழித்து தான் திரும்பி வருவீர்கள் என்று நினைத்தேன்… ஆனால் இன்று விரைவில் சமாதி நிலையிலிருந்து திரும்பிவிட்டீர்களே…” என மகிழ்வோடு நந்தி உணவும், நீரும் மகாதேவனுக்கு கொடுக்க, அவன் வேண்டாம் என்றான்…

“சமாதி நிலை என்பது வாழ்வின் ஒரு கட்டம்… நம்மை நாம் அடையாளம் காண்பது சமாதி நிலை… ஜனனம் எடுத்தவர்கள் மரணத்தினை உணரும் நிலையே சமாதி… நம்மை நாமே அகன்று செல்லும் பயணம் சமாதி… எனினும் எனக்குள் ஏற்பட்ட உணர்வுகளை விளக்க என்னால் இயலவில்லை…”

“தாமே இப்படி கூறினால் எப்படி பிரபு?... தாம் ஆதியோகி, சர்வ வியாபிஆயிற்றே…”

“அது அனைத்தும் தாங்கள் எனக்கு கொடுத்த பட்டங்கள்… சர்வ வியாபி ஆவது அகங்காரத்தை தோற்றுவிக்கும்… ஆனால் நானோ அனைத்தையும் துறந்தவன்… எனில் நான் சர்வவியாபியாவது சாத்தியமா?.. ஒன்றிலிருந்து ஒன்று பிரள்வதை அறியாமல் இருப்பதே பூரணத்துவம் வாய்ந்த நிலை….”

மகாதேவன் நந்தியிடத்தில் விளக்கிக்கூற,

“நீங்கள் ஏன் சாந்த நிலையில் மூழ்கினீர்கள் என்று நான் அறிவேன்..” என்றான் ந்ந்தி பெரும் புன்னகையுடன்…

அவனை சற்றே விழி உயர்த்தி பார்த்திட்ட மகாதேவன், “என்னுள் அமைதி நிறைந்துள்ளது ந்ந்தி…” என கூற,

“இல்லை… நீங்கள் என்ன கூறினாலும் நான் இன்று கேட்கமாட்டேன்… நாரத மகரிஷி என்னிடம் அனைத்தையும் கூறிவிட்டார்….” நந்தி உற்சாகத்துடன் கூற,

“நந்தி………………..” என்ற ஒற்றை அதட்டல் வார்த்தையில் கையில் இருந்த உணவையும் நீரும் கீழே போட்டான் நந்தி…

“அவர் கூறியதை நீ கேட்டாய்… எனினும், எந்த ஒரு உணர்வுகளுக்கும் என்னுள் இடமில்லை… நிகழ்பவை அனைத்தும் காலத்தின் கட்டாயம்… எனது தவத்திற்கு இது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது… எனக்கு எவரின் உதவியும் தேவைப்படாது…” என தெளிவாக கூறிவிட்டு தியானத்தில் ஆழ்ந்துவிட, நந்தியோ தான் செய்த தவறினை எண்ணி வருந்த ஆரம்பித்தான்…

சதியினையும், மகாதேவனையும் எப்படியாவது சந்திக்க வைத்திட வேண்டுமென எண்ணிக்கொண்டிருந்த நாரதரின் பார்வையில் பட்டாள் சதி….

நீரெடுக்க வந்தவள் அவரின் கண்களில் பட்டுவிட, “நினைத்ததும் தேவியின் தரிசனம் கிட்டியது… ஆஹா…” என உள்ளம் மகிழ்ந்து பூரித்திட, அப்போது அந்த வழியாக சென்று கொண்டிருக்கும் இசைக்கலைஞர்களை அவர் பார்த்திட, நொடிப்பொழுதில் சிந்தனை உதித்தது அவருக்கு…

அவர்களின் அருகில் அவர் சென்று, எங்கு செல்கிறீர்கள் என விசாரிக்க, அவர்களோ பிரஜாபதியின் அரண்மனைக்கு என்றனர்…

“அப்படி எனில் சதி தேவி தங்களைத் தான் தேடிக்கொண்டிருந்தாரா?...” என நாரதர் தன் திட்ட்த்தினை அரங்கேற்ற,

“சதி தேவி இங்கே இருக்கின்றீர்களா?... எங்கே மகரிஷி?...” என அவர்களும் அவர் விரித்த வலையில் சிக்கினர்…

“அவர்… இங்கு எங்கோ தான் இருப்பார்… அவர் வரும் வரையில் நீங்கள் என் பாட்டைக் கேளுங்களேன்…” என அவர் அழைக்க, அவர்களும் அவருடன் சென்றனர்…

ஒரு பாறையின் மீது அமர்ந்து கொண்டவர், அவர்களை தரையில் அமர சொல்லிவிட்டு, கேட்கவே முடியாத அளவுக்கு சுருதியும், ராகமும் மறந்தவராய் “ஆ,,,,,,,,,,,,,,,,,,,,,” என கத்த,

நீரெடுத்துக்கொண்டிருந்த சதியின் காதுகளில் அந்த சத்தம் கேட்க, அவளுக்கோ செவிகள் வலித்தது…

அவளுக்கே அந்நிலை என்றால், அவரின் அருகில் அமர்ந்து கேட்டுக்கொண்டிருப்பவர்களின் நிலை?....

பாவம் அனைவரும் அந்த அபசுரத்தினைக் கேட்டு, தாங்க முடியாமல், மயங்கி விழுந்தனர் ஒருவர் பின் ஒருவராய்…

ஒருவழியாய் பாடல் என்ற பெயரில் ராகத்தினை கொலை செய்துவிட்டு கண் திறந்தவர், அங்கே மூர்ச்சையாகி கிடந்தவர்களைக் கண்டு அதிர்ச்சியுற்றார்…

பின் ஒவ்வொருவரின் அருகிலும் சென்று பெயரினைக்கூறி அவர் எழுப்ப, எவரும் கண் திறக்க்வில்லை.. பின் மேகலா என்ற பெண்ணின் அருகே சென்றவர் அவளின் பெயர் சொல்லி அழைக்க, அவளோ, “நீர் வேண்டும்…” என்றாள் மயக்கத்துடன்…

நீரினைக்கொண்டு வந்தவர், அவளுக்கு அருந்த கொடுத்துவிட்டு, “என்ன நேர்ந்தது மேகலா?... ஏன் அனைவரும் மூர்ச்சையாகி போனீர்கள்?..” என வினவ, அவளோ, “தாங்கள் தான் அனைத்திற்கும் காரணம்…” என்றாள்..

“நானா?.. நான் என்ன செய்தேன்?... கேட்டு மயங்கி போகும் அளவிற்கு அற்புதமாகவா பாடிவிட்டேன்?... எனில், உங்களை மீட்பதற்கு ஏதேனும் ராகம் இருந்தால், அதனையாவது பாடி தங்களை நான் மீட்பேனே… இப்போது நான் என்ன செய்வேன்?...”

“தேவரிஷியே தாங்கள் தயவுசெய்து இனிமேலும் பாடாதீர்கள்… எங்கள் மீது கருணை காட்டுங்கள்… அனைத்து ராகத்தினையும் கேட்கவே முடியாத அளவிற்கு தாங்கள் பாடியதால் தான் நாங்கள் அனைவரும் இந்நிலைக்கு ஆளானோம்… மூர்ச்சையான இக்கலைஞர்களை எப்படியாவது காப்பாற்றுங்கள்… மகாதேவா… மகாதேவா… மகாதேவா….” என முனகி கொண்டே அவளும் மூர்ச்சையாகிவிட, நாரதரோ திகைத்துப்போனார்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.