(Reading time: 11 - 21 minutes)

"ம்..பாரு தான்,நான் டெய்லி பால் குடித்தால்,உங்களை மாதிரி ஸ்ட்ராங்க் ஆயிடுவேன்னு சொன்னாங்க!நான் ஸ்ட்ராங்காயிட்டேனாப்பா?"-மீண்டும் தன் பிஞ்சு புஜங்களை தூக்கி காண்பித்தான் அவன்.ருத்ரா கேள்வியோடு பார்வதியை பார்க்க,அவள் பதிலளிக்க இயலாமல் திணறினாள்.

"ம்..அப்பாவை விட ஸ்ட்ராங்க் ஆயிட்ட!"-என்று அவன் நெற்றியில் முத்தமிட்டான் ருத்ரா.

"சரி..வீட்டுக்கு போகலாமா?"

"வீட்டுக்கா??"-அவன் அதிர்ச்சியாக கேட்டான்.

"ம்...அதான் அப்பா வந்துட்டேனே!"

"நான் இன்னும் கொஞ்ச நாள் பாரு கூட இருக்கப்போறேன்!"

"ஏ...!அப்பா பாவம்டா!ஒரு வாரம் உன்னை பார்க்காம இருந்தேன்ல!"

"அப்போ பாருவை நம்ம கூட கூட்டிட்டு போகலாமா?"-இருவரும் சட்டென ஒரு நொடி பார்த்துக் கொண்டனர்.

"பாருவை உனக்கு ரொம்ப பிடித்திருக்கா??"

"ரொம்ப.."-ராகமாய் கூறினான் விஷ்வா.

"நாம இன்னொரு நாள் கூட்டிட்டு போகலாம் சரியா?"

"கண்டிப்பா?"

"கண்டிப்பா!"

"ஓ.கே!அப்போ நான் வீட்டுக்கு வரேன்!"-அவன் தன் தந்தையை கட்டிக்கொண்டான்.

ருத்ரா பார்வதியை நோக்க அவள்,

"உள்ளே வாங்க சார்!பையனோட டிரஸ் எல்லாம் எடுத்து வைக்க கொஞ்சம் டைம் ஆகும்!ப்ளீஸ்..அதுவரை..."-அவன் மறுப்பேதும் கூறாமல் தன் காலடிகளை முன்வைத்தான்.மௌனமாக உள்ளே சென்றவள்,முதலில் அவனுக்கு பருக தண்ணீரையும்,சிறிது பழச்சாறையும் கொண்டு வந்து கொடுத்தாள்.

"பரவாயில்லை...எனக்கு டைம் ஆகுது!"

"பத்து நிமிஷம் சார்!இதோ முடிந்துவிடும்!"-என்று தரிதமாக உள்ளே சென்றாள் பார்வதி.மனம் ஏனோ கனத்துப் போனது.ஒரு வாரமாக ஆரவாரத்தோடு இருந்த இல்லம் திடீரென்று அமானுஷ்யமாய் மாறி போனதாய் ஓர் எண்ணம் அவளுக்குள்!!அதே கனத்த இதயத்தோடு குழந்தையின் உடைமைகளை எடுத்து வைத்தாள் பார்வதி.அன்று அவன் உறக்கத்தில் பிதற்றிய வார்த்தைகள் செவிகளில் ஒலித்தன.அதன் விளைவாக இருத்துளி கண்ணீர் கன்னத்தை நனைத்தது.

கவனம் ஏதோ லோகத்தில் சஞ்சரித்திருந்தவளின் புடவை நுனி யாராலோ அசைக்கப்பட திடுக்கிட்டு திரும்பினாள் அவள்.

"பாரு!"-பாவமாய் நின்றிருந்தான் பாலகன்.

அவன் முன் மண்டியிட்டவள்,அவனது மென்மையான கேசத்தினை கோதினாள்.

"என்னடா கண்ணா?"

"நான் போக போறேன்னு அழுறீயா?"-என்று அவள் கண்ணீரை சுட்டினான்.

"அழலை...தூசி விழுந்துடுச்சு!"

"பொய் தானே சொல்ற?"

"..............."

"அழாதே!நான் சீக்கிரமா வந்து உன்னையும் என் கூட கூட்டிட்டு போறேன்!"-மனம் ஏங்கிய தாய்மையை நல்கியவளின் துயரை தாளாமல்,என்ன பேசுகிறோம் என்பதை அறியா இளம் அகவையில் அவளை ஆறுதல் படுத்தினான் விஷ்வா.அதற்கு மேலும் சமாளிக்க இயலாமல்,அவனை இறுக அணைத்துக் கொண்டாள் பார்வதி.

"ஒழுங்கா இருக்கணும் செல்லம்!அப்பாக்கிட்ட அடம் பிடிக்க கூடாது!"

"அப்போ நீ வர மாட்டியா?"

"இ...இல்லை!நான் அடிக்கடி வந்து உன்னை பார்த்துட்டு போறேன்!"

"அப்போ நீ என் கூடவே இருக்க மாட்டியா?"-அவன் அழ ஆரம்பித்தான்.

"ஏ...அழக்கூடாது!நான் தான் சொல்றேன்ல!அடிக்கடி வந்து உன்னைப் பார்த்துட்டு போறேன்!"

"என் கூடவே இரு பாரு!என்னைவிட்டு போயிடாதே!"-என்று அவளை இறுக அணைத்துக்கொண்டு கண்ணீர் வடித்தான் விஷ்வா.நிலைமையை சமாளிக்கும் உபாயம் அவள் அறியவில்லை.அவன் கண்ணீரையும் சகிக்க இயலவில்லை.நடப்பவற்றை எல்லாம் அறையின் வாயிலில் நின்றப்படி பார்த்துக் கொண்டிருந்தான் ருத்ரா.மிக குறுகிய காலத்தில் வளர்ந்த இந்தப் பந்தம் தற்சமயம் விருட்சமாய் வேரூன்றி இருப்பது அவனுக்கு வியப்பளித்து,அவன் கண்கள் அவனறியாமல் துளி கண்ணீரை சிந்தின.உண்மையில் ஒரு பெண்ணின் அன்பை பெற துடிக்கிறானா என் புதல்வன்??வினா எழுப்பியது அவன் மனம்.

"விஷ்வா!"

"அப்பா!பாருவையும் கூட்டிட்டு போகலாம்பா!"-கதறினான் அவன்.

"விஷ்வா சொன்னாக் கேளு!என்கூட வா!"

"ப்ளீஸ்பா!பாருவையும் கூட்டிட்டு போகலாம்!"

"பாருவால வர முடியாது விஷ்வா!"

"ஏன்?"-அவனுக்கு என்ன பதில் அளிப்பது என்றே புரியாமல் போனது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.