(Reading time: 13 - 25 minutes)

நாரத மகரிஷி கயிலாயபர்வதம் வந்து நந்தியைத் தேட, இரு சீடர்களும் நடந்த கதையை கூறி, மகாதேவன் நந்தியை சிலாதனுடன் அனுப்பிவிட்டார் என்றும் கூற, நாரதரோ அதிர்ச்சியடைந்தார்…

விரைந்து சென்று மகாதேவனை சந்தித்தவர், “நந்தி இல்லாத இப்பர்வதம், மற்றும் தாம், இரண்டையும் கற்பனை செய்து கூட பார்த்திட முடியவில்லை என்னால்… நான் தங்கள் இரு சீடர்களின் வழி கேள்வியுற்றது நிஜம் தானா மகாதேவா?...” எனக் கேட்டிட,

“நந்தி தன் தகப்பனான சிலாதனுக்கு சேவை மற்றும் பணிவிடை செய்வது அவசியம்….” என்றான் மகாதேவன்…

“நந்தி தம்மை விட்டு இருக்க இயலாதவன் என்பது தமக்கும் தெரியுமே?... அதுமட்டுமின்றி அவனுக்கு தங்களுக்கு சேவை செய்வதை தவிர வேறொன்றும் தெரியாதே…”

நாரத மகரிஷி சொல்லிக்கொண்டிருக்கையில், சிலாதன் ஓடிவந்து மகாதேவனை தஞ்சம் அடைந்தான்…

“மகாதேவா… காப்பாற்றுங்கள் பிரபு… என் மகனை மீண்டும் ஏற்றுக்கொள்ளுங்கள்… அவன் இங்கிருந்து வந்த்திலிருந்து சதா உங்கள் நினைவாகவே இருக்கிறான்… பசியாறவில்லை… ஒரு துளி நீர் கூட அருந்தவில்லை.. எப்பொழுதும் உயர ஆகாயத்தைப் பார்த்தபடி சிலையாக இருக்கிறான்… கயிலாய பர்வதத்தினை மற என்று அறிவுரை கூறினேன்… எனினும் அவனது சிந்தையிலிருந்து அது அகலாது என்று தற்போது தெரிந்து கொண்டேன்… நான் செய்த தவறை மன்னித்து என் மகனை மீண்டும் ஏற்றுக்கொள்ளுங்கள் மகாதேவா…”

சிலாதன் கண்ணீர் மல்க கூற,

“தவறு எனதே… நந்திக்கு நான் பெறும் வேதனை அளித்துவிட்டேன்… என் மனதிற்கு இனிய சேவகன் நந்தி என் புதல்வனுக்கு சமம்…” என்றான் மகாதேவன் அவரினைப் பார்த்து…

சிலாதனின் இல்லத்தில், கவலையோடு அமர்ந்திருந்த மகனை, தகப்பன் அழைக்க, அவனோ தனக்கு பசிக்கவில்லை எனவும் பசித்தால் நிச்சயம் உண்பேன் எனவும், அதுவரை என்னை தனிமையில் இருக்கவிடுங்கள் எனவும் எங்கோ வெறித்து பார்த்தவாறு கூற, அங்கே வந்தார் நாரத மகரிஷி…

“நந்தி….” நாரதர் அழைப்பு காதில் கேட்டும், அவன் திரும்பாமலே, வணக்கம் கூற, “இதென்ன நந்தி… என்னைப் பார்க்காமல் கூறிய வணக்கத்தினை நான் எப்படி ஏற்றுக்கொள்வது?...” என கேட்டார் நாரதர்…

“மன்னித்துவிடுங்கள் மகரிஷி…” என்றவன் எழுந்து, கைகூப்பி அவரை வணங்கிவிட்டு, அவரைப் பார்த்தான்…. அவரைப் பார்த்ததும் என்ன புரிந்ததோ அவனுக்கு, “மகரிஷி தாம் கயிலாய பர்வதத்திலிருந்து தான் வருகிறீர்களா?..” எனக் கேட்டான் சற்றே புன்னகை உதிக்க…

“ஆம்…” என்று அவர் கூற, “எனில் என் மகாதேவர் எப்படி இருக்கிறார்?... அவரின் நிலை என்ன?...” என வினவினான் அவன் ஆவலோடு…

அவன் கேட்ட கேள்விக்கு புன்னகை பூத்த நாரதர், பதிலேதும் சொல்லாமல் தன் எதிரே கை காட்ட, அங்கே நின்றிருந்தான் மகாதேவன்…

அவனைக் கண்டதும் அகமும் புறமும் மலர, மகாதேவனை ஓடி வந்த நந்தியின் கால்கள் சட்டென நின்றது… சில நொடிக்குப் பின், தானாக பின் வாங்கி, முகத்தினை அவன் உம்மென்று வைத்துக்கொண்டு நின்றான் எதுவும் பேசாமல்…

“நந்தி… நீ இல்லாமல் கயிலாயமே சோகத்தில் ஆழ்ந்தது… மகாதேவரும் நீ இல்லாது துன்பம் கொண்டார்… அதனால் வேறு வழியின்றி அவரே உன்னைக் காண வந்தார்….” நாரத மகரிஷி கூற, அவனோ பதிலே பேசவில்லை…

“மகனே… என்ன நேர்ந்தது உனக்கு?... இத்தனை நாட்கள் மகாதேவா என அவரது பெயரையே உச்சரித்தாய்… இப்பொழுது அவர் வந்திருக்கும் பொழுது தயக்கம் ஏன்?... செல்… சென்று அவரை வரவேற்று அழைத்து வா மகனே… செல்…”

சிலாதன் மகனிடம் கூற, அவன் அதற்கும் பதில் கூறவில்லை…

ந்ந்தியின் வாட்டமான முகத்தை கவனித்த ம்காதேவன் தானே முன்வந்து ந்ந்தியின் அருகில் சென்றான்…

“நந்தி… என் மீது அவ்வளவு கோபமா உனக்கு?... என்னிடம் உரையாட கூட உனக்கு மனமில்லையா?... என்னைக் கண் கொண்டு பார்த்திடவும் விரும்பவில்லையா நீ?.. தவறிழைத்த்து நான் தான் நந்தி… என்னை நீ மன்னிக்க மாட்டாயா?... என்னோடு நீ நமது இல்லமான கயிலாய பர்வதத்திற்கு திரும்பி வர மாட்டாயா?...”

மகாதேவன் நந்தியைப் பார்த்தவண்ணம் கேட்க, அவனருகில் வந்த நந்தி, “என்னை மன்னித்துவிடுங்கள் பிரபு… என்னால் தம் மனம் வேதனை அடைந்தது… என்னால் தானே தாம் இவ்விடம் வர நேர்ந்தது…. மன்னித்துவிடுங்கள் என்னை…” என்றான் கைகூப்பி அழுதுகொண்டே…

“நந்தி… நீ அங்கே வர மறுத்தால், நானும் இங்கேயே இருந்துவிடுகிறேன் உன்னருகில்… உன்னோடே…”

மகாதேவன் கூறிய வார்த்தைகள் அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்த, “நிச்சயம் கயிலாய பர்வதம் வருகிறேன் பிரபு…” என்ற நந்தியின் முகத்தில் மகிழ்ச்சி நிறைந்திருந்தது…

“உன்னைப் போன்ற ஒரு சிறந்த பக்தன் எனக்கு யாருமில்லை… மற்றவர்களைக் காட்டிலும் நீயே எனக்கு அதீத பிரியமானவன்… இன்று உனக்கு நான் ஒரு வரம் அளிக்கிறேன்… பக்தர் எவராவது உனது செவிகளில் தங்களது வேண்டுதல்களை கூறினால், அவ்வேண்டுதல் நேரடியாக என்னை வந்து சேரும்…”

அவன் கண்ணீருடன் அவ்வரத்தினைப் பெற்று வணங்கினான் மகாதேவனை… பின் சிலாதன் அருகில் சென்று அவரிடம் மன்னிப்பை வேண்ட, அவரோ, “உன்னைப் போன்ற மகன் கிடைக்க நான் பெரும் பாக்கியம் செய்தவன்… மகாதேவர் உன் மீது எவ்வளவு பிரியம் வைத்திருக்கிறார்!!!!.... செல் மகனே… உன் மகாதேவரோடு செல்… கயிலாய பர்வதத்திற்கு செல்… அங்கு நீ அவருக்கு ஆற்றும் சேவையினை எனக்கு செய்வதாய் நான் உணர்வேன்…” என கூற, தகப்பனின் காலில் விழுந்து வணங்கி அவரது பூரண ஆசியைப் பெற்றான் நந்தி…

தொடரும்...!

Episode 47

Episode 49

{kunena_discuss:1001}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.