இரண்டாம் முறையாக வாசலில் கேட்ட அழைப்பு மணியோசை, செல்வியின் சிந்தனையைக் கலைத்தது. புடவைத் தலைப்பில் விழிகளைத் துடைத்துக் கொண்டவள் வாசலை நோக்கி விரைந்தாள். அதற்குள் தையற் கூடத்தின் உள்ளிருந்து அவள் அம்மாவும் வெளியே வந்தாள்.
“தமிழ், இவ்வளவு நேரம் என்ன பண்ற, சீக்கிரம் கதவ திற, “இலா”வாதான் இருக்கும்” – வனிதா
“ஏம்மா, அண்ணா இராத்திரி வீட்டுக்கு வரலையா” – என்றவாரே வாசலுக்கு விரைந்தாள் செல்வி.
இளமாறன். நல்லப் படிப்பும் அறிவும் கூடவே நல்லொழுக்கமும் நிறைந்த ஆண்மகன். அவனது படிப்பிற்கும் அறிவிற்கும் ஏற்ற உத்யோகம் இன்றி, நிரந்திரமான பணியேதுமில்லாது இருப்பவன். வனிதா வின் மகன், செல்வியின் அண்ணன். துடிப்பானவன் நேர்மையானவன். அன்னையின் வார்த்தையை தட்டாதவன். சிறு வயதில் தந்தையை இழந்து தாயுடன் தனித்து வளர்ந்த காரணத்தினால் பொறுப்புகளை வரிந்து சுமக்கும் இயல்பினன். தன் தங்கை தமிழ் செல்வியை கண்ணுக்கு கண்ணாக நினைப்பவன். எல்லாவற்றிற்கும் மேல், நம் காவ்யாவை இடித்து அவளது திருக்கரத்தால் “தரும” அடியையும் வாங்கிக்கொண்டாவன்.
“அண்ணா, உன்னதான், இராத்திரி எங்கப்போன? “ – செல்வி
“இன்டர்வ்யூ” – இளமாறன்
“பொய், எங்கயோ ஊர சுத்தப்போயிருக்க!” – செல்வி
அவளை முறைத்தவன், முகம் கழுவி உடை மாற்றி வந்தான். “அம்மா இந்தக் கவர்ல செயின் இருக்கு! செல்விகிட்ட காட்டுங்க, ‘விக்னேஷ்’ வீட்டில இருந்து வரும்போது அவள போட சொல்லுங்க!” – இளமாறன்
அவன் நீட்டிய கவரை, வாங்கி தன் மகளிடம் கொடுத்தாள் மகனது முகம் வாடியிருந்தது, அதனால் வனிதாவிற்கு மனம் எதிலும் ஓடவில்லை. செல்விக்கு அதைப் பிரித்துப்பார்க்கும் ஆர்வமில்லை. மற்றொரு சமயமாய் இருந்தால் அவள் அதை தலையாயக் கடனாய் நினைத்து முதலில் அணிந்து பார்த்திருப்பாள், அவள் மனம் அங்கில்லை, வனிதா நீட்டியக்கவரை அப்படியே பீரோவிற்குள் திணித்துவிட்டு சென்றுவிட்டாள்.
“இலா, ஏண்டா ஒருமாரி இருக்க?, வேலையில ஏதாவது பிரச்சனையா?” – வனிதா
இளமாறனுக்கு மாலில் நடந்தது ஞாபகம் வந்தது, வேறு எந்தா நிகழ்வாய் இருந்தாலும் அதை நிச்சயம் தாயிடம் பகிர்ந்திருப்பான். இதை எவ்வாறு சொல்வது? மனதில் அதை நினைத்துக்கொண்டே பதிலளித்தான்.
“ஒன்னுமில்ல அம்மா, வேலை தான் பிரச்சனை. சீக்கிரமா வேரொரு நல்ல வேலைக்கு மாறிடுவேன், நீங்க இந்த தையல் தைக்கிறத விடுங்கம்மா, அத பாக்கும்போதெல்லாம் எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு!, போததற்கு இந்த செல்வி வேற, அவள முதல்ல வேலையை விட சொல்லுங்க!”
“நல்லாயிருக்குடா நீ சொல்றது, உன்ன மாதிரி அவளும் நல்ல படிச்சா, மார்க் வாங்கினா, நம்ம நேரம் அவளை டாக்டருக்கு தான் படிக்க வைக்க முடியல, இப்ப அவளுக்கு பிடிச்ச மாதிரி அந்தத் துறையிலேயே நர்ஸா ஆயிட்டா, விருப்பப்பட்டு செய்ற காரியம் என்னைக்கும் சுமை இல்லடா, அவ பிடிச்சுதான் வேலைக்குப் போறா.. என்ன இந்த நைட் ஷிஃப்ட்டு தான்.. அது கூட சீக்கிரம் மாறிடும்னு சொல்ரா…அவளை விடு நாளைக்கு கல்யாணம் ஆன பின்னாடியவ பாடு அவ புருஷன் பாடு..”
“அம்மா நான் என்ன சொன்னேன் நீங்க என்ன சொல்றீங்க.. செல்விய விடுங்க.. நீங்க முதல்ல தைக்கிறத விடுங்க.. இப்படி உங்களப் பார்க்க எனக்கு கஷ்டமா இருக்கு!”
“இலா, என்னடா இது, காலையிலேயே ஏன் இன்னிக்கு இப்படி பேசுற, இதில எனக்கு எந்த கஷ்டமும் இல்ல, எனக்கு பழகின விசயம், கண் பார்த்து கை செய்யப்போறது.. உங்க இரண்டு பேரையும் கவனுச்சுகிறது மாதிரிதான் எனக்கு தைக்கிறதும், இருபது வருஷம உங்க இரண்டு பேரையும் வளர்க்க உதவின தொழில்டா, நீங்க இரண்டு பேரும் நிலைச்சு நிக்க, நாம யார்கிட்டேயும் கையேந்தாம வாழ வழி செஞ்ச தொழில் நாம வணங்கிற தெய்வத்திற்கு இணையானது. இன்னிக்கு நமக்கு எந்த கஷ்டமும் இல்லனு சாமி கும்பிடுறத நிறுத்திட்டோமா என்ன அத மாதிரிதான்..இதுவும்…சாகுற வரைக்கும் நான் தைப்பேன்” - வனிதா
வனிதா இந்த வார்த்தையை சொல்லும்போது இளமாறனின் இதயம் கரைந்தது. அவன் வனிதாவின் வாயைப்பொத்தினான். “அம்மா உங்களுக்கு நூறு ஆயுசு, இனிமே இப்படி பேசாதீங்க… உங்கள மாத்த முடியாதுனு தெரியும்…!” – இளா.
இளமாறனுக்கும் செல்விக்கும் இந்த போராடும் குணம் வனிதாவிடமிருந்து வந்ததுதான். இளவயதில் அவள் செய்துகொண்ட காதல் திருமணம் அவள் குடும்பத்தை அவளிடமிருந்து பிரித்தது. செல்வந்தன் ஆனா அவள் கணவனும் அவளுக்காக குடும்பத்தை துறந்து அவளுடன் வந்தான். இளமாறன் பிறந்து இரண்டு வயதுவரை அவர்களது வாழ்கை சலனமின்றிதான் இருந்தது. வனிதா தமிழ்செல்வியை கருவுற்றிருக்கும்போது வனிதாவின் கணவன் ரகுவின் தந்தை உயிருக்கு போராடுவதாய் தந்தி வர, அவசரமாய் சென்றவன் தான் திரும்பி வராது போனான். செல்வி பிறந்து மூன்று மாதங்களில் இரண்டு கைக்குழந்தைகளுடன் கணவனின் இல்லம் தேடி சென்றாள், அங்கே அவளுக்கு கிடைத்ததெல்லாம் அவமானம் ஒன்றுதான், கடைசிவரையில் அவர்கள் ரகுவை வனிதாவின் கண்ணில் காட்ட மறுத்துவிட்டனர். கெஞ்சி, கூத்தாடி அவள் வெகுநேர போராட்டத்திற்கு பின், ரகுவிற்கும் மற்றோரு செல்வந்தரின் மகளுக்கும் திருமணமான செய்தி கிடைத்தது. அதிர்ந்து உடைந்து போனாள். அவள் காதல், இதயம் அன்றே உடைந்து போனது. உயிரை மாய்த்துக்கொள்ள வழியில்லை, விபரம் அறியாத இளமாறனிடமும், பச்சிழம் பெண் குழந்தையை அவள் எவ்வாறு விட்டுப்போவாள். சாவதற்கும் வழியற்று போக, இறுதியில் தன் தமையனின் உதவியோடு தான் தையற் வாழ்வை தொடங்கினாள். அன்றிலிருந்து அவள் இயந்திர வாழ்கை ஓடிக்கொண்டு தான் இருக்கிறது. பல ஏற்ற தாழ்வுகளை அவள் சந்தித்து விட்டாள். அவளைப் பொறுத்தவரை, செல்வியின் திருமணமும், இளமாறனின் உயரிய உத்யோகமும் மட்டுமே அவள் ஆயுள் விருப்பம் அதை சுற்றி மட்டுமே அவள் சிந்தனை ஓட்டம் முழுவதும்…