(Reading time: 14 - 28 minutes)

"சார் நீங்க?"

"ம்...மாயா ஃப்ரண்ட்!அவளுக்கு உடம்பு முடியலை!அதான் கூட வந்தேன்!"

"உங்க பெயர்...?"

"ராணா!"-பதில் அளித்துவிட்டு உள்ளே சென்று காரை நிறுத்தினான்.

சத்தம் கேட்டு எட்டிப் பார்த்தாள் தேவசேனா.மாயாவை தாங்கியப்படி உள்ளே நுழைந்தவனை கண்டதும் அதிர்ச்சியால் அவள் விழிகள் விரிந்தன.

"என்னாச்சு?"

"ஒண்ணுமில்லை..பதறாதீங்க..லேசா மயங்கிட்டா!"

"நீங்க யாரு?"

"ஆ...நான்..அது..வந்து!!என் பெயர் ராணா!"-அவன் திணறிய திணறலில் அவள் முகம் மலர்ந்தது.

"மாயா ரூம் எங்கே இருக்கு?"

"மேலே...இரண்டாவது ரூம்!"

"தேங்க்ஸ்!"-மீண்டும் குழந்தையை போல் அவளை தூக்கிக் கொண்டான் ருத்ரா.ஆனால்,மெய் யாதனெனில் மாயாவின் நிலையினால் உருவான பதற்றத்தாலும்,ருத்ராவின் திணறலால் ஏற்பட்ட யூகத்தால் உருவான பூரிப்பாலும் மாயாவின் தந்தையின் அறைக்கு வழி கூறி இருந்தாள் அந்நங்கை.நேர்த்தியாக வடிக்கப்பட்டிருந்த அறையின் மெத்தையில் அவளை உறங்க வைத்தான் ருத்ரா.உறக்கத்தில் மாயாவின் கரங்கள் மாலையை போல் ருத்ராவின் கழுத்தை சுற்றி வளைத்து அவனை அவளுக்கு நெருக்கத்தில் வைத்தன.

"அப்பா!"-உறக்கத்திலே பிதற்றினாள் அவள்.அவளது செயலால் உருவான அதிர்ச்சியில் உறைந்துப் போயிருந்தான் ருத்ரா அவள் மனநிலையை யூகிக்க மறந்து!!உறக்கத்திலே மெல்ல புன்னகைத்தாள் அவள்.அதே உறக்கத்தில் என்ன செய்கிறோம் என்பதை அறியாமல் ருத்ராவின் கன்னத்தில் மெல்ல முத்தமிட்டாள் அவள்.அவ்வளவு தான்!அவன் உலகமே சுழல மறந்துப்போனது!

"ப்ளீஸ்பா!என்னைவிட்டு போகாதீங்க!"-உண்மையில் மாயாவின் சொப்பனத்தில் விளைந்தது அவளது சிறு வயது நினைவுகள்!ஆனால்,அவளறியாமல் அவற்றை செயல்படுத்தி கொண்டிருந்தாள் அவள்.அதனை ஊகித்தவன்,அவளது கட்டிலிருந்து தன்னை மனமில்லாமல் விடுவித்தான்.அவளது கரத்தோடு தன் கரத்தைப் பிணைத்தவன்,அவளது கேசத்தினை கோதிவிட்டான்.மௌனங்கள் மட்டுமே அங்கு உரையாடிக் கொண்டிருந்தன...

காலம் கடக்க,அவளது நெற்றியருகே குனிந்தவன்,பின்,என்ன நினைத்தானோ மௌனமாய் விலகினான்.

"திரும்ப வருவேன்!அன்னிக்கு இதுமாதிரி அமைதியா இருக்க மாட்டேன்!உன்னால எவ்வளவு முடியுமோ பிடிவாதம் பிடித்துக்கோ!அப்பறம்,அது உன் கூட வாழ நான் விடமாட்டேன்!"-மனமின்றி அவளது கரத்தினை விடுவித்து எழுந்தான்.ஏதோ எண்ணத்தில் அவள் முகத்தை பார்த்தப்படி வெளியேற முயன்றவனின் காலில் இடித்தது பாதி திறந்திருந்த அந்த மேசை அலமாரி!!

கவனம் திசை மாறியதும்,திறந்திருந்த அலமாரியை மூடி குனிந்தவனின் பார்வையில் பதிந்தது அந்த நாட்குறிப்பும்,அதனோடு இருந்த பென்டிரைவ்வும்!!

அந்நாட்குறிப்பை எடுத்து பிரித்துப் பார்த்தான்.

மகேந்திரகுமாரின் கையெழுத்து முதற்பக்கத்தில் பதிந்திருந்தது.நீண்ட பெரும் தயக்கம்!!மேற்கொண்டு பக்கங்கள் திருப்ப அவன் மனம் தடையிட்டது!எனினும்,ஏதோ ஒன்று அச்செயல் ஆற்ற அவனை தூண்டியது.ஏதோ ஒன்று உண்மையில் அதில் ஔிந்திருக்க,ஐம்பூதங்களில் ஒன்றான காற்றானது,தானே பக்கங்களை திருப்பியது.அவனது மனதின் தடையை ஏதோ ஒன்று உடைத்தொழிக்க,அந்நாட்குறிப்பையும்,பென்டிரவ்வையும் எடுத்துக் கொண்டு கிளம்பினான் ருத்ரா.

யார் அறிவார்?மாயாவின் மனவேதனையின் ஒட்டுமொத்த மருந்தையும் ஆற்றும் மருந்தை அவள் தந்தை அதில் அளித்திருக்கலாம்!!

நேராக வீட்டிற்கு வந்தவன்,யாரையும்,எதையும் கவனிக்காமல் தனதறைக்குள் ஓடி கதவை மூடி தாழிட்டான்.

இதுவரையில் எந்த ஒரு சந்திப்பும் இல்லாத நிலையிலும் மகேந்திரனின் மேல் தனித்துவமான அன்பும்,மரியாதையும் வளர்ந்துப்படி சென்றன...

சோபாவில் அமர்ந்தவன்,அந்த நாட்குறிப்பை பிரித்துப் படித்தான்.அனைத்தும் காயத்ரி கூறியப்படி எழுதப்பட்டிருந்தன.அதிலும் மேலாக,காயத்ரியின் மேல் அவர் வைத்திருந்த காதல் ஒவ்வொரு அசையிலும்,எழுத்திலும் தனித்துவமாய் தெரிந்தது.மாயாவின் மேல் அவர் கொண்ட அன்பு,இதுதான் தந்தையன்பா?என்று ருத்ராவை மலைக்க வைத்தது.மூன்று மணிநேரம் உறக்கத்தை தொலைத்து அதை புரட்டியவன்,இறுதிப் பக்கத்திற்கு வந்தான்.அதில் செதுக்கப்பட்டிருந்த மொழிகள் கடிதமாய் உருவெடுத்திருந்தன.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.