(Reading time: 11 - 22 minutes)

“அபப்டிங்கற பார்ப்போம்” எல்லோருக்குமாக காபி டிபன் எடுத்து வந்தவர் வருண் வர்ஷினி இருவருக்கும் பரிமாறி விட்டு கணவரிடம் இன்னும் ஏதேனும் வேண்டுமா என்று கேட்டார்.

“அம்மு கையாள பரிமாறினதே வயிறும் மனசும் நிறைஞ்சு போச்சு லக்ஷ்மி. என் பொண்ணு சமத்து” மிகுந்த பூரிப்புடன் அகமகிழ்ந்து சொன்னார் ராமச்சந்திரன்.

“நீங்க தான் என்னை மெச்சிக்கனும். இந்த ஸ்ரீதர் என்னைய எப்படி கேலி பண்ணான் தெரியுமா” வர்ஷினி பாவம் போல முகத்தை வைத்துக் கொண்டு சோகமாக சொல்லவும் லக்ஷ்மியும் வருணும் ரகசியம் பேசிக் கொண்டனர்.

“இப்போ எதுக்குடா இவ ஸ்ரீதரை இழுக்குறா”

“அம்மா என்னமா நீங்க சுவாரசியமான சீன்ல டிஸ்டர்ப் பண்ணிட்டு இருக்கீங்க. ஒழுங்கா டிராமாவ பாருங்க மா” வருண் சீரியசாக சொல்லவும் லக்ஷ்மிக்கு சிரிப்பை அடக்க வெகு சிரமமாகப் போனது.

“ஸ்ரீதர் உன்ன கேலி செஞ்சானா. எதுக்குடா அம்மு” ராமச்சந்திரன் சீரியசாக கேட்கவும் அதை விட சீரியசாக முகத்தை வைத்துக் கொண்டாள் வர்ஷினி.

“அவன் அடுத்த மாசம் யு எஸ் போறான்ல மாமா. நீ கோல்ட் மெடல் வாங்கினன்னு ரொம்ப பெருமை பட்டுக்காத. நான் யுஎஸ் போறேனே. அங்க போய் பெரிய ப்ராஜெக்ட் எல்லாம் செய்வேன். நீ குண்டு சட்டியில குதிரை ஓட்டிட்டு இருன்னு கேலி பண்ணான்”

“அப்படியா சொன்னான். ஏன் அம்மு உனக்கு யுஎஸ்ல ப்ராஜெக்ட் கிடைக்கலையா”

“எனக்கு தான் ஃபுல் ஸ்காலர்ஷிப்போட கிடைச்சுதே. அவனுக்கு ஹாஃப் ஸ்காலர்ஷிப் தான்”  வர்ஷினி தன் சட்டை காலரை பெருமையாக தூக்கி விட்டுக் கொண்டாள்.

“அம்மு இதை ஏன் நீ முதல்லேயே சொல்லலை. அப்புறம் ஏன் அவன் உன்ன கேலி செய்யறான்” புரியாமல் சந்தேகமாகக் கேட்டார்.

“நான் தான் ப்ராஜக்ட்ல சேரலன்னு சொல்லிட்டேன்ல அதுக்குத் தான் அப்படி சொன்னான்”

“நீ ஏன் அம்மு சேரலன்னு சொன்ன”

“ப்ராஜெக்ட் யுஎஸ் ல மாமா. நான் எப்படி மாமா உங்கள விட்டு ஒரு வருஷம் பிரிஞ்சு இருப்பேன்” இதை சொல்லும் போது எழுந்து வந்து ராமச்சந்திரனின் கழுத்தைப் பின்னாலிருந்து கட்டிக் கொண்டாள்.

“உங்களை அத்தையை அண்ணாவை நம்ம தோட்டத்து வொயிட் ரோஸ் செடியை நம்ம ஊஞ்சலை எல்லாத்தையும் விட்டுட்டு எப்படி மாமா போவேன்...அதான் வேண்டாம்னு சொல்லிட்டேன்” வர்ஷினி சொல்லவும் ராமச்சந்திரன் சிந்தனை வயப்பட்டார்.

“டேய் என்னமா கதை அளக்கறா” லக்ஷ்மி வாயைப் பிளக்காத குறை தான்.

“நடமாடும் ஆஸ்காரே யுஎஸ் போகப் போகுதுமா” வருணுக்கும் ஆச்சரியமே. அவள் ஏதாவது சென்டிமென்டல் டயலாக் பேசி கரைத்து விடுவாள் என்று தான் எதிர்பார்த்திருந்தான். ஆனால் இப்படி ஒரு கதையை பின்னி பெடல் எடுப்பாள் என்று நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.

“அம்மு இங்க பாருடா. எவ்வளவு நல்ல வாய்ப்பு உனக்கு கிடைச்சிருக்கு. அதை நீ வேணாம்னு சொல்லலாமா. யுஎஸ் என்ன வேற கிரகத்துலயா இருக்கு. இதோ ப்ளைட் பிடிச்சா ஒரே நாள்ல நீ இங்க வரலாம். இல்ல நாங்க அங்க வரலாம். இப்படி ஒரு பெஸ்ட் சான்ஸ் கிடக்கிறதை வேண்டாம்னு சொல்ல கூடாது அம்மு”

ராமச்சந்திரன் சொல்லவும் வேண்டா வெறுப்பாக தலையை ஆட்டினாள் வர்ஷினி. லக்ஷ்மியும் வருணும் நமுட்டு சிரிப்புடன் அவளை பார்க்கவும் அவர்களைப் பார்த்து முறைத்தாள்.

“ஹும்கும் நான் போகல மாமா. எனக்கு உடம்பு சரியில்லாம போச்சுன்னா... என்னை  யார் கவனிப்பாங்க. எனக்கு பயமா இருக்கும்”

“அம்மு தைரியசாலி ஆச்சே. இதுக்கெல்லாம் பயப்பட கூடாது குட்டிம்மா” என்று சமாதானம் செய்தவர் “வருண்” என்று மகனை அழைத்தார்.

ஒன்றுமே தெரியாதவன் போல “என்னப்பா” என்றான் வருண்.

“அம்முக்கு இப்போ எல்லாமே நார்மல் தான்னு சொன்னியே”

“ஆமாம்பா எல்லாம் நார்மல் தான் ஷி இஸ் பர்ஃபெக்ட்லி ஹெல்தி”

“பாரு அம்மு உனக்கு ஒன்னும் இல்ல. நீ யுஎஸ்ல போய் நிறைய விஷயங்கள் தெரிஞ்சுட்டு வந்து உன்னோட ட்ரீம் ஹாஸ்பிடல பெஸ்ட்டா கட்ட வேண்டாமா” ராமச்சந்திரன் அவளை யுஎஸ் போ போ என்று கெஞ்சிக் கொண்டிருந்தார்.

“என்ன லக்ஷ்மி சும்மா உக்காந்து வேடிக்கை பார்த்துட்டு இருக்க. அம்மு பாரு நம்மள எல்லாம் பிரிஞ்சு இருக்க முடியாதுன்னு சொல்லி நல்ல சான்ஸ் மிஸ் செய்றா. அவளுக்கு எடுத்து சொல்ல மாட்டியா. இல்ல நீயும் அவளுக்கு சப்போர்ட் பண்ணிட்டு இருந்தியா” ராமச்சந்திரன் மனைவியை அதட்டவும் லக்ஷ்மியோ  மனதினுள்ளேயே பொருமினார்.

“என்னவோ இவரு மருமகள போகாதேன்னு நான் தான் பிடிச்சு இழுத்து வச்சுக்கிட்டு இருக்க மாதிரில என்னை அதட்டுறார் உன் அப்பா” வருண் தான் பாவம் உரலில் அரைபட்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.