(Reading time: 11 - 22 minutes)

“அதெல்லாம் நீங்க சொல்லி அம்மு கேக்காம போறதா. இப்போவே அமெரிக்கா போறதுக்கு மூட்டை முடிச்செல்லாம் கட்டிருவா. என்ன அம்மு” லக்ஷ்மி கேலி தொனியுடன் வர்ஷினியைப் பார்த்து சொல்லவும் அதற்கெல்லாம் அசந்து விடுவாளா என்ன.

“என்ன அத்தை நீங்களும் இப்படி சொல்றீங்க” செல்லம் கொஞ்சி கொண்டு போக மாட்டேன் என்பது போல சிணுங்கினாள்.

அன்று மதியம் தான் லக்ஷ்மியிடமும் வருணிடமும் கெஞ்சிக் கொண்டிருந்தாள். ராமச்சந்திரன் அவளை தனியாக அவ்வளவு தூரம் தனியே ஒரு போதும் அனுப்ப மாட்டார் என்றே தான் அனைவரும் நினைத்திருந்தனர்.

அத்தையும் அண்ணனும் ஜகா வாங்கிக் கொண்டுவிட்டதால் தானே தான் மாமாவிடம் பேசி சாதிக்க வேண்டும் என்று மனதிற்குள் ப்ளான் செய்தாள் வர்ஷினி.

ஆனாலும் அவளுக்கு அவ்வளவாக நம்பிக்கை இல்லை தான். மாமா மறுத்தால் உண்ணாவிரதம் மௌன விரதம் போன்ற உத்திகளை கையாள வேண்டும் என்றே நினைத்திருந்தாள்.

ஆனால் முற்றிலும் எதிர்பாராத விதத்தில் ராமச்சந்திரன் அவள் யுஎஸ் சென்று கற்று தேர்ந்து வர வேண்டும் என்று அவரே அவளை கட்டாயப்படுத்தி அனுப்பி வைக்கும் நிலையாய்  மாறிப்  போனது மூவருக்குமே வியப்பு தான்.

ராமச்சந்திரன் அங்கிருந்து சென்றதும் தக்க தையா தையா என்று ஆகாயத்தில் குதித்துக் கொண்டிருந்தாள்.

என்ன தான் மகிழ்ந்தாலும் உள்ளுக்குள் சிறிது கலக்கமாக தான் உணர்ந்தார் லக்ஷ்மி.

‘அம்மா கூல். அவ நியூயார்க்கையே விலை பேசிட்டு வந்திருவா. நீங்க சஞ்சலப்படாதீங்க”

“இவ இங்க இருக்குற மாதிரி அங்கேயும் போய் விளையாட்டு தனமா இருந்தா எப்படி. எங்க இருந்து தான் இவளுக்கு இப்படி ஒரு துடுக்குத்தனம் வந்தததோ. கெளரி அவ்வளவு அமைதி. இவள் நேர் எதிர்”

“எல்லாம் தனியா வெளியூர்ல இருந்தா பொறுப்பா ஆகிடுவா” தைரியம் சொன்னான் வருண்.

தனது தங்கையை முழுமையாக அறிந்தவன் அவன் தானே. காயத்ரி விஷயத்தில் அவளது பொறுப்பான பேச்சும் பொறுமையான நேர்த்தியான அணுகுமுறையும் அவனே வியந்த ஒன்றாயிற்றே.

“அண்ணா நான் யுஎஸ்ல இருந்து வந்ததும் பர்ஸ்ட் நம்ம ஹாஸ்பிடல் கட்றோம். அப்புறம் அத்தை மாமாகிட்ட சொல்லி அண்ணியை கட்றோம்” பெட்டிகளை வருண் அடுக்கி வைக்க மேஜை மீது அமர்ந்து கால்களை ஆட்டியபடியே வாயடித்துக் கொண்டிருந்தாள்.

“ஹே லூசு. சத்தமா உளறி வைக்காத” வருண் சுற்றும் முற்றும் பார்த்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ளவும் வர்ஷினி கலகலவென சிரித்தாள்.

“பயந்தாங்கொளி அண்ணா. நானெல்லாம் லவ் பண்ணேன்னு வை அதிரடி அட்டாக் தான். அத்தை மாமாகிட்ட மீட் மை லவ்வர்ன்னு இன்ட்ரோ செய்வேனாக்கும்”

“அதையும் பார்ப்போம்”

வர்ஷினி யுஎஸ் செல்லும் நாளும் விடிந்தது.

அது வரை துள்ளி குதித்துக் கொண்டிருந்தவள் ஏர்போர்ட் போகும் வழி முழுவதும் இஞ்சி தின்ற குரங்கை போல உம் என்று முகத்தை வைத்துக் கொண்டு வந்தாள்.

ஏர்போர்ட் அடைந்ததும் பெட்டிகளை எல்லாம் எடுத்து வைத்ததும் லக்ஷ்மி ராமச்சந்திரன் பாதங்களை பணிந்து வணங்கினாள்.

அங்கே அணை உடைந்து வெள்ளம் கண்களில் இருந்து புறப்பட்டு ஆறாக வழிந்து சென்னை விமான நிலையத்தில் அபாய அறிவிப்பு கொடுக்கவிருக்கும் தருவாயில் ஸ்ரீதர் தனது குடும்பத்தினரோடு வந்து சேர்ந்தான்.

 “ஸ்ரீதர் நீ கூட போற தைரியத்தில் தான் வர்ஷினியை அனுப்பி வைக்கிறோம். உங்க ரிலேடிவ்ஸ் நிறைய பேர் அங்க இருக்கிறதா உன் அப்பா சொன்னார். எங்க அம்முவை பத்திரமா பார்த்துக்கோ பா” ராமச்சந்திரன் ஸ்ரீதரின் கரங்களைப் பிடித்துக் கொண்டு சொல்லவும் வர்ஷினி இன்னும் தன் அத்தையின் தோளில் சாய்ந்து விசும்பிக் கொண்டு தான் இருந்தாள்.

சரி என்று தலையாட்டிய ஸ்ரீதர் ‘ இவளை நான் பார்த்துக்குறதா. விட்டா காபி வித் ஒபாமான்னு ஷோ நடத்திட்டு இருப்பா’ என மனதில் நினைத்துக் கொண்டான்.

“ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் துணையா இருக்கட்டும். என் அண்ணா குடும்பம் நியுஜெர்சில தான் இருக்காங்க. எல்லா உதவியும் செய்வாங்க” ஸ்ரீதரின் தந்தை சொல்லவும்

“ரொம்ப சந்தோஷம். வருண் கூட படிச்ச பிரண்ட்ஸ் சிலர் நியூயார்க்கில்  தான் இருக்காங்க. வர்ஷினி தங்க எல்லாம் எல்லா ஏற்பாடும் செய்துட்டான்” என்றார் ராமச்சந்திரன்.

ஒரு வழியாக அழுவாச்சி காவியம் எல்லாம் முடித்து இரண்டு பெட்டி நிறைய பருப்பு பொடி,ஆவக்காய் ஊறுகாய், சத்து மாவு போக டெட்டி, டாமி பில்லோ என்று மூட்டை கட்டியதை இழுத்துக் கொண்டு ஸ்ரீதருடன் லிபர்டி சிலைப்பெண்ணுடன் கைகுலுக்க விமானப் பறவையில் பறந்தாள் வர்ஷினி.

‘நியூயார்க் நகரம் உறங்கும் நேரம் தனிமை அடர்ந்தது பனியும் படர்ந்தது’  பாடல் ஒலித்துக் கொண்டிருக்க அதைக் கேட்டு ரசித்தபடியே பிப்த் அவென்யுவில் உள்ள தனது அபார்ட்மன்ட் பால்கனியில் இருந்து இரவு நேரத்து வானில் மின்னிக் கொண்டிருந்த விமானப் பறவைகளைப் பார்த்த வண்ணம்  தனது ப்ளாக் காபியை சுவைத்துக் கொண்டிருந்தான் கணேஷ் ராம்.

இதயம் துடிக்கும்

Episode # 05

Episode # 07

{kunena_discuss:1109}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.