(Reading time: 11 - 22 minutes)

18. தொடர்கதை - சக்ர வியூகம் - சகி

Chakra Vyoogam

றைவனானவன் ஒரு உன்னதமான வாழ்வினை இரு பாகமாக பிரிக்கின்றான் போலும்!பிறப்பிலிருந்து சில காலங்கள் வரை சகமாய் இருக்கும் மனிதரின் வாழ்வானது தனது மற்றொரு பாதியை காணும் சமயத்தில் முழுமை அடைகிறது.காதல் மலர்கிறது!இல்லறத்தில் நிறைவுறுகிறது.தொடர்பானது ஏதுமின்றி அறியா ஒருவரிடத்தில் உதிக்கும் பந்தமானது சாமானியமானதல்ல!அதில் ஏதோ ஒன்று நிச்சயம் அடங்கி இருக்கலாம்.ஆம்...!காதலில் ஏதோ ஒன்று உள்ளது.

மாந்தோப்பின் பக்கமாய் தன் பணியை கவனித்துக் கொண்டு சென்றிருந்தவள்,உறுதியான கரத்தால் கவர்ந்திழுக்கப்பட்டாள்.

"அம்...."-அவள் கத்துவதற்குள் உறுதியான கரம் ஒன்று கங்காவின் வாயை பொத்தியது.

"ஏ....கத்தி தொலையாதே!நான்தான்!"-அவள் செவிகளில் கிசுகிசுத்தான் ருத்ரா.

அவனிடமிருந்து அவசரமாய் விலகியவள் அவனை முறைத்தாள்.

"என்ன விளையாட்டு இதெல்லாம்?நான் பயந்துட்டேன்!"

"ம்...உனக்கு பயப்படுறதை தவிர வேற என்ன தெரியும்?சரி...என்ன இந்தப் பக்கம்?"

"கோவிலுக்கு போயிட்டு வரேன்!"-என்று திருநீறு பிரசாதத்தை அவனிடம் நீட்டினாள்.

"ஐயயே...!எனக்கு நம்பிக்கை இல்லைம்மா!"-அவன் முகத்தை சுழிக்க,அதை கவனிக்காதவள் போல அவன் நெற்றியில் திருநீற்றை அணிவித்தாள்.

"ஏ..என்னடி?"

"இப்போ தான் முகம் லட்சணமா இருக்கு!"

"உன்னை..."-என்று அவன் துரத்த ஆரம்பிக்க,அவள் ஓடினாள்.ஓடியவள் அறியாமல் யார் மீதோ மோதி நின்றாள்.எதிரில் நின்றவனின் முகம் நோக்கியதும் அதிர்ந்துப் போனாள் கங்கா.உச்சி முதல் பாதம் வரை அவள் தேகம் நடுக்கம் கொண்டது.அவனோ அவளை பார்த்து குரூரமாய் புன்னகை பூத்தான்.

"கங்கா..."-அவள் பெயரை கூறியப்படி துரத்தி வந்தவன் சட்டென நின்றான்.

"ஏ...லூசு!முடியலைடி!"-மூச்சிரைத்தவன் அவளது திகைத்த முகத்தை கண்டான்.அவள பார்வை உறைந்த திசையில் கண்டவன் குழம்பினான்.அவனோ ருத்ராவை முறைத்துக் கொண்டிருந்தான்.

"யார்டா நீ?"-அவனது திமிரான பேச்சு ருத்ராவுக்கு எரிச்சலூட்டியது.

"நீ யார்டா?"

"நான் யாரா?எவ்வளவு துணிச்சல் உனக்கு?"-அவன சண்டைக்கு தயாராக அவனுக்கு முன்னால் இவன் எதிர் நின்றான்.

"யார்டி இவன்?"

"கொன்னுடுவேன்!அவ என் மனைவி!"-சட்டென அவன் கூற,கங்கா அவனை அதிர்ச்சி கலந்த பூரிப்போடு பார்த்தாள்.

"எ...என்னங்க!போயிடலாம் வாங்க!"-அவன் கரத்தைப் பற்றி இழுத்தாள் கங்கா.அவனோ வருவதாய் இல்லை!

"வாங்க!"-பிடிவாதமாய் இழுத்து சென்றாள் அவள்.

"யார் கங்கா அவன்?"

".............."

"சொல்லு யாரவன்?"

"மனோகர்!இந்த ஊர் பண்ணையாருடைய மகன்."

"அவனைப் பார்த்து ஏன் பயப்படுற?"

"தாத்தா இருந்தப்போது என்னை பொண்ணு கேட்டு வந்தான்.அப்போ எனக்கு 18 வயசு ஆகலைன்னு தாத்தா அதை மறுத்துட்டார்.அப்போ இருந்து பின்னாடியே சுற்றி தொல்லைக் கொடுக்கிறான்.அவனை கல்யாணம் பண்ணிக்கலைன்னா கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்ய வைப்பேன்னு மிரட்டினான்."-அவள் கண்கள் கலங்கின.

"வேணாங்க!அவன் மோசமானவன்.அவனிடம் எதையும் வைத்துக்காதீங்க!"

"சரி!நீ அழாதே!"-என்று ஆறுதலாக அவளை தாங்கிக் கொண்டான் ருத்ரா.ஆனால்,அக்கண்களில் தனல் மட்டும் தகித்தப்படி இருந்தது.

நாட்கள் நகர்ந்தவண்ணம் இருந்தன...அவ்விருவரின் காதலும் வளர்பிறை சந்திரனாய் வளர்ந்தப்படி இருந்தது.சிறிதும் திகட்டாமல் தங்கள் இருவரின் இடையே மலர்ந்த உன்னத உறவை போற்றினர் இருவரும்!!

திகாலையில் ஆதவன் உதித்து 5 மணி நேரம் கடந்துவிட்டது!மணி பதினொன்று!எனினும் சற்றும் சோர்வாகாமல் உறங்கிக் கொண்டிருந்தான் ருத்ரா.

அவன் போர்த்தி இருந்த போர்வையை யாரோ மெல்ல இழுத்தனர்.

"ப்ச்..பாட்டி!இன்னும் கொஞ்ச நேரம்!"-சிணுங்கினான் அவன்.

சில நொடிகளுக்கு பின் அவன் கேசத்தை யாரோ கோதுவதாய் ஓர் உணர்வு ஏற்பட மெல்ல கண்விழித்துப் பார்த்தான்.மிக மங்கலாய் தெரிந்தது கங்காவின் உருவம்!அவள் பிம்பம் தெளிவுற சில நொடிகள் பிடிக்காமல் இல்லை.

"ஆ...!"-என்று ஒரு நொடி கத்திவிட்டான் ருத்ரா.

சட்டென அவனது இதழ்களை மூடினாள் கங்கா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.