(Reading time: 12 - 24 minutes)

தொடர்கதை - மறைந்துவிடாதே  மாயா – 01 - லதா சரவணன்

Marainthu vidaathe Maaya

வாசலில் நின்று வாடிய முகம்தனில் ஆயிரம் அர்த்தங்கள் மறக்க முயன்று தோற்று போன இதயத்திற்கு ! என் ஆறறிவிற்குள் நீ அடங்க மறுக்கிறாய். பார்வையால் நனைக்கிறாய்... வார்த்தையால் துவட்டினாய்...

மேகங்களைக் கிழித்துக்கொண்டு பறவைகளுக்கு சாவல் விடும் வேகத்தில் விரைந்த அந்த உலோகப் பறவையைக் காட்டிலும் அதிவேகமாய் துடித்துக்கொண்டு இருந்தது கமலின் மனது. என்ன நடந்திருக்கும் என்று ஊகிக்க முடியாத அளவிற்கு ?! மாயா என்ற அழகு பெட்டகம் தன்னை மண்ணிற்குள் மறைத்துக்கொண்டு இருக்கிறது. ஆனால் இது எப்படி சாத்தியம் ?! நம் காதல் கனவுகளைப் பற்றி நொடி கூட சிந்திக்காமல் எப்படி மாயா தன்னுயிரை மாய்த்துக்கொள்ள முன்வந்திருப்பாள். நண்பன் அசோக் மூலமாக நேற்று இரவு தெரிவிக்கப்பட்ட விஷயம் காதில் அமிலத்தைக் காய்ச்சி ஊற்றுவதைப் போல அல்லவா இருந்தது. அதெப்படி மாயா என் அருகாமை வேண்டும் என்று உன் சகலமும் இழக்கத் தயாராய் இருந்தாயே ? ஏன் தற்கொலை என்னும் முடிவை எடுக்கும் போது என்னை நீ நினைக்கவில்லையா ? நான் என்ன தவறு செய்தேன் மாயா ? அவன் உள்ளம் அரற்றியது. தன்னையும் மீறி கன்னங்களின் ஓரம் சூடான திரம் வழிந்தது. மாயா மாயா என்று மனம் அரற்றியது.... காற்றில் முழுக்க பரவியிருந்த அவளின் வாசனை நாசியை நெருட, முதன் முதலில் அவளைக் கண்டநாள் விரிந்தது?!

மல் நகரத்தின் மையப்பகுதியில் மிகப்பெரிய பர்னிச்சர் தயாரிக்கும் தொழிற்சாலையின் உரிமையாளர். வெகு நுணுக்கமான கலைநயமிக்க சோபா, சேர் வகையாறாக்களை வாங்கும் மனிதர்கள் பெரும்பாலும் பணத்தில் திளைப்பவர்களாகத்தான் இருப்பார்கள். அப்படியொரு பெரியமனிதரின் மூலம் தான் ஜெர்மனிவாழ் இந்தியர் ஒருவருக்கு தன் இல்லத்திற்கு தேவையான பர்னிச்சர்களை இன்டர்நெட் மூலமாக ஏற்றுமதி செய்திருந்தான் கமல். நியாயமான விலையில் தரமான பொருட்களை தேர்வு செய்து ஏற்றுமதி செய்ய கமலின் தொழில்திறன் பிடித்துப்போன அவர் தன்னுடைய சொந்த ஊரான சென்னையில் தன் மகளின் வீட்டில் அதேபோல் பர்னிச்சர் அமைத்துத் தரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் அவர் நடத்திய தொழில் முறை விருந்தில் கலந்துகொள்ளும் போதுதான் மாயாவின் நாட்டியத்தை முதன்முதலாக பார்த்தான் கமல்.

ஆர்வம் இல்லையென்றாலும் நல்ல பிஸினஸ் கெட்டு விடக் கூடாதே என்று அவனும் உடன் செல்ல ஒப்புக்கொண்டான். ஆனாலும் அங்கே சென்று போரடிக்கபோவதாக நண்பன் அசோக்கை அழைத்திருந்தான்.

நான் என்ன தேங்கா முடி பாகவதனா அங்கே வந்து புல்புல்தாரா வாசிக்க, ஒரு டிடெக்டிவ்வா உபயோகமா ஏதாவது கேஸ் பார்ப்பேன். ஆனா நீ என்னடான்னா,,,?

ரொம்ப அலுத்துக்காதேடா.... கிளம்பு போகலாம் நடனம் ஆரம்பிக்கும் வரையிலும், அதிலும் புதுவிதமான நடனங்கள் வந்து விட்ட நிலையில் இந்த மனிதர் ஏன் அந்தக்கால கிளாசிக் நடனத்தை விரும்புகிறார் என்று நொந்தபடி வேறு வழியில்லை ஒரு மணிநேரம் கண்ணை மூடிக்கொண்டு உட்கார்ந்து விட வேண்டியதுதான் என்ற நினைப்போடுதான் போனதே ?

இந்த நினைப்பெல்லாம், அந்த நாட்டிய நிகழ்ச்சி தொடங்கிடும் வரையில்தான், பட்டாம்பூச்சியென படபடக்கும் விழிகளும், குடையாய் அடைகாத்த இமைகளும், பொய்யோ என்னும் இடையுடையவள் என்ற வர்ணணைக்கு ஏற்ப அழகாய் இருந்த அவள். அன்னமென அசைந்தாள் அவள். இசைக்கு ஏற்றாற் போல பம்பரமென சுழன்று ஆடுவதையும், கண்டவனுக்கு அப்போதே தானும் அவளிடம் விழுந்து விட்டோம் என்றே தோன்றியது, அது ஒரு நாட்டிய நாடகம் சாகுந்தலையின் புலம்பல்.

கணவன் தன்னை கைவிட்டு சென்றபோது, ஏற்படும் காதலின் பிரிவுத் துயரை, மறந்துவிட்ட கணவனிடம் தன்னை வெளிப்படுத்தும் நிலையை அவளின் முகபாவங்களும், அழகும் கொள்ளை கொண்டன. நடனம் முடிந்து அவள் சென்றும் அசையாமல் நடனம் முடிந்து அவள் சென்றும் அசையாமல் அமர்ந்திருந்த அவனைக் கண்டால் அசோக்கிற்கு ஆச்சரியமாக இருந்தது. என்னவோ அவளை உடனே காண வேண்டும் என்ற ஆவல் எழ, ஒப்பனை அறைக்கு சென்று விட்டான். விழிகள் நிரம்பிய அந்த பிம்பத்தின் ஒளி அவனை இழுத்துச் சென்றது. அங்கே வெளிநாட்டு குழு ஒன்று அவளை பாராட்டிக்கொண்டு இருந்தது. ஆனால் வெகு வேகமாக அவர்களுக்கு நன்றியுரைத்துவிட்டு, அவள் அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டாள். ஏதோ முக்கியமான வேலையாக வெளியே செல்ல வேண்டியிருந்ததால் தாமதிக்காமல் சென்றுவிட்டாள்.

எனவே அவளுடைய செகரட்டிரியின் எண்களைத் தெரிந்து கொண்டான். இரவு முழுவதும் அந்த காரிகையின் நினைப்பாகவே இருந்தது. எப்படியாவது தன் அன்பில் மறந்துபோன மணவாளனைக் கவரவேண்டும் என்று அவள் துடித்த துடிப்பும், ஏற்றுக்கொள்ளேன் என்று ஏங்கியதும் இன்னமும் கண்முன்னாடியே நின்றது. விடியும் வரை காத்திருந்தது மறுநாள் காலையில் போனில் தொடர்பு கொண்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.