(Reading time: 12 - 24 minutes)

ஆனால்,அவள் கலைவிழாவென்று பெங்களூர் வரை சென்றிரப்பது தெரியவந்தது. என்ன செய்யலாம் என்று யோசித்த மறுநிமிடம் அவன் ஏரோடிராமில் தான் நின்றான். கலைக்குழு இருக்கும் இடத்தை அறிந்துகொண்டு அவளின் அறைக்கு அருகிலேயே தங்கினான். அருகிலேயே அவள் இருந்தாலும் தன் முதல் சந்திப்பை அவளிற்கு ஆழமானதொரு நிகழ்வாக வைத்திருக்க வேண்டும் என்று விரும்பினான் கமல். தொழில் எத்தனையோ இக்கல்களை சந்தித்த அவனுக்கு முதன் முறையில் ஒரு பெண்ணிற்காக இத்தனை தூரம் மெனக்கெட்டது சற்று அதிகப்படியோ என்று தோன்றியது. யாரோ எவளோ தன்னை இந்த அளவிற்கு ஈர்த்து விட்டாளே என்று இதைத்தான் கண்டதும் காதல் என்று இலக்கியத்தில் சொன்னார்களோ ? ஆனால் என்னைக் கண்டதும் அவளுக்கும் அதே மனநிலை இருக்குமா ? இல்லை அவள் மனதை வேறுயாராவது ? நினைப்பே சுட்டது. அந்த ஆடலரசியைச் சந்திக்காமல் இருக்க முடியாது என்ற எண்ணம் நீரில் இட்ட பந்தாய் துள்ளியது.

திகாலை அள்ளிப் பூசிய குங்குமமாய் சிவந்து விளங்கியது. இருள் கவிழ்ந்து வைத்திருந்த கூடையை அகற்ற விடியல் பறவைகள் சுதந்திரமாய் கூட்டிலிருந்து வெளியேறி ஒளிபரப்பின. அழகானப் பூக்களைக் கொண்டு ஒரு பூச்செண்டும், அதோடு ஒரு தங்க கொலுசும் கொண்டு வந்த பணியாளரைக் கண்டதும் மைபூசிய தன் நீள்விழிகளில் கேள்வியைத் தேக்கியவண்ணம் யார் கொடுத்து அனுப்பியது என்றாள் மாயா?!

அடுத்த அறையில் இருக்கும் மிஸ்டர்.கமல் தங்களிடம் தரச்சொன்னார் என்று அவன் கன்னடத்தில் பேசிட, ஒரு ஆச்சரியத்தோடு அதைப் பெற்றுக்கொண்ட போது, பூச்செண்டில் இருந்து ஒரு கடிதம் மடியில் வந்து விழுந்தது. அதில் அழைக்கவும் அன்பன் காத்திருக்கிறேன் என்று பத்து இலக்க எண்ணுடன் அன்புடன் கமல் என்று இருந்தது.

இந்த ஆறு வருட நடன வாழ்க்கையில் இப்படி சில விசிறிகளை அவள் கண்டதுதான், அவர்களின் ரசனைகள் அனைத்தும் அவளின் அங்கத்தின் மீதே இருக்கும். ஆடலின் மீது இருக்காது. அதென்னவோ எந்தத் தொழிலும் பெண் என்றால் ஒரு இளப்பம் இருக்கத்தான் செய்கிறது. பெண்களை மென்மையாய் படைத்த இறைவனை சொல்ல வேண்டும். தன் எண்ணங்களை சாகடிக்கும் சிலரை எதிர்க்கும் சக்தியையாவது அவர்களுக்குக் கடவுள் தந்திருக்க வேண்டாமா? இதோ இவனையே எடுத்துக் கொண்டால், முன்பின் அறியாதவன் தங்ககொலுசு பரிசு தந்தால் மயங்கி விடுவேன் என்று எண்ணிவிட்டான் போலும், இந்த மாயாவைப் பற்றி சரியாக அறியாதவன் இல்லையா ? நன்றாய் நாலு வார்த்தைக் கேட்க வேண்டும் என்றுதான் அவள் அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டதே?! காத்திருப்பதைப் போல் உடனே போன் எடுக்கப்பட்டது. வணக்கம் நான் மாயா என்று ஏனோ மென்மையாகத்தான் ஆரம்பித்தாள்.

நான் கமல்

ம்..பார்த்தேன். மிஸ்டர் கமல் தங்கள் பரிசும், பூக்களும் கிடைத்தது. ஆனால் நான் பரிசுக்கு மயங்குபவள் இல்லை,

உண்மையான அன்பு நிச்சயம் மயக்கம் தரும் மாயா, நான் காத்திருக்கிறேன் ?! என்றவன் மேற்கொண்டு ஏதும் பேசாமல் போனை வைத்துவிட்டான். அதிகமில்லாத அவனின் பேச்சு அவளை யோசிக்க வைத்தது. யார் இவன்.... வார்த்தைகளில் குறைவாய் இருந்தால் அந்த குழைவு அவளை இம்சிப்பதாய் தோன்றியது. எதையோ உணர்த்துவதைப் போல இருந்தாலும் புரிந்து கொள்ளாததே இன்பமாய் தோன்றியது. வேண்டாம் இதுவரையில் அவளை நெருங்கியவர்களில் இவன் விசித்திரமானவன்தான். தன்னிடம் வழியும் எத்தனையோ பேரை வெகு லாவகமாய் தவிர்த்திருக்கிறாள் மாயா ஆனால் இவன் சற்று வித்தியாசமாய் உணர வைத்தான். ஒருவேளை பசுத்தோல் போர்த்திய புலியோ என்று கூட எண்ணத் தோன்றியது?!

சற்றே யோசித்தவள், தன் உதவியாளரிடம் அடுத்த அறையில் இருப்பது யார் என்னவென்று விசாரித்து வைத்தாள். மதியம் உணவுவோடு மற்றொரு மலர்கொத்து, வாடிப்போகும் இந்த மலர்களைப் போல் அல்ல என் நேசம் உன் வருகைக்காய் காத்திருக்கிறது என் வாசல் என்று எழுதியிருந்ததைப் பார்த்ததும் தன்னையும் அறியாமல் இதழில் முறுவல் பூத்து மாயாவிற்கு !

சிரித்தபடியே அதே எண்ணிற்கு அழைத்தாள். மாலையில் நிகழ்ச்சி இருக்கிறது ஏதேனும் பேச வேண்டுமெனில் அறைக்கு வாருங்கள் என்று அழைப்புவிடுத்தாள். நினைத்த எதையும் தள்ளிப்போடும் வழக்கம் மாயாவிற்கு இருந்தது இல்லை, புலியோ, எலியோ அதை குகைக்குள்ளேயே சந்தித்து விடலாம் என்று எண்ணியே அவனை அழைத்திருந்தாள். தவறாக தெரிந்தால் எச்சிரித்து அனுப்பிவிடலாம் என்று ! ஆனால் வெகு ஆர்வமோ, ஆர்பாட்டமோ இல்லாமல் பத்தாவது நிமிடத்தின் முடிவில் மறுபடியும் ஒரு பூக்குவியலோடு அவளை வந்து சந்தித்தான் கமல்.

அன்று ஒப்பனையில் ஒருவித அழகு காட்டியவள் இன்று எவ்வித ஒப்பனையும் இன்றி நீல நிற சல்வாரில் இருந்தாள், சிகை முதுகில் பூராவும் பறந்து அவள் தோளில் குழந்தையாய் தவழ்ந்து கொண்டு இருந்தது. அந்நேரம் அவளுமே அவனை அளந்துதான் கொண்டிருந்தாள்.

கம்பீரத்துடன், இளமையாய் ஆண்களிடம் இத்தனை வெண்மையான நிறமா என்று கேட்கும் அளவிற்கு அழகாய் இருந்ததான் அவன். பெயருக்கு ஏற்றப்பொருத்தம் தான். நேருக்கு நேராய் கண்களைச் சந்தித்துப் பேசினான். வணக்கம் சந்திக்க ஒப்புக் கொண்டதற்கு நன்றி பரிசு பிடித்திருந்ததா ?

பரிசுக்கு மயங்குபவள் நானில்லை மிஸ்டர்.கமல் மீண்டும் நினைவு படுத்தினாள் மாயா......

ம்.....தங்களை மயக்க நான் எதையும் செய்யவில்லை மாயா, ஏனோ நேற்று ஒரு பூச்செண்டு வாங்க சென்றிருந்த போது ஏதேச்சையாய் இந்த கொலுசு என் கண்ணில்பட்டது. ஆடும் தேவதையின் காலுக்கு இந்த அன்பனின் பரிசாய் இருக்கட்டுமே என்று தந்தேன்.

சொல்லுங்கள் ?! என்னை எந்த விஷயமாய் பார்க்க வேண்டுமென்று ?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.