(Reading time: 10 - 20 minutes)

தொடர்கதை - விழிகளிலே காதல் விழா - 14 - தேவி

vizhikalile kadhal vizha

லர் அன்று காலையில் எழுந்ததில் இருந்தே சற்று பரபரப்பாக இருந்தாள். குளித்து விட்டு என்ன அணிவது என்று அவளுள் ஒரு தடுமாற்றம். இது அவளுக்கு புதிது. புடவை தான் அணிய வேண்டும். ரெகுலர் காலேஜ் இல்லை என்றாலும் இன்று மாணவர்களும் வரக் கூடும் என்பதால் வேறு சாய்ஸ் இல்லை.

ஆனால் எதை அணிவது என்பதில் குழப்பம். வழக்கமாக அணியும் காட்டன் தவிர்த்து சற்று கிராண்டாக இருக்கும் மைசூர் சில்க் புடவை உடுத்தி, இரண்டு பக்கமும் முடி எடுத்து சென்டர் கிளிப் போட்டு கீழே தளர்வாக பின்னிக் கொண்டாள். எப்பொழுதும் போலே கண்ணுக்கு மையிட்டு , முகத்திற்கு லேசான ஒப்பனை செய்து கொண்டு தன் அம்மாவை தேடி வந்தாள்.

ஹாலில் உட்கார்ந்து தன் மகனுடன் ஏதோ பேசிக் கொண்டு இருந்த மலரின் பாட்டி , தன் பேத்தியை பார்த்து

“அட.. இன்னிக்கு என்ன பளிச்சுன்னு கிளம்பி இருக்கியே கண்ணு.. காலேசுலே எதவும் விழாவா மலரு ?”

“இல்லை.. ஆச்சி... எப்போவும் போலே போறது தான்..”

“வழக்கமா இந்த மாதிரி சேலை காலேசுக்கு கட்ட மாட்டியேத்தா ?”

சற்று பதில் சொல்ல தினறியவள் “ அது.. ஆச்சி.. .. முழு நாளும் காலேஜ் லே இருக்கணும்னா கொஞ்சம் வெயில் தாங்க கூடிய புடவையா கட்டிட்டு போவேன்.. இன்னிக்கு புல் டே இருக்க வேண்டாம். ஒரு ரெண்டு மூணு மணி நேரத்திலே வந்துடுவேன்.. அதான்.. இந்த புடவை கட்டி இருக்கேன்...”

“ஏத்தா.. வள்ளி.. நேத்தைக்கு கட்டி வச்ச பூவு எடுத்து புள்ள தலையில் வை மா..”

அவர் சொல்லும்போதே கையில் பூவோடு வந்த வள்ளியும் பெண்ணின் அலங்காரத்தோடு சேர்த்து அவளின் அலை பாயும் கண்களையும் கண்டு கொண்டார்.

தன் மாமியாரோடு பார்வை பரிமாற்றம் நடத்தியவர்,

“என்னம்மா.. இன்னிக்கு என்னவோ டென்ஷனா இருக்க மாதிரி தெரியுது.. ? “ என்று மலரிடம் கேட்க,

“அப்படி எல்லாம் ஒன்னும் இல்லைமா.. வெள்ளி, சனி , ஞாயிறு லீவ் விட்டு திங்கள் கிழமை பசங்க ஸ்கூல் போக கஷ்டப்படுமே அந்த மாதிரி எனக்கும் காலேஜ்க்கு போய் கொஞ்சம் நாள் ஆச்சா ..அதான் ஒரு மாதிரி பதட்டமா இருக்கு”

“அது படிக்கிற பசங்களுக்கு இருக்கும்.. நீ ஆசிரியர் தானே.. உனக்கு எதுக்கு பதட்டம்.. ? நிதானமா போ.. சரியா?”

“சரிம்மா .. நான் கிளம்பறேன்.. ஆச்சி, அப்பா நான் வரேன்..”

“அப்பா காரிலே கொண்டு விடட்டுமா மலர் ?”

“இல்லைபா.. நான் ஸ்கூட்டியிலே போய்டறேன்..”

அவள் வண்டியை இறக்கி , புறப்படவும், அவள் அம்மா

“மலர் .. என்ன ஆச்சு.. ? வண்டியில் போனா அதவும் புடவை கட்டி இருந்தா gents ஷர்ட் போட்டுட்டு போவியே.. மறந்துட்டியா ?”

மலர் மறக்கவில்லை.. ஆனால் அவளுக்கு ஏனோ அன்று அப்படி செல்ல விருப்பமில்லை.

தன் அம்மா பதில் எதிர் பார்ப்பதை உணர்ந்து “ இருக்கட்டும்மா.. இன்னிக்குதான் சீக்கிரம் வந்துடுவேனே.. டிராபிக் இருக்காது.. அதுனால் பரவா இல்லை.. “ என்று ஏதோ உளறி விட்டு கிளம்பினாள்..

“என்ன ஆச்சு இந்த பொண்ணுக்கு “ என்று எண்ணியபடி வள்ளி உள்ளே வர,

சுந்தர வடிவோ தன் மகன் வேலனிடம்,

“ராசா.. வேலா.. மலர்க்கு வயசு ஆயிட்டு போகுதே.. அது கல்யாணத்தை பத்தி என்ன முடிவு பண்ணிருக்க ?”

“ஆமாம்மா.. நானும் யோசிச்சுட்டு இருக்கேன்.. இதனை நாளா படிச்சுட்டு இருந்துச்சு.. இப்போ வேலைக்கும் போக ஆரம்பிச்சுட்டுது.. அவளுக்கு கல்யாணத்துக்கு பார்க்கலாம்னு தான் நினைச்சுட்டு யிருக்கேன்..”

“சந்தோசம் ராசா..  நீ வரபோற மாப்பிள்ளை பத்தி என்ன முடிவு பண்ணிருக்க?”

“அது எல்லாம் ஒன்னும் யோசிக்கலை ஆத்தா.. அவ படிப்பு, அழகுக்கு பொருத்தமா அதே சமயம் குணமான பையனா இருந்தா போதும் ..”

“அது அமையும் தம்பி.. ஆனால் யாருகிட்டயும் பேசும் முன்னாடி எங்கிட்ட ஒரு வார்த்தை சொல்லு.. “

“ஏன் ஆத்தா.. ? முதலில் சொல்லி வச்சு வரன் வர ஆரம்பிக்கவும் தான் நான் மலர் கிட்டேயே கேட்க போறேன்... எப்படிப்பட்ட மாப்பிள்ளை அவ எதிர்பார்க்கிரான்னு?  ஆனால் நீ அதுக்கும் முன்னாடியே  கேக்குறியே.. ? என்ன விஷயம்..?”

“என்னன்னு .. சமயம் வரும்போது சொல்றேன்.. அதோட இந்த வருசம் பங்குனி திருவிழாவுக்கு ஊருக்கு போகணும் லே.. எல்லோருமே போகணும்.. முன்னமே சொல்லிடு “ என்றபடி அவர் தன்னறைக்கு சென்றார்.

அவரின் வார்த்தைகள் புரியாமல் வேலன் தன் மனைவியை பார்க்க, வள்ளியும் யோசனையோடு தன் மாமியார் சென்ற திசையை பார்த்தார்.

பிறகு இருவரும் அவரவர் வேலை கவனிக்க சென்றனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.