(Reading time: 12 - 23 minutes)

ஒரு மனிதன் மேல நம்பிக்கை வருவதற்கு வருடக்கணக்கில் வாழனுமின்னு இல்லை ஒரு விநாடியே போதுன்னு உங்க கண்கள் சொல்லுச்சு. முதலில் நீங்கள் என்னை சந்திக்க வேண்டும் என்று பரிசு கொடுத்து அனுப்பும் போது கூட உங்களையும் அந்தக் கூட்டத்தில் ஒருவராகத்தான் நான் எண்ணினேன். ஆனால் உங்களிடம் இருந்த கண்ணியம் என்னை கவர்ந்தது. உங்கள் பேச்சு, உண்மையை பட்டவர்த்தனமாக பேசும் தன்மை, இதெல்லாம் மனதிற்குள் இதமாய் இருந்தது. இருந்தாலும் சில குழப்பங்கள் என்னை ஆட்கொண்டு இருக்கிறது.

நன்றி என்மேல் தோன்றிய நல்ல அபிப்பிராயத்திற்கு !

ஆனால்....! நாம் இன்னமும் சில நாட்கள் நட்புடன் பழக வேண்டும் . இன்று தோன்றும் அதே பாதுகாப்பு என்றும் எனக்கு வேண்டும் அதற்கு என் மனதை நான் பழக்கிக் கொள்ள வேண்டும். நான் உங்களுடைவள் ஆகும் போது எந்தவித உறுத்தலோ கவலையோ இருக்கக் கூடாது, என் சொத்துக்களைக் கூட நான் அத்தைக்கும்,அவளின் பிள்ளைக்கும் தந்துவிடலாம் என்று இருக்கிறேன். அவர்கள் தொந்தரவு இனிமேல் இருக்க வாய்ப்பில்லை, ஆனால், ஏதும் இல்லாத ஒரு அநாதையாய் என்னை ஏற்றுக் கொள்ள உங்களால் முடியுமா ?! அவள் கண்களில் விழி நீருடன் கேட்டாள்.

கமல் மெல்ல அவளின் கையைப் பற்றினான். மாயா சத்தியத்தில் உனக்கு நம்பிக்கை இருக்கிறதா என்று தெரியவில்லை, உன்னை நான் விரும்பியது, எந்த நிமிடத்தில் தெரியுமா? காதல் என்ற ஒரு காவியத்தில் ஏமாற்றிப் போன காதலனை அவனிடம் காதலை புதுப்பிக்க நீ போராடிய தருணத்தில் அந்த சாகுந்தலையின் பிரதிபலிப்பில் தான் நான் என்னை இழந்தேன். இன்று கிட்டத்தட்ட ஏதும் வேண்டாம் என் அன்பு மட்டும் போதும் என்று நீ கேட்கிறாய் இதை நீ கேட்கவே வேண்டாம் மாயா. எப்போது இந்த உடலும் உயிரும் உனக்கென்று ஆகிவிட்டது இனி உன்னை விட்டு நான் ஒருபோதும் அகலமாட்டேன். நீ சொல்லு இப்போதே நாம கல்யாணம் செய்து கொள்ளலாம். யாருக்கும் பயப்படாதே நானிருக்கிறேன்.

இப்போது என் மனசுக்கு மிகவும் நிம்மதியா இருக்கு, போதும் இனிமேல் எனக்கு எதுவும் தேவையில்லை, போகலாம். என் சிக்கல்களை சற்று தீர்ந்த பிறகு நானே சொல்கிறேன். அதிலும், காதலியாய் உங்களுடன் சில காலம் வாழவேண்டும் கமல் அதன் பிறகு நாம் கல்யாணம் செய்துகொள்ளலாம் என்று பேசி முடிவெடுத்தபடி கிளம்பினார்கள். திருத்தணி முருகன் ஆசிர்வதிப்பதைப் போல், மணியோசை முழுங்கியது. வரும்போது தனித்து வந்தவள். இப்போது கமலின் தோளில் சாய்ந்தபடி வந்தாள். இருவரின் உள்ளமும் பூரிப்பைச் சுமந்திருந்தது. அது நிலைத்திருக்குமா என்ற தயக்கமும் மாயாவின் மனதில் இருந்தது.

மல் நீங்க புகார் எழுதிட்டா உங்ககிட்டேயிருந்து சில கேள்விகளுக்கு எனக்கு விளக்கம் தேவைப்படுகிறது. கேட்கலாமா இன்ஸ்பெக்டர் வீராவின் கேள்வியில் பழைய நினைவுகளில் இருந்து நிமிர்ந்தான் கமல்.

கமல் விரக்தியாய் சிரித்தான். உண்மையில் மாயாவின் இறப்பிற்கு காரணமானவர்களை என் கையாலேயே கொல்லணுமின்னு நினைச்சேன். அனா அதனால் என்ன பயன், இறந்து போன என் மாயா திரும்பியா வரப்போறான்னு ஒரு எண்ணம். ஆனாலும் என்னோட எதிர்காலத்தை சூன்யமாக்கிய அவங்களை நான் சும்மாவிடப் போவதில்லை ஸார்.

எனக்கு மாயாவினைப் பற்றிய சில விவரங்கள் தெரியவேண்டும். கடைசியா நீங்க மாயாவை எப்போ மீட் பண்ணீங்க? அப்போ அவங்க என்ன மனநிலையில் இருந்தாங்க? என்ன பேசினாங்கன்னு சொல்லமுடியுமா?

ஸார். நான் தொழில் நிமித்தமா அடிக்கடி வெளியூர் போவதுண்டு, அப்படி கடந்த வாரம் லண்டன் சென்றிருத போதுதான் இந்த சம்பவம் நடந்திருக்கு. அதற்கு சரியாக மூன்று நாட்களுக்கு முன்பு நானும் மாயாவும் ஹோட்டல் ஸ்ரீ பேலஸில் சந்தித்தோம். கமல் விவரிக்க அந்தக் காட்சி மற்றவர்களின் கண்களுக்குப் புலனானது.

மாயா அன்று பொன்நிறத்தில் சல்வார் அணிந்து நெஞ்சின் மத்தியில் உறங்கும் ஒரு டாலர் செயினும், கூந்தலை முதுகில் பரவவிட்டபடியும் இருந்தாள். புன்னகையும் மீறிய ஒரு பய உணர்வு வெளிப்பட்டதைப் போல் தோன்றியது. தனக்கு முன்னால் இருந்த பாஸந்தியை சாப்பிடாமல் அமைதியாய் இருந்தவள் திடுமென்று நிமிர்ந்து, கமல் நீங்க அவசியம் இந்த டிரிப் போகத்தான் வேணுமா?

என்ன மாயா இது ? நீதானே உன் தோழி மூலமா இந்த ஆர்டர் ஏற்பாடு பண்ணே ? நேற்று வரையில் போயே தீரணுமின்னு என்னை கிளப்பிட்டு இப்போ போய்தான் ஆகணுமான்னு கேட்டா என்ன அர்த்தம்?!

நான்தான் போகச்சொன்னேன், ஆனா இப்போ மனசுக்கு என்னமோ செய்யுது? என்னமோ நாம இரண்டு பேரும் சந்தித்துக்கொள்வது இதுதான் கடைசியோன்னு தோணுது. என்னைவிட்டு நீங்க வெகு தூரம் போறப்போல மனசு வலிக்குது கமல், அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள்.

ஏய்...என்னம்மா பேச்சு இது விளையாட்டுக்கு கூட இப்படி பேசாதே?உன்னைப் பிரிஞ்சு என்னால வாழ முடியாது கண்ணம்மா. எத்தனையோ கனவுகளோட நான் காத்துக்கிடக்கிறேன். நீ என்னடான்னா,,,, அப்படி என்னதான் பிரச்சனை உனக்கு?!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.