(Reading time: 12 - 23 minutes)

தொடர்கதை - மறைந்துவிடாதே  மாயா – 04 - லதா சரவணன்

Marainthu vidaathe Maaya

தென்னை மர நிழலில் உனையெண்ணி நான் அம்மரம் போல ஒற்றையாய் அதன் உயரமென உன் நினைவுகள், என்னில் பெரிதாய் விசுவரூபம் எடுக்கிறதே?! தெளிவில்லா உருவமென என் கண்ணீர்க் குளத்தில் உன் முகம் முயன்றும் முடியாமல் உன்னுள் வீழ்ந்து கிடக்கிறேன் நான்! ஓய்வெடுக்க மெத்தையாய் உன் நெஞ்சம் அதில் உறங்காத என் கனவுகள் ஆற்று மணலாய் நான் சூரிய ஒளியென நீ ! இந்த விடிகாலை வேளையில் உன் ஒளிபட்டு நான் ஜொலிக்கும் ஓளியைத் தாங்க இயலாமல் கடல்நீர் கொண்டு எனை நனைப்பதும், அவை மேலும் பேரொளியாய் மின்னி என் மனதின் அன்பையும் ஆசையையும் உனக்கு உணர்த்துவதையும் நாம் மட்டுமல்ல இவ்வுலகமே பார்க்கிறது. என் வீட்டு வாயிலில் உனை வரவேற்க, பூக்களால் ஆன படுக்கை விரித்திருக்கிறேன். ஆம் ! பூவினும் மெல்லிய பாதம் தரையில் மிதிபடக்கூடாதே?!ஏனெனில், விழிகளைத் தாண்டி வரும் என் கண்ணீர் நிலத்தில் விழாமல் விரல்களால் துடைத்தவன் நீயல்லவா? அழைப்பு மணியோசையைக் கேட்க என் செவிகள் காத்துக்கொண்டு, இருக்கின்றேன். உன்அழகிய பிம்பத்தை தேக்கிக்கொள்ள விழிகள் ஏங்குகின்றன. நான் ஒரு விநாடி கூட கண்களை இமைப்பதில்லை, அந்த இமைப் பொழுதில் என் வாசலை நீ கடந்துவிட்டாய் ?!

நாங்க திருவாரூர் பக்கத்தில் ஒரு குக்கிராமம், எங்க கிராமத்திலே பொட்டு கட்டும் பழக்கம் உண்டு, அப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்தவள்தான் நான் பரம்பரை பரம்பரையாக நாட்டியம் தான் எங்கள் குலத்தொழில், கோவில் மண்டபத்தில் ஆடுவது. அரசாங்கத்தினால் பொட்டு கட்டும் முறை மிகத் தாமதமாக ஒழிக்கப்பட்டது எங்கள் கிராமத்தில்தான். தனிப்பட்ட விருப்பத்துக்கோ, காதலுக்கோ தகுதியில்லாதவங்கன்னு முத்திரைக் குத்தப்பட்ட எங்க குடும்பத்துக்கு விடிவிளக்காக வந்தவங்க தான் எங்கப்பா ஒரு நாடக கம்பெனி ஓனர், அப்பா உயிரோட இருந்தவரையில் நாங்க நல்ல நிலைமையில் தான் இருந்தோம். கல்யாணத்திற்கு பிறகு அம்மாவை ஆடவேண்டான்னு சொன்னதால எனக்கு நடனம் கற்றுக்கொடுத்து ஒரு நல்ல கெளரவமான நிலைமைக்கு கொண்டு வரணுமிங்கிறது அம்மாவுடைய ஆசை லட்சியம் எல்லாம். அப்பாவோட ஒன்றுவிட்ட தங்கைதான் பார்கவி அத்தை கணவர் இறந்தபிறகு அப்பாவுடைய நாடக கம்பெனிதான் அவரை அரவணைச்சது. அவருக்கு பரதம் அத்துப்படி, அவங்ககிட்டேயே நான் பரதம் கத்துகிட்டேன். அப்பாவும் அம்மாவும் ஒரு விபத்திலே இறந்தபிறகு அத்தை கைக்கு நாடக கம்பெனி வந்தது. முதல் நாள் ஷோவில் நான் பரதம் ஆடினேன். அப்போ விழாவிற்கு தலைமை தாங்க வந்த ஒரு பெரும்புள்ளி மூலமா எனக்கு இரண்டு பெரிய சபாவில் பரதம் ஆட வாய்ப்பு வந்தது.

சந்தோஷமா ஆடினேன். எனக்கு அந்த பெரும்புள்ளி மூலமா எங்கப்பாவே உயிரோட வந்தா மாதிரி தோணுச்சி, ஆனா எல்லா நினைப்பும் நிகழ்ந்திட்டா அப்புறம் மனுஷவாழ்க்கையில் சுவை ஏது ? எனக்கு சபாவில் வாய்ப்பு கிடைக்க அவரோட படுக்கையை பகிர்ந்துக்க நான் ஒப்புக்கொள்ளனுமின்னு ஏற்கனவே நான் அறியா ஒப்பந்தம் நடந்திருக்கிறது, விஷயம் கேள்விப்பட்டு நான் அத்தைகிட்டே கோபமா கேட்டபோது, எதையோ சொல்லி மழுப்பிட்டா ஆனா எனக்கென்னவே அவங்க எல்லாம் அந்நியமாகவே தோன்றினாங்க, அப்பத்தான் சந்துரு பார்கவி அத்தையோட பையன் பம்பாயில் இருந்து வந்தான். சின்ன வயசிலே வீட்டைவிட்டு ஓடி வியாபாரத்திலே பெரிசா சாதிச்சான்னு எனக்கு பார்கவி அத்தை அறிமுகப்படுத்தி வைச்சாங்க. சந்துருவோட முரட்டு சுபாவம் கொஞ்ச நாளுக்கு அந்த பெரிய புள்ளிகிட்டே இருந்து எனக்கு பாதுகாப்பினைப் பெற்றுத்தந்தது. ஒரு நம்பிக்கை வட்டத்திற்குள்ளே அவங்க எவ்வளவோ வர முயற்சித்தாலும் எனக்கு அதில் பெரிய ஈடுபாடு இல்லை.

பலபேர் முன்னாடி ஆட வந்திட்டா அவ பொண்ணில்லையா ? பாக்குறே பார்வை பேசுகிற பேச்சு எல்லாமே ஏதாவது ஒருவகையில் என் உடலை யாசித்தது. பணவிவகாரத்தில் இருந்து சபா வரைக்கும் அவங்களே பார்த்துக்கிட்டாங்க, இரண்டுவேளை சாதமும், இரண்டுவேளை காப்பியும் என் தேவைக்கு அதிகம் எனவே நான் பணவிஷயத்தில் தலையிடலை, வினிதா என் காரியதரிசியா வந்தபிறகு அந்த நிலை மாற ஆரம்பிச்சது. நடனத்தை புக் பண்ணவங்களோட விவரங்கள், பண விஷயம், இப்படி எல்லாம் என் கண் பார்வைக்குள்ளே வந்தது, இனிமேல் இவளை ஏமாற்ற முடியாதுன்னு அத்தையும் சந்துருவும் கல்யாணப்பேச்சை எடுத்தாங்க

இங்கபாரு இந்த சினிமா நடிகைங்க உன்னைப்போல நடனக்காரிங்க இவங்க வாழ்க்கையெல்லாம் லேசுலே திருப்தி அடையாது. தெரியாத சாத்தானுக்கு தெரிந்த பிசாசு மேல், கடைசிவரை உன் கால்ல சலங்கை கட்டணுமின்னு உன்னைப் பெத்தவ ஆசைப்பட்டா அதுக்கு சந்துருதான் சரி, முரண்டு பிடிக்காம அவனைக் கட்டிக்க, காலத்துக்கும் உனக்குத் துணையா கிடப்பான். உடையவன் இருந்தா யாரு உன்கிட்டே வாலாட்டமுடியும். இப்படியே உம்முன்னு இருந்தா என்ன அர்த்தம். எப்போ கல்யாணத்தை வைச்சிகலாம்.

அத்தை முன்னாடி மாதிரி எல்லாச் சொத்தையும் நீங்களே அனுபவிங்க, நானோ வினிதாவோ கணக்கு கூட கேட்க மாட்டோம் இந்த வீடு என் காலத்திற்குப் பிறகு உங்க பையனுக்கே சேரட்டும், ஆனா கல்யாணத்தைப் பற்றி மட்டும் பேசாதீங்க எனக்கு இப்போ அதைப்பற்றி எந்த ஐடியாவும் இல்லை, அப்பா அம்மாவிற்கு பிறகு எனக்குத் துணையா இருந்த மரியாதையால் பொறுமையா பேசறேன். இன்னொரு முறை சந்துருவுக்கும் எனக்கும் முடிச்சு போடாதீங்கன்னு திட்டவட்டமா சொல்லிட்டேன் ஆனா சந்துருவின் நடத்தையில் நிறைய மாறுதல்கள் எனக்கு உறுத்திற்கு. நம்பிக்கையா நான் சாய தோள் கிடைக்காதான்னு யோசிக்கும் போதுதான் உங்களைப் பார்த்தேன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.