(Reading time: 7 - 14 minutes)

12. பொன் எழில் பூத்தது புது வானில் - மீரா ராம்

PEPPV

ன்று முழுவதும் முக இறுக்கத்துடனே இருந்தவளிடம், பரந்தாமன் வந்து பேச்சுக்கொடுத்தார் கிளம்பும் நேரம் பார்த்து…

“சந்தா…”

“சொல்லுங்க சார்…”

“ஏன்ம்மா ஒருமாதிரி இருக்குற?...”

“ஒன்னுமில்ல சார்..”

“இல்லன்னு நீ சொல்லுற… ஆனா உன் முகமே சரியில்லையேம்மா…”

அவரின் வார்த்தைக்கு பதில் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தவள்,

“சார்… எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா?...” என வினவினாள் தன்மையாக…

“என்ன உதவிம்மா?....”

“அது வந்து…”

“எதுக்கும்மா தயங்குற?... தயங்காம கேளு…. என்னால முடிஞ்சா கண்டிப்பா செய்வேன்… முடியலைன்னாலும் முயற்சியாவது செய்வேன்…”

அவரின் பதில் அவளுக்கு நம்பிக்கை கொடுக்க, தைரியத்தை வரவழைத்துக்கொண்டவள்,

“நான் என் வேலையை ரிசைன் பண்ணிடலாம்னு இருக்கேன் சார்.. உங்களுக்கு தெரிஞ்ச இடத்துல வேலைக்கு ஆள் எதுவும் தேவைப்பட்டுச்சுன்னா கொஞ்சம் எனக்கு சொல்ல முடியுமா சார்?....”

அவள் எதையோ கேட்கப்போகிறாள் என்று எதிர்பார்த்திருந்தவர், கடைசியில் அவள் கேட்டதில் அதிர்ந்து அவளினைப் பார்க்க, அவளோ தரையினை வெறித்தாள்….

“கடவுளே… இது என்ன?...” என மனம் நொந்தவர், ப்ரசன் இருந்த அறைப்பக்கம் பார்த்திட,

“ப்ரசன் வந்த அன்னைக்கே இப்படி சந்தா கேட்குறா… என்ன நடந்துச்சுன்னு தெரியலையே….”

தன் போக்கில் எண்ணியவர், “எதுக்கும்மா திடீர்னு?...” என மெல்ல கேட்க,

சட்டென நிமிர்ந்து அவரைப் பார்த்திட்டவளின் பார்வை, “நிஜமாவே உங்களுக்கு தெரியாதா?...” எனக் கேட்டிட, அவரோ மேற்கொண்டு எதுவும் பேச முடியாது நின்றார் அமைதியாக…

“கடைசியில எல்லாரும் சேர்ந்து என்னை தோற்கடிக்கப் பார்க்குறீங்கல்ல?...”

அவள் தன் உணர்வுகளை அடக்கியபடி கேட்க, அவருக்கோ பேச நா எழவில்லை…

சில நொடிகள் கழித்து தன்னுணர்வு பெற்றவர், “இல்ல சந்தா, யாரும் அப்படி நினைக்கவே இல்லைம்மா…” என நிலைமையை விளக்க முயற்சிக்க,

“இல்ல சார்… அதான் உண்மைன்னு இப்போ எனக்கு தெளிவாயிட்டு….” அவள் உறுதியாய் கூறினாள்…

“நீ எதை எதையோ நினைச்சு இப்படி பேசுறம்மா… நல்லா யோசிச்சுப் பாரு… உனக்கே புரியும் நல்லது எதுன்னு….”

“இப்படி ஒரு திட்டத்தை மனசுல வச்சிட்டு தான் இத்தனை நாள் பேசுனீங்கன்னு எனக்கு முன்னமே தெரிஞ்சிருந்தா, இதை நான் எப்பவோ செஞ்சிருப்பேன் சார்…”

அவளின் வார்த்தைகள் அவரை வருத்தப்படுத்த,

“நீங்க கஷ்டப்படணும்னு நான் இப்படி பேசலை சார்… நான் கஷ்டப்படுறது உங்க யாருக்கே புரியமாட்டிக்குதேன்ற ஆதங்கத்துல தான் பேசுறேன்…” என்றாள் அவள் கலங்கிய வண்ணம்…

“அந்த கஷ்டம் இனியும் வேண்டாம்னு தான்ம்மா, ப்ரசன் இங்க வரப்போறதுக்கு நான் சரின்னு சொன்னேன்… ஆனா அவனுமே இதை திட்டம் போட்டு செய்யலைம்மா… இந்த இடத்துக்கு மாற்றலாயிட்டு கிளம்புன்னா, கிளம்பி போய் தானம்மா ஆகணும்… அதை தானம்மா அவனும் செஞ்சிருக்கான்… இதுல அவனை குறை சொல்லியோ அவனை திட்டியோ என்னம்மா ஆகப்போகுது?...”

“எதுவும் ஆகப்போறதில்லைன்னு தான் நானும் சொல்லுறேன்… ஆனா நான் சொல்லுறது ஏன் உங்க யாருக்கும் கேட்கவே மாட்டேங்குது?...”

அவளினது மனக்குமுறலாய் அவ்வார்த்தைகள் வெளிவர, அவளை எப்படி சமாதானப்படுத்த என்று தெரியாது குழம்பி போய் நிற்கையிலே, அவள் மேலும் தொடர்ந்தாள்…

“அவர் இங்க வரப்போறது உங்களுக்கு முன்னமே தெரிஞ்சிருக்கும்போது, நீங்க எங்கிட்ட சொல்லியிருந்தா நான் எப்பவோ கிளம்பி போயிருப்பேனே சார்… யார் முகத்துல முழிக்கக்கூடாதுன்னு நினைச்சேனோ இப்படி அவங்களை தினம் தினம் பார்க்கும்படி செஞ்சிட்டீங்களே சார்…”

அவள் வேதனை வார்த்தைகளாய் வெளிவர, அவரோ பதில் சொல்லமுடியாது திணறினார்…

“உங்களை கஷ்டப்படுத்துறது என் நோக்கம் இல்ல சார்… ஆனா என் வார்த்தையோ, நானோ உங்களை கஷ்டப்படுத்தியிருந்தா அதுக்கு நான் மனப்பூர்வமா மன்னிப்பு கேட்டுக்குறேன் சார்… மன்னிச்சிடுங்க… நான் கிளம்புறேன்…”

சொல்லிவிட்டு அவள் நிற்காமல் நகர, “சந்தா எங்கம்மா போற?...” என பதட்டத்துடன் கேட்டார் அவர்…

பதிலுக்கு ஒரு விரக்தி புன்னகை சிந்தியவள், நில்லாமல் அங்கிருந்து வேகமாய் செல்ல, அவரோ ப்ரசனைத் தேடி அவனறைக்கு சென்றார் உடனேயே…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.