(Reading time: 24 - 47 minutes)

தொடர்கதை - சண்முகசுந்தரியும்... சிங்காரவேலனும்... - 05 - ஸ்ரீலக்ஷ்மி

SS

 மகான் போல வாழவேண்டும் என்று அவசியமில்லை..

மனசாட்சிப்படி வாழ்தால் போதும்…!

டுத்து வந்த வாரம் முழுவதும் சண்முகசுந்தரி தன் கல்லூரிக்குப் பறந்தடித்துச் செல்வதும், வீட்டில் தன் அறையில் அடைந்துப் பொழுதைப் போக்குவதும் என்று நகர்த்திக் கொண்டிருந்தாள்.

பெற்றவர்களுடன் சேர்ந்தார்போல சிறிது நேரம் அமர்ந்து பேசுவதற்கு நேரம் போதவில்லை அவளுக்கு.. காலை ஏழு மணிக்கு எழுந்தால் இரவு பனிரெண்டோ இல்லை ஒன்றோ அவள் தூங்கப் போவது.. காலையில் அரக்கப் பரக்க எதையோ வாயில் அடைத்துக் கொண்டு, பதறியடித்துத் தன் ஸ்கூட்டியை விரட்டினால் மாலை ஐந்தோ அல்லது ஆறு மணிக்கு வீட்டிற்குள் நுழைந்து தன் அறைக்குள் கதவை மூடிக் கொள்பவள், பின்னர் எட்டு மணிக்குத் தமயந்தி வருந்தி வருந்தி அழைத்து, கத்தி, கெஞ்சி இரவு உணவை உண்ண வைப்பதும், அதன்பின் சண்முகசுந்தரி மீண்டும் தன் அறைக்குள் புகுந்துக் கொள்பதும் என்பதே அங்கே வாடிக்கையாய்ப் போனது.

இவளின் பெரும் பரபரப்புக்குப் பெரிதாக வேறொன்றும் காரணம் இல்லை.. புதுவருடக் கல்லூரித் தொடங்கி இவர்களைத் தொடர்ந்து புது மாணவமணிகள் கல்லூரியில் அடி எடுத்து வைத்திருப்பதே அதற்குக் காரணம்.

கடந்த ஒரு வாரமாகச் சமோசா குழு புதுமுகங்களை வறுத்து எடுத்து வாயில் போட்டுக் கொண்டிருந்தனர்.. அதற்காகத்தான் சண்முகசுந்தரி காலையில் நேரத்தில் எழுவதும்.. இரவு முழுவதும் தன் நண்பிகளுடன் அடுத்து வரும் நாட்களில் எப்படியெல்லாம் புதுமாணவமணிகளைக் கலாய்க்கலாம் என்று சதியாலோசனை நடத்தித் தன் மூளையைச் சுறுசுறுப்பாக வைத்துக் கொண்டாள்.. இல்லையென்றால் சுந்தரி அத்தனை சீக்கிரம் எழுந்தால் என்ற நிகழ்வு என்றோ அவள் வாழ்க்கைச் சரித்திரத்தில் இடம் பெற்றிருக்குமே.

அன்றும் அப்படித்தான் விடிகாலை ஆறு மணிக்கே எழுந்து கொண்டவள், அவள் அறையை ஒட்டிய பால்கனியில் இளைப்பாறப் போடப்பட்டிருக்கும் கூடை ஊஞ்சலில் அமர்ந்து கொண்டாள்.. தலைப் பாரமாக அவளுக்கு இருந்தது.. பின்னே பாரமாகத்தானே இருக்கும்.. விடியவிடிய கான்ஃப்ரன்ஸ் காலில் வெட்டி அரட்டை அடித்தால்..

கீழே போய் அன்னையிடம் காப்பியை கேட்கலாமா என்ற எழுந்த எண்ணத்தைச் சட்டென மறுபரிசீலனைச் செய்துகொண்டாள்.. அங்கே அவள் செல்ல டாடி தயாராக உரித்த பாதாமுடன் உட்கார்ந்து கொண்டிருப்பாரே!!.... ஏற்கனவே அவள் 'சவன்ப்ராஷ்' உண்பதில்லை என்ற பெரும் குறை அவருக்கு.. 'இனி அந்தக் 'கருப்புக் கம்மை' முழுங்கமுடியாது என்று சண்டைப்போட்டல்லவா அவரைச் சம்மதிக்க வைத்திருக்கிறாள்.. அது போனது என்று நிம்மதியாக இருக்கவிடாமல் இப்பொழுது அடுத்தக் கொடுமை.. கொஞ்சம் காலமாக உரித்த பாதாமை தயாராக வைத்துக் கொண்டிருப்பவர் இப்பொழுது காப்பியை வெறும் வயிற்றில் கேட்டால்..'

கட்டாயம் அந்த ஆபத்தில் சிக்கிக் கொள்ள இப்பொழுது அவளுக்கு மனம் விரும்பவில்லை.. அதற்குப் பதில் அவள் அதிகமாய் விரும்பும் காப்பியை தியாகம் செய்யலாமே..

'ம்.. வேறு வழியில்லை.. அவளுக்குச் சிறிது நேரம் தனிமை வேண்டியிருந்தது.. பல்விளக்காமல் காப்பியை கையில் பிடித்துக் கொண்டு அணுஅணுவாக ரசிக்க முடியாமல்.. என்ன கொடுமைடா சரவணா.. இந்தப் பெரிசுகளின் அன்புத் தொல்லைத் தாங்க முடியவில்லையே.. தாங்களும் ரசிக்காதுங்க.. நம்மையும் அனுபவிக்கமுடியாது..'

சில்லென்ற காலை பனிக்காற்றுக் குளிர்ச்சியாக அவள் முகத்தில் மோதிச் சிலிர்க்க வைத்தது.. ‘ம்.. இன்னும் சிறிது நேரம்தான்.. அடுத்த ஒரு மணி நேரம் கழித்துச் சூரியன் காலையிலேயே தன் கதிர்களை வீசி பொசுக்கத் தொடங்கி விடுவான்.. கோடை காலமும் முடிந்துவிட்டது.. ஆனாலும் கொஞ்சம் கூடப் பூமி குளிரக்காணம்..’

‘என்ன ஊரோ?.. பேருதான் பெத்த சென்னைப்பட்டிணம்.. இங்கே கிடைக்காத பொருட்கள் இல்லை.. வசதிவாய்ப்புக்கோ எந்தவிதக் குறையும் இல்லை.. பம்பாய்க்கு அடுத்தபடியாகச் சென்னையிலும் சாமானியர்களும் நிம்மதியாக வாழ்க்கையை வாழலாம்.. ஒருபக்கம் வசதிமிக்கப் பணக்காரர்கள் சொகுசான வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள் என்றால், மறுபக்கம் சாதாரண நடுத்தர மக்களும், அடிமட்ட மக்களும் ஒரே இடத்தில் பரவித்தான் இருக்கிறார்கள்.. வந்தாரை வாழ வைக்கும் சென்னையல்லவா.. அதிலெல்லாம் குறை சொல்லுவதிற்கில்லை..’

‘என்ன ஒன்று.. வருடத்தில் சில மாதங்கள் கொளுத்தும் வெயிலைத் தாங்கிக் கொள்ளப் பழகி விட்டால், சென்னை சொர்க்கப்பூமிதான்.. அந்த வகையில் அவளும் சரி அவள் அன்னை தமயந்திக்கும் சென்னைதான் பிறந்த வீடு.. ஜெயராமன் சில சமயங்களில் சூட்டெறிக்கும் வெயிலை பொறுக்க முடியாமல் என்ன ஊரோ திட்டிக் கொண்டே இருந்தாலும், சண்முகசுந்தரியோ.., 'சொர்க்கமே என்றாலும் எங்கஊரு போலாகுமா' ந்னு அன்னையுடன் கையைக் கோர்த்து அவரை வம்பிழுக்கிழுத்துப் வெறுப்பேற்றுவதில் ஆனந்தப்படுவாள்.

ஜெயராமன் கொளுத்தும் வெயிலை திட்டி என்ன பிரயோஜனம்.. அவருக்கு மட்டும் தெரியாதா என்ன?.. இதற்கெல்லாம் காரணம் பெருகிவரும் மக்கட் தொகையும், சுற்றுப்புறச் சூழலும்தான் என்று.. கடலைத் தேடி ஓடும் நதியைப் போல மக்கட்தொகையோ சென்னையை நோக்கி பெருகிக் கொண்டே போனால் யார்தான் என்ன செய்ய முடியும்?..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.