(Reading time: 24 - 47 minutes)

காலை டிபனாகப் பொங்கலையும், சாம்பரையும் எடுத்து வைத்த தமயந்தி சுந்தரியின் முகத்தைப் பார்த்தார்.. அவருக்கா தெரியாது அடுத்து என்ன வரப்போகிறதென்று..

"சுந்தரி.. இன்னிக்கு சூப்பரா மிளகுப் பொங்கல் அமைஞ்சிருக்கு.. வா சூடா சாம்பாரும் இருக்கு.. உங்கப்பாவுக்குப் பிடிக்கும்னு தேங்காய் சட்னியும் அரைச்சிருக்கேன்.. ஹாங்க் அப்படியே மதிய லஞ்சுக்கு லைமன் ரைஸ் அண்ட் பொட்டடோ ஃப்ரை வைச்சாச்சு.."

"அம்மா.. எனக்கு வேணாம் உங்க பொங்கலும் சட்னியும்.. ஆளை விடுங்க.. காலையிலும் சோறு, திரும்பவும் பகலுக்கும் சோறு.. போங்க மம்மி.. பேசாமல் என்னோடு கார்ன்ப்ளேக்ஸ் எடுத்திட்டு வாங்க.. இல்லைன்னா நான் காலேஜ் காண்ட்டீன்ல பர்கர் இல்ல சான்ட்விச் சாப்பிடுக்கறேன்.." வேகமாகத் தன் காலேஜ் பேக்கை எடுத்து மாட்டிக் கொண்டு நகர்ந்தாள் சண்முகசுந்தரி.

"அடிங்க.. கொழுப்பாடி.. காலையில அஞ்சு மணிக்கு எழுந்து மாங்கு மாங்குன்னு சமைச்சி வைச்சா குறையா சொல்லறே?.. உங்கப்பா என்னடான்னா, பொங்கலை செய், உப்புமாவைக் கிண்டு, மோர்குழம்பை சமைன்னு என்னை உசுரை எடுக்கிறார்.. நீ அதைச் சோறுங்கற.. உன் மனசுல என்ன நினைச்சிருக்கே?.. இது வீடா இல்லை ஹோட்டலா?.. ஆளாளுக்குத் தனித்தனி சமையல் செய்ய.. அந்தக் காலத்தில்தான் கூட்டுக் குடும்பமா இருந்தப்ப இவங்க அம்மா, எங்கத்தை மெனுன்னு பேர்ல பத்து வகைச் செய்ய வைப்பாங்க.. ஏதோ இப்போவது நிம்மதியா இருக்கலாம்னா.. எனக்குன்னு வந்து பொறந்து வந்திருக்கே பாரு?.. நல்லா வந்திடும் வாயில.. பர்க்கராம் பர்கர்.. அதெல்லாம் மொக்கி மொக்கிதாண்டி இப்படி அங்கங்கே கொழுப்பை டயர் கணக்கா வளர்த்து வைச்சிருக்கே.. இந்த ரீதியில் நீ போனா.. மகளே சொல்லிட்டேன் நாளைக்கு எவனும் உன்னைக் கட்ட மாட்டான்.." கோபமாகக் கண்களை உருட்டத் தொடங்கினார் தமயந்தி.

"தமா.. இங்கப்பாரு.. பிள்ளைக்குப் பிடிச்சதா செய்து கொடுப்பியா?.. சும்மா தேவையில்லாமல் பேசிட்டு.. கார்ன்ப்ளேக்ஸ் ஒண்ணும் மோசமில்ல.. அதிலையும் பால் இருக்கு.. எல்லாச் சத்தும்தான் இருக்கு.. முதல்ல அதை ரெடி பண்ணு.. ம்.. அப்படியே அதில கொஞ்சம் ப்ரோட்டீன் எக்ஸை மிக்ஸ் பண்ணிடும்மா மறக்காமல்.. இப்ப என்னை எதுக்கு முறைக்கறே தமா.. ஓ.. உனக்கென்ன.. உன் பொங்கல் வேஸ்ட் ஆகிடும் அப்படின்னு நினைச்சா.. அதை எடுத்து ஃப்ரிட்ஜ்ல வை.. ராத்திரி டிபனுக்கு ஆச்சு.. வேலைக்காரி குட்டிக்கு எடுத்துக் கொடுத்தேன்னா அப்புறம் இருக்கு சங்கதி.." ஜெயராமன் தொடங்கிவிட்டார்.

"அய்யோ சாமி.. எல்லாம் எடுத்து வைக்கறேன்.. ஆளை விடுங்க.. இப்படி மிஞ்சதைத் திண்ணு நல்லா தொப்பையை வளர்த்துகங்க.. அப்புறம் என்னைக் குறை சொல்வீங்க.. நாந்தான் உங்களுக்கு ஓவரா தீனி கொடுக்கறேன்னு.." என்று வம்படித்துக் கொண்டே மகளுக்கு அவள் கேட்ட கார்ன்ஃப்ளேக்ஸை ரெடி செய்தார் தமயந்தி.

"தமா.. பொங்கல் சூப்பர்மா.. இன்னும் கொஞ்சம் வை.. செல்லம் ஒரு வாய் சாப்பிட்டுப் பாரும்மா.. நிஜம்மா உங்க அம்மா சூப்பரா பண்ணி இருக்கா.. என்னதான் இருந்தாலும் சொல்லக்கூடாது தமா உனக்குக் கைமணம் ஜாஸ்திடி.." எனத் தன் மனைவியைப் பார்த்துக் கண் அடித்தார் மகளறியாமல்.. தமயந்தியோ முகம் செம்மையுற நாணத்துடன் தலை குனிந்து அவரைக் கண்டும் காணாதும் பார்த்துக் கொண்டிருந்தார் தன் சமையலை ரசித்து உண்ணும் கணவன் மேல் அலாதியான பாசம் பொங்க..

"டாட்.. நான் பார்க்கலையாம்.. நீங்களே எனக்கும் சேர்த்துச் சாப்பிடுங்கப்பா உங்க அருமை பொண்டாட்டி செஞ்சதை.. அம்மா நான் கிளம்பறேன்.. மோஹியோட ஸ்கூட்டி ஹார்ன் கேட்குது.. நீங்க ரெண்டு பேரும் நிதானமா ஜொல்லு விட்டிப்பீங்களாம்.. அப்பா, அம்மா உங்களை நல்லா சைட் அடிக்கிறாங்கப்பா.. கொஞ்சம் நல்லா கவனிங்க.." அவசரகதியில் கடைசிச் சொட்டுப் பாலை வாயில் ஊற்றிக் கொண்ட சண்முகசுந்தரி தன் பேக்கை மாட்டிக் கொண்டு வாசலுக்கு விரைந்தாள்.

ஜெயராமன் மகளின் கேலிப் பேச்சில் சிரித்தபடிப் பெருமையுடன் மீசையை முறுக்க.. சட்டென முதலில் தன்னைச் சுதாரித்துக் கொண்டது தமயந்திதான்.. வெட்கம் அவரைப் பிடிங்கித்தள்ள..

"எல்லாம் உங்களைச் சொல்லணும்.. எப்ப என்ன பேசணும்னு தெரியாத விவஸ்தைக் கெட்ட மனுஷன்.. கொஞ்சமாவது அறிவிருக்கா?.. இப்பப் பாருங்க நைசாக உங்க பொண்ணு டிபன் பாக்சை அப்படியே வைச்சிட்டுப் போயிட்டா.." வாசலுக்கு ஓடினார் தமயந்தி கைகளில் மகளின் மதிய உணவு டப்பாவுடன்.

அரைகுறை உணவில் ஜெயராமனும் அவள் பின்னால் எழுந்து வெளியே வர.. அதற்குள்ளாகவே சண்முகசுந்தரி ஸ்கூட்டியை கிளம்பி இருந்தாள்.

"சுந்தரி டிபன் டப்பா.." தமயந்தி சத்தம் போட..

"மாம்.. நோ ப்ராப்ளம்.. காலேஜ் கேண்ட்டீனில் பிட்சாவோ, இல்லை பர்க்கரோ.. நோ லைமன் ரைஸ் டுடே.. எஸ்கேப்.." என்று வேகமாக வண்டியைக் கிளப்பியவள்.. மீண்டும் வண்டியைத் திருப்பி அன்னையின் அருகில் வந்தாள்.

"டோண்ட் ஓர்ரீ மாம்.. டாட் இஸ் ஆல்வேஸ் தேர்.. நைட்டுக்கு அதையே கொடுத்திடுவீங்களாம்.. பை டாட்.. பை மாம்.." ஒற்றைக் கையால் அன்னையின் கன்னத்தை லேசாகத் தடவியவள்.. மற்றொரு கையால் வண்டியை பேலன்ஸ் செய்து தமயந்தி ‘ஜாக்கிரதை ஜாக்கிரதை’ என அலற அலற அவரைப் பயமுறுத்திக் கலங்கடித்து வண்டியை ஒரு வழியாகத் திருப்பிக் கொண்டு விரைந்தாள் அதி வேகமாக.

"பார்த்தீங்களா திமிர் பிடிச்சக் கழுதை.. சாயங்காலம் வீட்டுக்குத்தானே வரணும்.. காலை உடைக்கறேன்.. எவ்வளவு வேகமா ஒத்தைக் கையால் ஓட்டிட்டுப் போகறா?.. இருக்கட்டும்.." தமயந்தி கத்தத் தொடங்க..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.