(Reading time: 24 - 47 minutes)

வந்தாரை வாழ வைக்கும் என்ற நிலைப் போய் வந்தாலே பயப்படும் நிலை என்பதுதான் இப்போதையச் சூழ்நிலை..

விருந்தோம்பலில் புகழ் பெற்றவர்கள் நம் தமிழ் மக்கள்.. ஆனால் இப்பொழுதோ, அய்யோ யாராவது வந்து விடுவார்களோ என்று பயப்படும் சூழ்நிலை.. அதிகப்படி உருப்படி வீட்டிற்குள் வந்தால் முறைக்கும் வேலைக்காரர்களைக் கூடச் சமாளித்துவிடலாம் அவர்களும் கொஞ்சம் பணத்தைக் கொடுத்து வாயை அடைத்து.. ஆனால் வாழ்வாதாரமான தண்ணீர்.. அதற்கெங்கே போவது?..

தனி வீடாய் இருந்தால் ஓரளவுக்குச் சமாளிக்கலாம்.. இதே காம்பௌண்ட் குடியிருப்போ, அடுக்குமாடிக் கட்டிடங்களில் இருப்பவர் என்றால் அவர்கள் பாடு அதோகதிதான்.. தண்ணீருக்காகச் செலவு செய்யத் தயாராக இருந்தாலும், தண்ணீரைக் கொண்டுவந்து கொடுக்கும் டேங்கர்களுக்காகக் காத்திருப்பது இன்னும் கொடுமை..

வானம் மும்மாரிப் பெய்யுமா என்று ஆகாயத்தைப் பார்த்து பூஜைப் போட்டக் காலம் போய், தண்ணீர் டேங்கர்கள் இன்று கிடைக்குமா என்று சப்ளையை எதிர்பார்த்துப் பூஜை போட்டாலும் கூடிய சீக்கிரத்தில் ஆச்சர்யம் இல்லை..

சண்முகசுந்தரி கூடை ஊஞ்சலில் காலை உந்தித் தள்ளியபடி இப்படி எதையோ சிந்தித்துக் கொண்டிருந்தாள்.. அவளது இளங்கலையில் முக்கியப் பாடம் சரித்திரம் என்றாலும், அவள் துணைப்பாடமாகப் பூகோளத்தையும், அகழ்வாராய்ச்சி செய்யத் தோதாகப் பாடத்தையும் எடுத்திருந்தாள்.

ஏனோ இந்தச் சமயத்தில் அவளுக்கு நேற்று சோடா புட்டி சோமப்பா நடந்தியப் பாடங்கள் தலையில் உதித்துச் சிந்திக்கத் தோன்றியது.. சென்றமுறை அகழ்வாராய்ச்சிக்காக இவர்களது சீனியர்கள் தஞ்சையை அடுத்த ஒரு தனிப்பட்ட ஒதுக்குப்புறமான கிராமத்திற்குச் சென்றபொழுது அங்கே வெகு காலமாகப் பயிரிடப்படாத வறண்டுப் போன நிலங்களையும் கண்டு வெகுவாக மன வருந்தியாகக் கூறியவர்.. இப்பொழுது அங்கே வானம் பொய்த்துப்போனதால் நிலத்தடி நீர் குறைந்திருக்க, சுற்றுப்பட்ட வட்டாரங்களில் ஏதோ தொழிற்சாலை கட்டப்பட்டு வருவதையும் பகிர்ந்து கொண்டார்..

மேலும் கழிவுநீர் அங்கே ஓடிக்கொண்டிருக்கும் சிற்றாற்றில் கலந்து சுற்றுச் சூழலை மாசுபடுத்துவதைச் சொல்லி, வரும் தலை முறையாவது இதெயெல்லாம் எப்படித் தவிர்க்கலாம் என யோசிக்க வேண்டும் எனத் தன் கருத்தை வலியுறுத்தியது இப்பொழுது சண்முகசுந்தரிக்கு ஏனோ தோன்றியது.

அவர் முக்கியமாக ஏனோ சமோசா குழுவை அன்று தாக்கியதாகவே அவள் மனதுக்குப்பட்டது.. புதிய மாணவமணிகளுடன் கைகோர்த்து நல்ல திட்டங்களைச் செயல்படுத்த ஆலோசிக்காமல், அவர்களை வம்புக்கிழுத்துக் கலாய்த்து ஆரம்பத்திலேயே பகை உணர்ச்சியைத் தூண்டுவது போலச் செயல்படுவதும் கூடத் தப்புதான் என்று அவர்கள் குழுவுக்கு மறைமுக எச்சரிக்கையும் விட்டிருந்தார்.

‘ஆனால் அதையெல்லாம் கேட்பவர்களா நாங்கள்’ என்று சண்முகசுந்தரிக்கு இப்பொழுது தோன்றியது.. ஆனாலும் ஏனோ மனம் நெருடியது.

நேற்று அவர் நடத்திய சுற்று சூழல் எப்படி நம் வாழ்வைப் பாதிக்கிறது என்ற பாடம் ஏனோ அவள் மனதை அழுத்தி அசைத்துப் பார்த்தது.. சற்று நேரம் முன்பு வீசிய சில்லென்ற காற்று இப்பொழுது வெம்மையாக வீசி வியர்வையை வரவழைக்க.. நாடு எங்கே சென்று கொண்டிருக்கிறது என அவளை இப்பொழுது யோசிக்கத்தான் வைத்தது.

உள்ளே செல்லலாம் என்று திரும்பியவள் சட்டென எதிர்வீட்டில் பால்கனியில் தோன்றிய அந்த வாலிபன் சிங்காரவேலன் கண்ணில் படவும் சற்றே நிதானித்தாள்.. ‘இவந்தானே அன்று மோதியபோது என்னைப் போதை மருந்துக்கு அடிமை என்பது போல இளக்காரமாய்ப் பேசியவன்.. திமிர் பிடித்தவன்.. ஆளைப்பாரு.. அரைக்கால் ஷார்ட்சும் முன்டா பனியனும்..’

என்ன செய்கிறான்.. 'ஓ.. பிட்னெஸ் ஃப்ரீக்கோ.. ஐயா யோகா ஆசாமியா.. வாவ் சூப்பர் உடம்பு இப்படி வளைந்தால்.. ம்.. நானும்தான் சூரிய நமஸ்காரம் செய்ய ட்ரை பண்ணி அலுத்துப் போய்விட்டேன்.. இவன் என்னடாவென்றால் இவ்வளவு இலகுவாக வளைந்து, நெளிந்து குனிகிறான்.. அதான் இவ்வளவு கட்டுக்கோப்பா உடலை வைத்திருக்கிறானா?.. கட்டாயம் ஆறடிக்குக் குறையாமல் இருப்பான்.. அதற்கேற்ற கட்டுடல்தான்.. பன்னு சொக்கிப் போனதில் தப்பேயில்லை.. ஆனால் ஆசாமி கலர் கொஞ்சம் கம்மியோ?.. ம்.. அன்னிக்குச் சரியாகப் பார்க்கவில்லை.. ஆனாலும் இருக்கலாம்.. ஏதோ அம்மா அவனது பூர்வீகம் தங்கள் தாத்தாவின் சொந்த ஊர்பக்கம்மென்று சொன்னார்களே.. சரியான கிராமராஜனோ...ஆனால் அதான் நம்ம திராவிடக்கலர்..'

யார் சொன்னார்களோ சண்முகசுந்தரிக்கு தானாகவே ஒருமுடிவுக்கு வந்திருந்தாள்.. கிராமத்துஜனங்கள் என்றால் நிறம் சற்று மட்டென்று..

"ஓ.. அதற்குள் யோகாபயிற்சியை முடித்து விட்டானா?.. இப்போத்தான் ஆரம்பித்தான்.. அவனை வெறித்துக் கொண்டிருந்தவளுக்கு நேரம் பறந்து கொண்டிருப்பது கண்ணில் படவில்லை போலும்..

'இப்பொழுது என்ன செய்கிறான்.. ஓ.. பெரியம்மாவிடம் ஏதோ பேசுவது போல இருக்கிறது..'

எங்கிருந்தோ தமயந்தியின் குரல் கேட்டது..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.