(Reading time: 24 - 47 minutes)

"அதான்மா.. அவங்க வீட்டு அவுட்ஹவுசுக்கு வந்திருக்கும் அந்த ஆளு ஏதோ சொல்லிக் கொண்டிருக்கிறாங்க பாருங்க.."

"ஆமாம்.. என்ன சொல்லும் அந்தத் தம்பின்னு.. இதுக்கு வெத்தலைல மைத் தடவிப் பார்க்கணுமா?.. கண்ணுளவங்களுக்கு நல்லாவே தெரியும்.. அந்தத் தம்பி சமூகசுற்று சூழலைப் பாதுக்காக்கும் பசுமைப் புரட்சி இயக்கத்தில் மெம்பர்ன்னு சொன்னாரு.. என்விரான்மெண்ட் அக்டிவிட்ஸ்ட்.. அதான் உங்க பெரீம்மாவுக்கு லெக்சர் கொடுப்பாங்களா இருக்கும்.. நல்லா வேணும்டி.. பாரு குப்பைக் கூடையை எடுத்துக்கிட்டு அப்படியே உள்ளே போகுது.."

ஹா ஹா என வாய்விட்டுத் தாயும், மகளும் சிரிக்க.. சட்டென்று ஏதோ ஊந்துதலில் அவர்களைத் திரும்பிப் பார்த்த சிங்காரவேலன் அவர்கள் தன்னை நோக்குவதைக் கண்டு கொண்டான்.. அலட்சியமாக அவர்களைப் பார்த்தவன், கண்டு கொள்ளாமல் மீண்டும் ரேணுகாவிடம் எதையோ வலியுறுத்திவிட்டு உள்ளே சென்று விட்டான்.

"ஏய் அடங்குடி.. அந்தத் தம்பி நம்மளை பார்த்திடுச்சு போல.. அய்யோ நாம சிரிச்சதை அவரைன்னு நினைச்சி தப்பா இல்லை எடுத்துப்பாங்க.." தமயந்தி சிரிப்பை நிறுத்திவிட்டுப் புலம்பத் தொடங்கினார்.

"அம்மா விடுங்கம்மா.. அவர் என்ன உங்க வீட்டு மாப்பிள்ளையா?.. அவர் தப்பா எடுத்தா என்ன சரியாத்தான் புரிஞ்சிகிட்டாத்தான் நமக்கு என்ன?.. நம்மளை முறைச்சிட்டு போறாங்கப் பாரு.. வாம்மா.. பசி உசுரு போகுது?.. போய்க் குளிச்சிட்டு வர்றேன்.. டிபனை எடுத்து வைங்க.. மொக்கிட்டு காலேஜுக்கு நான் போகணும்.." என்ற சுண்முகசுந்தரி எதிர்வீட்டு வாசலை ஏதோ தப்புச் செய்து விட்டது போலப் பார்த்துக் கொண்டிருக்கும் அன்னையைக் கண்டு கொள்ளாமல் வேகமாக ஓடிக் குளியளறைக்குள் புகுந்து கொண்டாள்.

எப்பொழுதும் போல் கைப்பேசியில் லேட்டஸ்ட் குத்துப் பாட்டைக் கேட்டுக் கொண்டு சோப்பைக் கரைத்துக் கொண்டிருந்தவள் தமயந்தி பாத்ரூம் கதவை மீண்டும் தட்டி மணி எட்டரை ஆகிவிட்டது..சீக்கிரம் குளித்து விட்டு வரச் சொல்லவும்.. அரக்கபார்க்க குளித்து முடித்தவள் அடுத்தப் பத்து நிமிடம் கண்ணாடி முன் நின்று கொண்டாள்.. அவசரகதியில் முகத்தை அரிதாரம் இட்டு இன்னும் வெள்ளைப் பெயிண்ட்டை அப்பிக் கொண்டு, இளம் சிவப்பில் மஞ்சள் வண்ணப் பூக்களிட்ட குர்த்தியும், ஆழ்ந்த மஞ்சளில் தொடையை இறுக்கிப் பிடிக்கும் லெக்கின்ஸும் அணிந்து படிகளில் தடதடவென ஓடி வந்தாள்.

"மாம்.. என் டிபன் ரெடியா?.."

"குட்மார்னிங்க் செல்லம்.. வாடாம்மா.. இன்னிக்கு லேட்டா.. முதல்ல உரிச்சி வைச்ச பாதாமை சாப்பிடும்மா.. நல்ல ஞாபக சக்தி இருக்கும்.."

"குட்மார்னிங்ப்பா.. இன்னிக்கு பாதாம்க்குக் கட்.. அம்மாவுக்குக் கொடுத்திடுங்க.. பாருங்க வரவர எல்லாத்தையும் மறந்து போறாங்க?.."

"ஏய் சுந்தரி.. இதென்னடி டிரஸ்.. குட்டியா இருக்கு குர்த்தி.. காலை இறுக்கிபிடிச்சப் பேண்ட்.. கொஞ்சம் லூசு பேண்ட் போட்டா ஆகாதா?.."

"பாருங்கப்பா இதுக்குத்தான் சொன்னேன்.. இவங்க என் டிரஸெல்லாம் இஸ்திரிக்காரனுக்குக் கொடுத்து வாங்கி வைக்கலைன்னா?.. நான் ஆக்ச்சுவலா இன்னிக்கு ஜீன்னும், வொயிட்  டிஷர்ட்டும் ப்ளான் பண்ணி அலுமாரியைத் திறந்தா அதைக் காணம்.. வேற எதுவும் தோதாக அமையலை.. அதான் இன்னிக்கு லெங்கின்ஸு.. இதுக்கென்ன குறைச்சல் சொல்லுங்கப்பா..”

என்ன சொல்லுவார் தன் செல்ல மகளுக்கு.. அவருக்குத் தெரிந்துதான் இருந்தது தன் மகளின் கால்கள் சற்று தடுமனென்று.. வாயைத் திறந்தால் தமயந்தி கிழித்துத் தோரணம் கட்டி விடுவாளே.. ஓவராகத் தீனிப்போட்டுப் பெண்ணைக் குண்டடித்து விட்டதாக.. ஒன்றும் பேசாமல் அசட்டுத்தனமாக இளித்து வைத்தார்.

"தமா.. என்னம்மா.. எல்லாம் டிரஸெல்லாம் நல்லாதான் இருக்கு.. அதான் சொல்லிடுச்சு இல்ல.. இஸ்தரிகாரனுக்குச் சொல்லிவிடும்மா.." என்றவர்.. "செல்லத்துக்கு நேரமாகுது பார்.. டிபனை எடுத்து வை.." பாதாமை மறந்து போனவராய் தமயந்திக்கு உத்தரவுப் பிறப்பிக்க..

அவரை முறைத்த தமயந்தியோ.. "உங்க பொண்ணை ஒண்ணும் சொல்லிடக் கூடாதே.. வரிஞ்சிக் கட்டிக் கொண்டு வந்து விடுவீங்களே?.. எனக்கென்ன போச்சு.. ஒழுங்கா டிரெஸ் பண்ணிக்கலைன்னா நாலு பேர் நாலு விதமா பேசப்போறாங்க.. என்னவோ பண்ணுங்க அப்பாவாச்சு.. பொண்ணாச்சா.." என்று சலித்துக் கொண்ட தமயந்திக்கு உள்ளூரத் தன் மகளின் அழகின் மீது பெருமைதான்..

கொஞ்சம் பூசினாற்போல் இருந்தாலும், மகளின் வசீகரமான முகமே மற்ற குறைகளைப் பூசி மூடிவிடும்.. என்னவொன்று சற்று இறுக்கப் பிடித்த உடைகளில் மகளின் இளமை வனப்பு இன்னும் எடுப்பாகக் காட்டி மற்றவர்கள் கண்களை உறுத்துமே என்று சராசரித் தாயாய் கவலைதான் அவருக்கு.. எல்லோர் பார்வையும் ஒன்றாக இருக்க முடியாது அல்லவா?.. மற்றபடி அவரே கண்ணை உறுத்தாத இக்கால ஆடைகளை அணிபவர், மகளை என்றும் தடை விதித்ததில்லை உடைகள் விஷயத்தில்.. சூடிதாரோ, இல்லை சற்றே நீளமான குர்த்தி, ஜீனோ எதுவாக இருந்தாலும் குறை சொல்வதில்லை அவளுக்குப் பொருத்தமாய் இருக்கும் பட்சத்தில்..

"சரி தமாம்மா.. போங்க போய் டிபனை எடுத்து வைங்க.. நானும், செல்லத்தோடு சாப்பிட்டுவிட்டு சீக்கிரமா ஆபிஸ் கிளம்பணும்மா.." தழைந்து போனார் ஜெயராமன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.