(Reading time: 24 - 47 minutes)

"சுந்தரி.. இன்னும் எழுந்திருக்கலை?.. நேரமாச்சே.. இன்னிக்குக் காலேஜ் போகலியா?.."

எங்கோ கேட்டக் குரல் இப்பொழுது அருகில் மீண்டும் கேட்டது.

"என்னம்மா என்ன செய்யறே?.. காப்பி வேணும்னு காலையில ஆலாப் பறப்பே?.. என்ன இன்னிக்குச் சத்தத்தைக் காணோம்.."

"ஷ்.. மாம்.. அங்கே பாருங்க?.."

"அடியே அறிவுகெட்டவளே!! உனக்கு எத்தனை முறை சொல்லுவது மண்டையில் ஆணி அடிச்சா மாதிரி.. மாம்மாம் மாம்.. அப்படியே அடிச்சேன்னா.. அம்மான்னு கூப்பிட்டுத் தொலைடி.. தமிழ்ல அழகான வார்த்தை அம்மான்னு உனக்கு எவ்வளவு சொன்னாலும் புரியாது?.."

"ச்சு.. மாம்.. சரிசரி முறைக்காதே.. என்னவோ உங்க ஒண்ணு விட்ட ரெண்டு விட்ட தாத்தா தமிழ் வாத்தியாரோடு பேத்தி நீங்க.. ஆனா நீங்க அந்தக் காலத்து குயின் மேரிஸ் இல்ல.. இப்படிப் பழைய பஞ்சாங்கமா அம்மான்னு உங்களைக் கூப்பிடணும்னு சும்மா ஆர்டர் போட்டுக்கிட்டு.. போங்க அம்மா.."

"இங்கப்பாரு சுந்தரி.. விஷயம் அதிலில்லை.. நான் கணக்கில் புலி.. அதேசமயத்தில் ஆங்கில இலக்கியமும் படிச்சிருக்கேன்.. அதுக்காக.. தமிழ்மொழிதான்டி என் தாய்மொழி.. நான் பிறந்து வளர்ந்ததும் நம்ம தமிழ்நாட்டுலதான்.. படிப்பையெல்லாம் விடு.. அம்மான்னு தன் பிள்ளைகள் சொன்னால் எந்தத் தாயும் மகிழ்ந்துதான்டிப் போவாங்க.. இப்போ உனக்கு அது எங்கப் புரியப் போகுது?.. சரி அதை விடு.. ஆனால் சொல்லிட்டேன்.. நீ என்னை அம்மான்னு கூப்பிடலை உனக்கு இனி காப்பிக் கட்டுதான்.." என்றவர்..

"ஹாங்க்.. மறந்திட்டேன் பாரு.. நான் படிச்சது ஸ்டெல்லா நாட் க்வீயின் மேரீஸ்" முகம் முழுவதும் புன்னகையில் பொங்கிப் பூரித்தார்.

"அய்யோ அம்மா.. ஆத்தா.. என் தெய்வமே.. அம்மா.. அம்மா.. அம்மாவும் நீயே.. என் ஆத்தாளும் நீயே.. என்னை வாழவைக்கும் தெய்வமும் நீயே.. போதுமாம்மா.. காப்பியை கண்ணுல காட்டுவீங்களாம்.. என் ஸ்டெல்லா க்வீனே.." தமயந்தியை கட்டிக் கொண்ட சுந்தரி அவர் கன்னத்தில் முத்தமிட்டாள்.

"அடச்சீ.. அடங்குடி.. பல்லைக்கூட விளக்காமல் பக்கத்துல வராதேன்னு எத்தனை வாட்டி சொல்லறது?.." அவளைத் தள்ளி நிறுத்திய தமயந்தி..

"அது சரி இன்னிக்கு என்ன விஷேசம் என் செல்லகுட்டி சுந்தரிக்கு.. காலையில எழுந்து இப்படிப் பால்கனியில காத்து வாங்கிட்டு இருக்கே?.. ஒருவேளை ஏதாவது பரீட்சைக்குப் படிக்கிறீங்களோ?.." நக்கலாக அவளைக் கேட்டவர் அவளை ஏற இறங்கப் பார்த்தார் கையில் தப்பித் தவறி ஏதாவது புத்தகம் இருக்கா என்று..

அவருக்கா தெரியாது தன் மகள் பரீட்சைக்கு முதல் நாள் புத்தகத்தைத் தொட்டுப் பார்டரில் பாஸ் பண்ணுபவள் என்று..

"அம்மா.. திஸ் இஸ் டூ மச்.. நீங்க சொல்வதைப் பார்த்தால் நான் என்னவோ மக்கு மாதிரி டோன் வருது.. இங்கப்பாருங்க.. நான் கடைசி நாள்ல படிச்சாலும் ஓரளவுக்கு நல்ல மார்க்தான் வாங்குவேன்.. இப்படியெல்லாம் கலாய்ச்சா அப்பாகிட்ட போட்டுக் கொடுக்க வேண்டிவரும்.."

சுந்தரி கடைசி நிமிடத்தில் படித்தாலும் எப்படியோ டிஸ்டிங்க்ஷனில் பாசாகிவிடும் ரகம்தான்.. ஆனால் தமயந்தி அவள் பார்டரில் பாஸ் பண்ணுவது போல அலுத்துக் கொள்வாள் மகள் முதல் மதிப்பெண் வாங்குவதில்லை என்ற சராசரியான பெற்றோர்களின் மனவருத்தத்தில்.

"போதும் அடங்கு மகளே.. உங்க மார்க் லட்சணம் எங்களுக்குத் தெரியாது பாரு.. அப்படியே காலேஜ் பர்ஸ்ட்.. இதுல உங்க அப்பாகிட்ட கோழிமூட்டுவீங்களோ?.. அவரே பார்டர் மார்க்த்தான்.. விடுவியா.. அதை விடு.. நான் வரும்போது அப்படியென்னடி ரொம்ப யோசனையா முகத்தை வைச்சிருந்தே?.."

"பார்த்தீங்களா?.. நீங்க வந்தீங்க.. செ.. நான் அப்படியே மறந்து போயிட்டு.. அம்மா.. சத்தம் போடாமல் நம்ம பெரியம்மா வீட்டை நோட் பண்ணுங்களேன்?.." சண்முகசுந்தரி எல்லாவற்றையும் மறந்து அன்னையிடம் செல்லம் கொஞ்சி கிசுகிசுத்தாள்.

"ம்.. என்னடி உங்க பெரியம்மா வீட்டுல வச்சிருக்கு?.. ஹாங்க்.. இதென்னடி கூத்து?.. ஹா ஹா.. நல்லா மாட்டிக்கிட்டாளா ரேணுகாக்கா?.. வேணும்டி.. எத்தனை வாட்டி நாங்க காலனி அசோசியேஷன்ல சொல்லிக் கண்டிச்சிருக்கோம்.. கேட்டாங்களா?.. பாரு அந்தத் தம்பி நல்லா ஏதோ லெக்ச்சர் கொடுக்குதுப் போல.." என வாயைப் பொத்திக் கொண்டு அடக்க முடியாமல் சிரித்தாள் தமயந்தி.. எங்கே தான் சிரித்தால் எதிர்த்த வீட்டில் நின்று கொண்டிருக்கும் ரேணுகாவின் கண்ணில் பட்டு விஷயம் விபரீதமாகி விடுமோ என்ற பயத்தில்..

"அம்மா உங்களுக்கு விஷயம் விளங்குதா?.."

"விளங்காம என்ன சுந்தரி.. அதான் பதாஞ்சலி விளம்பரம் கணக்கா நல்லா பளபளக்கிறாளே ரேணுகாக்கா?.. பாரு அங்க குப்பைத் தொட்டியை கையில பிடிச்சிக்கிட்டுத் திருதிருன்னு முழிக்குது?.. நாங்க எவ்வளவு சொன்னோம்?.. கேட்டிருப்பாளா?.. வாசல்ல வர குப்பைத் தொட்டிக்காரனுக்கு மாசம் நூறு ரூபா கொடுக்கக் கணக்குப்பார்த்துகிட்டு.. வீட்டு வாசலுக்கு முன்னாடி குப்பைக்கவரை வைச்சிட்டு.. அதை நாய், பூனை பிரிச்சி போட்டுக் குப்பைக்காரன் எடுப்பதுப்பதற்கு முன்னாடி தெருவை நாறடிச்சி.. கேட்டா வாசல் தெருவுக்கு முன்னாடி இருப்பதை எடுப்பது அவன் ட்யூட்டி நான் மாசம் தெருச் சுத்தம் பண்ண காசு கொடுக்கலையா, வீட்டுக்கு வந்து குப்பை அள்ள தனிக்காசு கொடுக்கணுமான்னு வெட்டி சண்டை.."

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.