(Reading time: 7 - 14 minutes)

அறைக்குள் நுழைந்தவரின் முகம் பதட்டத்தினை பிரதிபலிக்க, ப்ரசனின் கண்கள் சுருங்கியது…

அவனிடம் நடந்தவற்றை அவர் கூற, அனைத்தையும் நின்று நிதானமாக கேட்டுக்கொண்டவன் அடுத்த நொடி அங்கே நிற்கவில்லை…

சந்தாவின் இடத்திற்கு அவன் வர, அங்கே அவள் இல்லை…

ராஜினாமா கடிதம் மட்டும் டேபிள் வெயிட் போட்டு அங்கே அவனுக்காக காத்திருக்க, அவனோ அதனை எடுத்துக்கொண்டு கிளம்பினான் வேகமாய்…

யாரிடமும் சொல்லாமல், கிளம்பி, தான் தங்கி இருக்கும் அறைக்கு வந்த சந்தா, தன் பையை எடுத்து துணிகளை அதில் அடுக்க ஆரம்பித்திட, அவள் எண்ணங்களும் அடுக்கடுக்காய் நினைவுக்கு வந்தது…

நினைவலைகளில் நீந்தி, நிஜத்திற்கு வந்த நொடி, அத்தனை துணிகளையும் அந்த பையினுள் அடுக்கி முடித்திருந்தாள்…

தோளில் பையினை மாட்டிக்கொண்டு வாசல் வந்த வேளை, வாசற்படியில் கதவின் மீது கையினைக் கட்டிக்கொண்டு சாய்ந்திருந்தான் ப்ரசன்…

அவன் இருப்பதை பார்த்தவள், அதனை அலட்சியம் செய்தவளாய், வாசலருகே சென்றாள்…

“வழி விடுங்க…” என தரையை வெறித்தவாறு கூற,

“விடுறேன்… ஆனா அதுக்கு முன்னாடி எனக்கு பதில் சொல்லிட்டு போ…”

“நீங்க யாரு?... உங்களுக்கு நான் ஏன் பதில் சொல்லணும்?...”

வெடுக்கென்று அவள் கேட்டிட, அவன் முகத்திலோ யாதொரு உணர்ச்சியும் இல்லை…

“இது என்ன?...”

அவன் அவள் ராஜினாமா கடிதத்தை அவளின் முன் நீட்டி கேட்க, அவள் பதில் பேசவில்லை..

“சொல்லு சந்தா… எதுக்கு இப்படி செஞ்ச?...”

“……..”

“உங்கிட்ட தான் கேட்குறேன்… பதில் சொல்லு…”

“சொல்ல எதும் இல்லை… வழி விடுங்க…”

“கேட்க எனக்கு உரிமை இருக்கு… பதில் சொல்லு…”

அவன் விடாப்பிடியாய் கேட்டிட,

“என்ன உரிமை?... யார் கொடுத்த உரிமை?...” பதிலுக்கு சீறினாள் அவள்…

அவளை உறுத்துப்பார்த்தவன், “ஒரு மேனேஜரா, உன் ராஜினாமா பத்தி கேட்க வேண்டிய உரிமையும் கடமையும் எனக்கு இருக்கு… பதில் சொல்லு…”

“எனக்கு வேலைப் பார்க்க பிடிக்கலை… போதுமா… நகருங்க…”

சொல்லிவிட்டு அவள் செல்ல முற்பட, “ரிசைன் பண்ணுறதை முன் கூட்டியே சொல்லணும்னு உனக்குத் தெரியாதா?..” என்றான் அவன் அழுத்தமாக…

“ஹ்ம்… ஒன் மன்த் முன்னாடியே இன்ஃபார்ம் பண்ணுறதுக்கு இது ஒன்னும் ப்ரைவேட் கம்பெனி இல்லன்னு உங்களுக்கும் தெரியாதா?..…” அவளும் அதே அழுத்தத்துடன் பதில் கூற,

அவனோ, “எதுக்கு சந்தா இப்படி பண்ணுற?...” என்றான் ஆதங்கம் தாங்காமல்….

அவனின் ஆதங்கம் அவளுக்கு எரிச்சலை உண்டு பண்ண,

“வழியை விடுங்க… ப்ளீஸ்…” என்றாள் கராராக…

“நீ இங்க இருந்து போக நான் அனுமதிக்கமாட்டேன்…” அவன் திட்டவட்டமாக கூற

“உங்க அனுமதி யாருக்கு வேணும்?...” என்றாள் அவள் கோபத்துடன்….

அவள் கேட்டதும், கையிலிருந்த ரிசைன் லெட்டரை தூக்கி எறிந்தவன், கோபத்தை தனக்குள் அடக்கிக்கொண்டு,

“இப்போ எங்க கிளம்புற?...”

“…..”

“உங்கிட்ட தான் கேட்குறேன்… சொல்லு…”

“அதை எதுக்கு நான் உங்ககிட்ட சொல்லணும்….”

“சொல்லு சந்தா… ப்ளீஸ்… அடம்பிடிக்காத…”

“சொல்லாம போனா, கண்டுபிடிக்க முடியாத மாதிரி நாடகம் போடாதீங்க… அதான் என்னை நிழல் மாதிரி தொடர்ந்து வந்து சாகடிக்கிறீங்களே இப்படி… இன்னும் என்ன?...”

“ப்ச்… நீ என்னை புரிஞ்சிக்கவே மாட்டியா இ….ஷி…..…..”

அவன் சொல்லிமுடிப்பதற்குள் வேகமாய் தடுத்தாள் அவள் ஆங்காரத்துடன்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.