(Reading time: 9 - 18 minutes)

தொடர்கதை - விழிகளிலே காதல் விழா - 19 - தேவி

vizhikalile kadhal vizha

லரும் செழியனும் தங்கள் நேசத்தை சொல்லி ஒரு நாள் ஆகவில்லை. என்னவோ சொல்லி வைத்தார் போல் இருவர் வீட்டிலும் திருமண பேச்சை ஆரம்பித்து விட்டனர்.

செழியனுக்கோ தன் அப்பா பேசியதை மலரிடம் சொன்னால் அவள் பயப்படுவாளோ என்று தோன்றியது. தன்னை பற்றின முழுமையான நம்பிக்கை வரும் வரை அவள் மனது சஞ்சலபடக் கூடாது என்று எண்ணினான். எப்படியும் வருஷா வருஷம் நடக்கும் கோவில் விழா முடியும் வரை எந்த முடிவும் எடுக்க மாட்டார் என்று தெரியும். அதற்குள் அம்மாவிடம் மெதுவாக விவரங்கள் கேட்டு எதிர் பார்ட்டியை விட்டே சமாளித்து விடலாம் என்று எண்ணி கொஞ்சம் தைரியமாக இருந்தான்.

இங்கே மலரோ தன் வீட்டில் செழியன் வீட்டில் உள்ளவர்களை பேச சொல்லி செழியனிடம் சொல்லி விடுவோமா என்று எண்ணியவள் , செழியனின் தற்போதைய ஆராய்ச்சி முடியட்டும். பிறகு பேசலாம். தன்னை கேட்காமல் தந்தை எந்த முடிவும் எடுக்க மாட்டார் என்பதில் நம்பிக்கை வைத்தாள்.

நடந்த குழப்பங்களால் செழியன் சொல்லி விட்டு சென்று இருந்த வேலைகளை மறந்து இருந்தவள், காலேஜ் திறக்கும் முதல் நாள் தான் நினைவு வந்தவளாக வேக வேகமாக செய்ய ஆரம்பித்தாள்.

அவளின் பரபரப்பை பார்த்த வள்ளி

“என்னம்மா.. மலர் இவ்ளோ டென்ஷன் இருக்க..?”

வள்ளியின் பேச்சு தன் மகளிடம் தற்போதைய நாகரிகத்திலும் , தன் மாமியாரிடம் பேசும்போது ஊர் வழக்கப்படியும் பேசுவதுதான் அவரது தன்மை.

“நான் அன்றைக்கு செழியன் சார் ஒரு வேலை கொடுத்தாங்க என்று சொன்னேன் இல்லியா.. ? அதை மறந்து விட்டேன். இப்போது தான் நியாபகம் வந்தது. நாளைக்கு காலேஜ் திறக்கிறதே என்று அவசரம் அவசரமாக செய்து கொண்டு இருக்கிறேன்.”

“ஏன்மா படிக்கிற காலத்திலே தான் இருக்கிற நாள் எல்லாம் விட்டுட்டு கடைசி நாள்லே கிடந்து முட்டுவ.. டீச்சர் ஆ போனதுக்கு அப்புறமும் அப்படியேதானா.. நீயே இப்படி இருந்தா உன்கிட்ட படிக்கிற பிள்ளைங்க எப்படி இருக்கும்?”

“அம்மா .. நீங்களும் ஒரு காலத்திலே என்னை மாதிரி செல்ல பிள்ளையா தானே இருந்து இருப்பீங்க... அப்போ உங்களுக்கு உங்க அம்மா அட்வைஸ் பண்ணினா எப்படி இருக்கும்..? எல்லாம் தெரிஞ்சும் நீங்களும் அம்மா ஆனதுக்கு அப்புறமும் அட்வைஸ் அம்புஜமாதானே மாறி இருக்கீங்க.. அப்போ நான் மட்டும் எப்படி மாருவேனாம் ?”

“என்னடி சொல்ல வரே. ஒன்னும் புரியல..? இப்போ என்ன நான் மாறின மாதிரி நீயும் மாறி தானே இருக்கணும்..”

“ஐயோ அம்மா.. நீங்க உங்க அம்மா வீட்லேர்ந்து உன் புருஷன் வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் தானே மாறி இருக்க.. ஆனா நான் இன்னும் காலேஜ் அப்படின்ற இடத்துலேர்ந்து வெளிலே வரலியே.. அப்புறம் எப்படி மாறுவேன்..?”

“அடிப்பாவி.. எதுக்கு எத இணை கூடுற.. ஏண்டி காலேஜ்லே படிக்கிறதும் வாத்தியார இருக்கறதும் ஒண்ணா..?”

“அம்மா.. உனக்கு சைகாலஜியே தெரியல.. மாணவர்கள் கிட்டே நல்ல பேர் வாங்கணும்னா.. அவங்க மாதிரியே நாம மாறனும்.. சோ. . அவங்க மாதிரியே லாஸ்ட் மினிட் ரஷ் அப் பண்ணிட்டு இருக்கேன்.”

“ஹ்ம்ம்.. நீ எல்லாம் நல்லா வருவா.. உன் ஸ்டுடென்ட்ஸ் அத விட சிறப்பா வருவாங்க.. “

“தேங்க்ஸ்.. தேங்க்ஸ்.. இருந்தாலும் என்ன நீ இம்புட்டு புகழ கூடாது வள்ளி..”

“அடிங்க.. அம்மா தாயே.. இவ கிட்டேர்ந்து எல்லா பச்சை பிள்ளைகளையும் நீ தான்மா காப்பத்தனும்.. “ என்று வேண்டியபடி சென்று விட்டார்.

பேச்சு பேச்சாக இருந்தாலும் அவளின் கைகள் லாப்டோபில் வேலை செய்து இருக்க, கிட்ட தட்ட முடித்து விட்டாள்.

அவள் தன் வேலையை மறந்து விட்டதில் டென்ஷன் ஆகியவள், ஒன்றுமே புரியாமல் மலைத்து நின்று இருந்தாள். தன் அம்மா வந்து பேசியதும் , வம்பு இழுத்ததும் பதிலுக்கு இவளும் வம்பு வளர்த்து இருக்க, அதில் படிப்படியாக அவளின் டென்ஷன் குறைந்தது. பிறகு அவள் பார்த்து இருந்த வேலையும் வேகமாக முடிந்தது.

தன் அம்மாவிடம் போய் சற்று நேரம் செல்லம் கொஞ்சிவிட்டு மீண்டும் தன் அறைக்கு வந்து படுத்துக் கொண்டாள்.

மறுநாள் காலை சீக்கிரம் எழுந்து எப்போதும் போல் காலேஜ் கிளம்ப ரெடி ஆகினாள். கொஞ்சம் பட படப்பாகவே இருந்தாள். என்னதான் இருவரும் காலேஜ் காம்பஸ்க்குள் எதுவும் காட்டிக் கொள்ளக் கூடாது என்று முடிவு செய்து இருந்தாலும் இந்த பட படப்பை அவளால் தவிர்க்க முடியவில்லை. செழியனுக்கும் அப்படிதான் இருக்குமோ என்று எண்ணிக் கொண்டு இருந்தாள்.

கிளம்பும் போது மிக சரியாக அவள் ஆச்சி வடிவு

“ஏனத்தா... பட படன்னு இருக்க.. ? “ கேட்டு விட,

மனதிற்குள் நொந்து கொண்டாள் மலர்.. இந்த ஆச்சி கண்லேர்ந்து மட்டும் எதுவும் தப்பிடாதே..

வெளியில் சிரித்தபடி “அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லை ஆச்சி.. “

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.