(Reading time: 8 - 16 minutes)

இருவரும்....இல்லை...அவள் மட்டும் பேசியவண்ணம் அவனது இல்லத்தின் அருகே வந்தது அவளது வாகனம்.

"தேங்க்ஸ்...மிஸ்??"

"சிவன்யா!"

"ம்...தேங்க்ஸ் மிஸ்.சிவன்யா!"-அவள் குழந்தைத்தனமான புன்னகை ஒன்றை பரிசளித்துவிட்டு வேகமாய் பறந்தாள்.இரு நொடிகள் அவள் செல்லும் திசையையே பார்த்தவன்,தனது சிரத்தினை சிலுப்பிக் கொண்டு,புன்னகைத்தப்படி உள்ளே சென்றான்.

"என்ன தம்பி மழையில நனைந்துட்டீங்களா?"-பதறிக்கொண்டு வந்தார் ஆண்டுகளாய் அவன் இல்லத்தில் பணிபுரிந்த மாணிக்கம்.

"ஆமாண்ணா!கார் வழியில நின்றுவிட்டது!"

"நடந்தா தம்பி வந்தீங்க?"

"அது...'-கண நேரத்தில் அவன் நினைவில் வந்துச் சென்றது அவளது முகம்.

"இல்லை...ஒரு நல்ல இதயம் என்னை வீடு வரைக்கும் கொண்டு வந்து விட்டுப்போச்சு!"-அவன் இதழோரம் மெல்லிய புன்னகை உதயமானது.

"சரிங்க தம்பி!போய் டிரஸ் மாற்றி வாங்க!சாப்பாடு எடுத்து வைக்கிறேன்!"

"சரிங்கண்ணா!"-துள்ளிக்கொண்டு படியேறினான் அசோக்.

"பாரு!ஏழு கழுதை வயசாகுது...இன்னும் குழந்தை மாதிரி மழையில நனைந்துவிட்டு வந்திருக்கா!"-மகளை கறுவியப்படி அவள் கேசத்தினை துவட்டினார் மீனாட்சி.

"ஏன் இவ்வளவு லேட்?"

"வர வழியில ஒருத்தரை டிராப் பண்ணிட்டு வந்தேன்!"

"யாரு ஃப்ரண்டா?"

"ம்...இல்லை!"

"அப்போ யாரு?"

"யாருக்குத் தெரியும்!கார் பிரேக் டௌன் ஆகி மழையில நின்னுட்டு இருந்தார்.மனசு கேட்கலை...வீட்டில் விட்டுவிட்டு வந்தேன்!"-சிவன்யாவின் கூற்றால் அங்கு ஒரு பிரளயம் உருவாக ஆயத்தமானது.

"என்ன?யாருன்னே தெரியாதவனா?என்னங்க...பார்த்தீங்களா இவளை..!"

"என்னம்மா?"-பிரளயத்தை உறுதி செய்தவரின் கூற்றில் கலக்கம் தொனித்தது.

"யாருன்னே தெரியாதவன் கூட...இந்த நேரத்துல...அறிவிருக்கா சிவா உனக்கு?"

"அம்மா!அவர் பார்க்க நல்லவரா தான் இருந்தாரு!ஏன் இப்படி பயப்படுறீங்க?"

"இந்தக் காலத்துல நல்லவங்க எங்கேயாவது ஒருத்தர் தான் இருக்காங்க!"

"அப்போ அந்த நல்லவரை நான் பார்த்துட்டேன்.ஏன்னா,அவர் மோசமானவரா இருந்தா இந்நேரம் உங்கப் பொண்ணு ஜாக்கிரதையா வீட்டுக்கு வந்திருக்க மாட்டா!"-என்று புன்னகைத்தப்படி எழுந்துச் சென்றாள் சிவன்யா.அவளை மறுத்து பேசவும் ஏதும் சிந்தனையில் உதிக்கவில்லை மீனாட்சிக்கு!!

மனதிற்கு பிடித்தப் பாடலை முனுமுனுத்தப்படியே தனது அறைக்குள் நுழைந்தவள்,சில நொடிகள் தன்னிலை மறந்து நின்றவளின் சிந்தனையில் அவன் பிம்பம் நிழலாடியது.

"ஏறத்தாழ இருபது நிமிட பயணம்,தாய் கூறிய அச்சமூட்டும் அதே தனிமை,அவன் அந்நிலையை தனக்கு சாதகமாக்கி இருந்திருக்கலாம்.ஆனால்,அவனது சிறுவிரல் நகம் கூட தன்னை தீண்டவில்லையே!"-அவளறியாமல் அவள் விழி புருவங்கள் உயர்ந்தன.

"கண்ணா!"-ராகமாய் செவியின் அருகே ஒலித்த தந்தையின் குரல் அவளை நினைவிற்கு கொணர்ந்தது.

"அப்பா?"

"என்னம்மா யோசிக்கிற?"

"அம்மா சென்னதை பற்றி தான்பா!"

"அம்மாவை விடுடா!அவ எதுக்கெடுத்தாலும் பயப்படுவா!ஆனா நீ செய்த காரியம் எனக்கே அதிர்ச்சியா தான் இருக்கு!"

"அப்பா!பாருங்க...இன்னும் மழை விடவில்லை.இந்தக் குளிர்ல பாவம் அவர் தனியா என்ன பண்ணுவார்?"

"என்னமோ!அவன் நல்லவனா இருக்கவே எல்லாம் சரியா இருக்கு!இல்லைன்னா,ஆனா...ஒரு மனிதன் மற்ற பொண்ணுங்கக்கிட்ட எப்படி நடந்துக்கிறானோ,அதை வைத்தே அவன் தாய் எப்படிப்பட்டவங்கன்னு நாம யூகிக்கலாம்!அந்தப் பையனோட அம்மா ரொம்பவே பாக்கியசாலி!நியாயமானவங்களும் தான் போலிருக்கு!இந்த மாதிரி மனிதர்களுக்கு அந்த ஆண்டவன் எந்தக் குறையும் வைக்க மாட்டான்!"-மனம் குளிர வாழ்த்தினார் அவர்.

தன் தாயின் புகைப்படத்தின் முன் அவனது கரம் குவிக்கப்பட்டு,கண்கள் அடைக்கப்பட்டிருந்தன.அவனது அந்த முகத்தில் விளக்க இயலாத ஓர் துயரம்!!அவன் விழிகள் திறவாமலே கசிய தொடங்கின.கன்னத்தை தீண்டி,அவன் தாயின் முன் விழுந்தது அவன் கண்ணீர்.யாரும் அறிய மாட்டர்,தனிமை துயரில் அவன் அனுபவிக்கும் வேதனைகளை!அன்னையின் அன்பு பறிக்கப்பட்ட பின்பு,ஆண்டுகளாய் ஏங்குகின்றான் தனக்கென துடிக்கும் உள்ளத்திற்காக!!தாய் அவளின் மீது பதிந்த நம்பிக்கை எவர் மீதும் துளிர்க்கவில்லை.எதன் மீதும் படரவில்லை.அவன் உண்டானா!உறங்கினானா!என்று கேட்கவும் எவருமில்லை.உடல்நலம் குறைந்த சமயத்தில் தான் பெரிதும் ஏங்கினான் அன்னை அன்பிற்காக!!சிறு வயது முதல் நியாய தர்மங்களை போதித்த தாயானவள்,அவள் இன்றி எப்படி வாழ வேண்டும் என்பதை போதிக்காமலே சென்றுவிட்டாள்.எண்ணற்ற வினாக்கள் அவனுள் இருந்தன.ஒன்றையும் கேட்க விடாமல்,எதற்கும் விடை கூறாமல் இறுதிவரை கேள்வியின் பாரத்தை அவன் தோளில் சுமக்க கட்டளை இட்டிருக்கிறது அவனது விதி!!!

Episode 01

Episode 03

தொடரும்!

{kunena_discuss:1149}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.