(Reading time: 8 - 16 minutes)

தொடர்கதை - உயிரில் கலந்த உறவே - 02 - சகி

Uyiril kalantha urave

னது அலுவலகத்தில் ஏதோ பணியாய் இருந்தான் அசோக்.பணி நேரம் முடிந்தும்,இன்னும் அலுவலகத்தைத் தியாகித்து அவன் கிளம்பவில்லை.சற்றே பொறுப்பான ஆட்சியர் தான் போலும்!!மேசை மீது ஏதோ தேடியவனின் கண்களில் அது சிக்கியது!!கையில் எடுத்துப் பார்த்தவன்,நாற்காலியில் சோர்வுடன் சாய்ந்தான்.அது ஒரு அழைப்பிதழ்!!அரசுப் பள்ளி ஒன்றின் நூற்றைம்பதாவது ஆண்டு கொண்டாட்டம்!பள்ளி முதல்வரே தனிப்பட்ட முறையில் வந்து அழைத்து சென்றார்.அதைப் பிரித்து விவரங்களைப் பார்த்தான் அசோக்!வரும் வெள்ளிக்கிழமை என்றிருந்தது.சற்றே திரும்பி நாட்குறிப்பைக் கண்டான்.அன்றைய கிழமை திங்கள்!!!அன்று ஏதேனும் முக்கியப்பணி இருக்கிறதா?என்று மனதுள்ளே ஆராய்ந்தான்.மனமோ,"அவ்வாறு ஏதுமில்லை!"என்று விடையளித்தது.

மறக்காமல் அந்த அழைப்பிதழை டிராவில் வைத்துப் பூட்டி,தனது கணினியை உறங்க வைத்தான்.மணி மாலை ஏழு!!மழை ஜன்னலின் வழியே அவனை சற்றே மிரட்டிப் பார்த்தது.

தனது கைப்பேசியை எடுத்துக் கொண்டு வெளியே வந்தான்.

"ரத்தன்!"-அவனது குரலுக்கு கட்டுப்பட்டவனாய் ஓடி வந்தான் ஓர் இளைஞன்.

"மழை அதிகமா இருக்கு!நீ உடனே உன் வீட்டுக்குப் போயிடு!"

"சார் நீங்க?"

"என் கார் இருக்கு!நான் பார்த்துக்கிறேன்.காலையில எட்டு மணிக்கு வந்துடு!"

"சரிங்க சார்!"-அலுவலக காரை எடுத்துக் கொண்டு கிளம்பினான் ரத்தன்.

அவனது கண்கள் ஒருவித எரிச்சலை உணர்ந்தன.உடல் முழுதும் சோர்வு சூழ்ந்திருக்க,கண்களை கசக்கியப்படி தனது காரை உயிர்பித்தான் அசோக்.

அது அவனது கட்டுப்பாட்டிற்குள் வந்து,அவன் இட்ட ஆணைக்கு அடங்கியது.

சாலைகள் நீண்டுக் கொண்டே இருக்க,மழையும் விடுவதாய் இல்லை.எப்படியாவது இல்லம் சென்றால் போதும் என்றிருந்தவனை,குளிர் காற்றும் கொடுமைப்படுத்தியது.திடீரென ஒரு சத்தம் அவனது காரிலிருந்து கிளம்ப,உடனடியாய் தன்னிச்சையாக நின்றது அவனது கார்.பதறியப்படி கொட்டும் மழையில் கீழிறங்கிப் பார்த்தான் அவன்.

சக்கரத்தைச் சுற்றிய பாதுகாப்பு வளையத்தின் காற்றும் முழுவதும் அங்கிருந்த முட்புதரில் ஏறி வெளியேறி இருந்தது.அவனது நலை மோசம் தான்!!இப்போது என்ன செய்வதென்றே புரியாமல் திகைத்துப் போய் நின்றான் அசோக்.வேறு வாகனமும் வருவதாக இல்லை.தனது கைப்பேசியை எடுத்துப் பார்த்தான்.அதுவோ,குளிருக்கு ஆழ்ந்த நித்திரையில் தள்ளப்பட்டிருந்தது.

இயற்கையும் அவனுக்குச் சாதகமாக இல்லை.என்ன செய்வதென்றே புரியாமல் இருந்தவனின் செவிகளில் கணீரென்று ஒலித்தது அந்த இனிமையானக் குரல்.சற்றே பதற்றமாக திரும்பிப் பார்த்தான்.கைகள் இரண்டையும் வான்நோக்கி நீட்டியப்படி மழையினை வரவேற்றுக் கொண்டிருந்தாள் ஒரு நங்கை.அவளது வரவேற்பை ஏற்ற மழையும் மேலும் வலுத்தது.நீண்ட நேரமாய் தன்னை அறியாமல் அவளையே நோக்கிக் கொண்டிருந்தவன்,என்ன காரணத்தினாலோ இதழ் மலர்ந்தான்.ஆடி,ஆடி களைத்துப் போய்,தனது இருச் சக்கர வாகனத்தில் அவள் ஏற,சுயநினைவை அடைந்தவனாய் முகத்தைத் திருப்பிக் கொண்டான் அசோக்.அவள் ஏறிய வாகனம் அவனைக் கடந்துச் சென்று சில அடிகளில் நின்றது.காரில் இருந்த வேறு ஒரு டயரை எடுக்க முயன்றவனைத் திரும்பி பார்த்தாள் அவள்.மெல்ல தனது வாகனத்தைப் பின்நோக்கி நகர்த்தி அவனருகில் கொண்டு வந்து நிறுத்தினாள்.

"என்ன சார் பஞ்சரா?"-அவனை நோக்கி கேள்விக் கணையைத் தொடுத்தாள்.புரியாமல் இரு நொடிகள் விழித்தவன்,பின்,ஆம் என்று தலையசைத்தான்.

"நீங்க எப்போ மாற்றி?எப்போ வீட்டுக்குப் போறது?மழை வேற பெய்யுது?எங்கே போகணும்?"

"இல்லை பரவாயில்லைங்க...நான் பார்த்துக்கிறேன்!"

"அட!சொல்லுங்க சார்!"-அவன் முகவரியை கூறினான்.

"நானும் அந்தப் பக்கம் தான் போறேன்!வாங்க டிராப் பண்ணிவிடுறேன்!"

"இல்லை இருக்கட்டும்...நீங்க போங்க!"

"இதுமாதிரி ராத்திரி நேரத்துல தனியா இருக்க கூடாது!பேய் வரும்னு எங்க அம்மா சொல்லுவாங்க!"-சிறு குழந்தையிடம் பேசுவதாய் அவள் பேச,சட்டென முகத்தில் புன்னகைத் ததும்பியது அவனுக்கு!!

"நம்பி வாங்க!நான் உங்களை எதுவும் பண்ணிட மாட்டேன்!"-உண்மையில் அவ்வாறு அவள் கூறியதும்,அவன் முகம் மேலும் மலர்ந்து,மனம் இலகுவானது.தனது கைப்பேசியை எடுத்துக் கொண்டு,அவள் வண்டியில் ஏறினான்.எந்த ஓர் உரிமையும் எடுக்காமல்,கண்ணியமான இடைவெளி இருவருக்குமிடைய நன்றாகவே இருந்தது.வேகமாகவும் அல்லாமல்,ஆமை போன்றும் அல்லாமல் மிதமான வேகத்தில் பயணித்தாள் அவள்.

"ஏன் சார்!மழை தான் வெளுத்து வாங்குதுன்னு தெரியுதே!கொஞ்சம் சீக்கிரமாகவே கிளம்பி இருக்கக் கூடாதா?"-அவன் யார் என்பதை அறியாமல் மிக சாதாரணமாய் உரையாடியவளின் பேச்சு அவனை கவர்ந்திழுத்தது.

"ஆ...வொர்க் கொஞ்சம் அதிகம்!"

"ஓ...!நான் எல்லாம் வொர்க் பண்ற இடத்துல மழை சீசன்ல என்னை சீக்கிரமா அனுப்பவில்லைன்னா,சண்டைப் போட்டுட்டு வந்திருப்பேன்.அப்பாவியா இருக்கீங்களே சார்!"-அவ்வாறு அவள் கூறியதும்,அவன் முகம்,'நானா?'என்பது போல ஒரு நொடி மாறியது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.