(Reading time: 10 - 19 minutes)

25. யார் மீட்“டி”டும் வீணையிது? - புவனேஸ்வரி கலைச்செல்வி

Veenai             

மாலை சூரியன் அகம் தேடி பிரியாவிடை தர விரும்பிய பொழுது அது. மறுநாள் காலைவரை தன்னை யாரும் மறந்துவிட கூடாது என்ற எண்ணத்தில் தனது ப்ரகாசமான ஒளி கதிர்களை தராளமாய் பூமிக்கு அனுப்பி வைத்தான் ஆதவன். அழகு பொங்கும் அற்புத காட்சியில் கண்களில் கண்ணீரை தேக்கியபடி நின்றுருந்தவளை இழுத்து அணைத்து கொள்வதே தலையாய கடமையென எண்ணினான் ராகவேந்திரன்.

தாய்ப்பறவை தன் இறகால் குஞ்சுகளுக்கு தரும் அணைப்பையும் கதகதப்பையும் அர்ப்பணாவிற்கு அவன் கொடுத்தான். தனக்கே உரிய இடத்தில் தஞ்சம் அடைந்தவள் போல அர்ப்பணா தேம்பி அழ கேமராக்களின் ப்லாஷ் வெளிச்சம் அவளை அவசரமாக தரையிறக்கியது.

சட்டென ராகவனின் பிடியிலிருந்து விலக எத்தனித்தவளை விடாமல் பிடித்துக் கொண்டான் அவன். அவனது பற்றுதலில் இருந்த அதே பிடிப்பு அவனது முகபாவனையிலும் ப்ரதிபலித்தது. விழிகளில் அவளை விடுவதில்லை என்ற பிடிவாதம். உதட்டினில் உலகமே அமைதியின் ஆட்சியில் இருப்பது போல நிதானம்.

பார்வையினாலேயே அவன் அர்ப்பணாவிற்கு தைரியம் சொல்லிக்கொண்டிருந்த சில நொடி மௌனத்தில், அவன் ஏசீபி ராகவேந்திரன் என்பதை கண்டுகொண்டனர்.

“சார் நீங்களா?

இங்க என்ன சார் நடந்தது?

உங்களுக்கும் நடிகை அர்ப்பணாவிற்கும் என்ன சார் சம்பந்தம்?

மேடம் நீங்க பதில் சொல்லுங்க” என்று அனைவரும் அவனை சூழ்ந்து கொண்டனர். அனைவரையும் தீர்க்கமாய் பார்த்தான் ராகவேந்திரன். அந்த ஒரு நொடியில் அர்ப்பணாவுமே அவனது பதில் என்னவாக இருக்கும் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் அவனைப் பார்த்தாள். ராகவனோ  அமர்த்தலாய் தனது கூலிங்க்ளாசை மாட்டிக் கொண்டான்.

“வா போலாம்..”என்று அடிக்குரலில் அர்ப்பணாவிடம் சொன்னவன், யாரிடமும் எதுவும் பேசாமல் யாரும் அர்ப்பணாவை நெருங்காதவண்ணம், இரு கரங்களால் அவளுக்கு அரண் அமைத்து அவளை கேரவனுக்கு கிட்டதட்ட தள்ளி கொண்டு சென்றான்.

“என்ன பண்ணுறீங்க.. ஏன் பதில் சொல்லல? நாம எதுக்கு ஓடி ஒளியனும் ராகவ்?” என்று அவள் கேட்ட எந்த கேள்விக்கும் பதில் சொல்லவில்லை. அவனது அவசரமும், பத்திரிக்கையாளர்களின் கேள்விகளும் அந்த இடத்தில் சலசலப்பை ஏற்படுத்தின. ஏற்கனவே மிகுந்த சோர்வில் இருந்த இயக்குனருக்கு அந்த சூழ்நிலை இன்னமும் எரிச்சலை மூட்டியது.

வழக்கம் போல உதவி இயக்குனர்கள் அந்த சூழ்நிலையை சீராக்கிடும் பணியில் இறங்கிட அர்ப்பணா கேரவனுக்குள் நுழைந்தாள்.

“பத்திரமா இரு அபி..நான் கண்டிப்பா உன்கிட்ட வந்து பேசுவேன்.. எதுவும்  யோசிக்காத புரிஞ்சதா?” தலையை மட்டும் கேரவனுக்குள் நீட்டி அதை உரைத்திருந்தான் ராகவேந்திரன்.

“எனக்கு இப்போ பேசனும் ராகவ்!”

“புரிஞ்சுக்கோ அபி.. இப்போ சூழ்நிலை சரி இல்லை..”

“சூழ்நிலை சரியில்லைன்னா விட்டுட்டு போவிங்களா ராகவ்?” கலங்கிய விழிகளுடன் கேட்டாள் அர்ப்பணா. கொஞ்சமும் கோபமில்லை அவளின் கேள்வியில். “எனக்காக இருப்பாயா நீ?”என்ற தவிப்பு மட்டுமே எதிரொலித்தது அக்கேள்வியில். உருகிவிட்டிருந்தான் ராகவேந்திரன்.

“ஏன்டீ உனக்கு மட்டும் சோதனை மேல சோதனை வருது? எதையும் தாங்கும் இதயம் நீன்னு ப்ரம்மா நினைச்சிட்டாரோ? இப்பவே கடத்திட்டு போயிடவா உன்னை?”என மனதிற்குள் சொன்னவன், பட்டென அவளை நெருங்கினான்.

“இது பாரு.. உன்னை நான் எப்பவும் கைவிட மாட்டேன்.. கைவிடுற எண்ணம் இருந்தா உன்னை தேடி வந்திருக்கவே மாட்டேன்.. இவ்வளவு நாள் நீ என்னை ஏத்துப்பியா இல்லையான்னு தெரியாமலேயே உன்னை தொடர்ந்து வந்தவன் நானு.. இப்போ நான் மட்டும்தான் வேணும்னு இந்த நெஞ்சுல சாய்ஞ்சு நீ அழுதியே.. இனியும் விட்டுட்டு போவேனா?”

“..”

“நமக்குனு சில பொறுப்புகள் இருக்கு..உனக்குனு உன் தொழிலில் ஒரு நல்லபெயர் இருக்கு. இது வரைக்கும் மீடியா உன்னை தப்பா பேசி இருக்கலாம். ஆனா எந்த இயக்குனரும் உன்னோட வேலை பண்ணுறது கஷ்டம்னு சொன்னது இல்லை.. இன்னைக்கும் உனக்கு அந்த பேரு வந்துட கூடாது. அதனாலத்தான் நான் வாயே திறக்கல..மத்தப்படி நீதான் என் பொண்டாட்டின்னு சொல்லுறதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை..”என்றதும் அர்ப்பணாவின் முகத்தில் பூத்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை. அவள் மனதில் அரித்துக் கொண்டிருந்த கவலை அது ஒன்று தான்.

ஏற்கனவே தன் காதலை அவன் நேரடியாக சொல்லவில்லை. அப்படியிருக்கையில்  இன்றும் அவன் எதுவும் பேசாதது அவளுக்கு ஒருவித கலக்கத்தை உருவாக்கியது. அவள் மனதை படித்தவன் போல ராகவேந்திரன் சொல்லிடவும், மனம் குளிர்ந்து போனாள் அர்ப்பணா. கவலை களைந்த அவள் வதனத்தை ரசித்தவன். மிக அழுத்தமாய் அவள் நெற்றியில் இதழ் பதித்தான். ஏனோ அவனது விழிகளும் பனித்தன.

“வரேன்மா”என்று அவன் கிளம்பிட இந்த முறை அவனை தடுக்கவில்லை அர்ப்பணா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.