(Reading time: 10 - 19 minutes)

வெளியில் நடக்கும் ரணகளம் ஒன்றும் அறியாதவனாய் வீட்டில் தன் தாயுடன் கேரம் விளையாடிக் கொண்டிருந்தான் சத்யேந்திரன். ஷூட்டிங் நாட்களை தவிர மற்ற எல்லா நாளும் அவன் தனது தாயாருக்குத்தான் ஒதுக்கி வைப்பான். அன்றும் அப்படியே !

“ கண்மணியை வீட்டுக்கு வர சொல்லி இருக்கலாம்ல கண்ணா?” அவனை பார்த்து வினவினார் சுலோட்சனா.

“ஏன்மா.. அதுக்குள்ள என்கூட விளையாடுறது போரடிக்குதா?”

“பின்ன நீ கேம்மா விளையாடுற? நான் ஜெயிக்கனும்னு விட்டு கொடுக்குற! என் திறமை என்னனு  எனக்கே சந்தேகமா இருக்கு.. கண்மணி வந்த பிறகுதான் இதுக்கெல்லாம் பதில் கிடைக்கும்”

“ஹா ஹா.. நல்ல ஆளை பிடிச்சீங்க போங்க. அவ எங்ககிட்ட பெரிய மனுஷி மாதிரி சீன் போடுவா.. அப்பா அம்மா வயசுல உள்ளவங்க முன்னாடி பெட்டி பாம்பு. வேணும்னா பாருங்க, அவ வந்ததுக்கு அப்பறமும் நீங்கத்தான் ஜெயிப்பீங்க” என்று சிரித்தான் சத்யன்.

“ அப்போ என் பேரன் பேத்தி கூட விளையாடிறேன் போ” என சுலோட்சனாவும் விடாமல் வம்பளக்க வாய்விட்டு சிரித்தான் சத்யன்.

“உங்களுக்கு வெற்றியை தெரியும்தானேம்மா?”

“அந்த டைரக்டர்தம்பித்தானே? அன்னைக்கு அவார்ட் ஃபங்க்ஷனில் பார்த்தோமே.. கண்மணியின் ப்ரண்டாச்சே..”

“ ஆமா.. அவனும் கண்மணியும் ஏதோ படம் விஷயமா ஒரு இடத்திற்கு போறாங்கன்னு சொல்லியிருந்தாம்மா..அதான் நானும் டிஸ்டர்ப் பண்ணல”. மிகவும் இயல்பான குரலில் அதை சொல்லிவிட்டு விளையாட்டில் கவனம் செலுத்திய மகனை வாஞ்சையுடன் பார்த்தார் சுலோட்சனா.

“என்னம்மா லுக்கெல்லாம் பலமா இருக்கே… ஏதோ மனசுல நினைக்கிறீங்க.,.அதை என்னனு சொல்லுங்க பார்ப்போம்”

“ஹாஹா.. அப்படியே உன் அப்பா மாதிரியேதான்டா நீ.. அவரும் நான் பேசநினைக்கிறதை முகத்தை பார்க்கமலேயே சொல்வார்”என்று அவர் சொல்ல சத்யன் இலகுவான முகபாவத்தைக் காட்டினான். இந்த மாற்றத்தையும் கவனித்து தான் வருகிறது அத்தாயின் உள்ளம்.முன்பெல்லாம் தன் கணவனுடன் ஒப்பிட்டாலே அடுப்பில் வைத்த பாலாய் கொதிக்கும் மகன் இப்போதெல்லாம் அப்படி இருப்பதே இல்லை. மிக இயல்பாய் இருக்கிறான். அதை எண்ணி உவகையுற்றார் அவர்.

“சரிம்மா.. டைலாக் விடாமல் என்ன சொல்ல வந்தீங்களோ அதை சொல்லுங்க” எனவும் அவன் கன்னத்தை வாஞ்சயுடன் வழித்து முத்தமிட்டார் சுலோட்சனா.

“பெத்த வயிறு குளிர்ந்து போகுற மாதிரி ஒரு வாழ்க்கையை நீ வாழுறடா கண்ணா.. நீ என்ன செஞ்சாலும் எனக்கு அது சந்தோஷத்தை தருது. அதுவும் இப்போ நீ கண்மணி வெற்றியைப் பற்றி பேசும்போது கொஞ்சம் கூட பொறாமை இல்லாமல்பேசின தெரியுமா,அதை நினைச்சு தான் பூரிச்சு போறேன்..”

“..”

“ஒரு கணவன் மனைவிக்கு தர முடிஞ்ச மிக பெரிய பரிசே நம்பிக்கைதான்.. எந்த சூழ்நிலையிலும் அவளை எனக்கு தெரியும்னு ஒரு நம்பிக்கையை கொடுத்துட்டா அந்த உறவே சொர்கமாகிடும். அதே மாதிரிதான் மனைவியும் கணவன் மீது அதீத நம்பிக்கை வைக்கனும். உன் அப்பாவை நான் கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு முன்னாடியும்,கல்யாணமே நடந்து முடிஞ்ச பிறகும் எத்தனை பேரை அவரோடு இணைச்சு பேசினாங்க தெரியுமா?”

“அப்போநீங்க ரொம்ப உடைஞ்சு போயிருந்திங்களாம்மா?”

“ஏன் உடையனும்? என் புருஷனைப் பத்தி எனக்கு தெரியாததா மத்தவங்களுக்கு தெரிஞ்சிட போகுது?”

“ நிஜமாவே இதனால் உங்களுக்குள்ள சண்டையே வந்தது இல்லையா?”

“டேய் கண்ணா, உங்கப்பா விளையாட்டுக்கு கூட இன்னொரு பொண்ண பத்தி என்கிட்ட பேசினது இல்லை தெரியுமா?” இதை சொல்லும்போது தன் தாயின் குரலில் அப்படி ஒரு கர்வமும் காதலும் நிறைந்திருந்ததை உணர்ந்தான் சத்யேந்திரன்.

“ஏம்மா..நான் ஒன்னு கேட்கவா?”

“சொல்லுப்பா”

“எனக்கு சில நேரம் தோணுதும்மா..ஒருவேளை அப்பா உங்க மேல பாசமா நல்லா கணவராகத்தான் இருந்தாரோ? நான்தான் கண்மூடித்தனமான கோபத்துல அவரை தப்பா நினைச்சுட்டேனோ?”

“சத்யா..என்னப்பா திடீர்னு?”

“திடீர்னு இல்லம்மா..இந்த சினிமாவில் காலடி எடுத்து வெச்சதில் இருந்தே தோணுது. ஒரு நடிகனாக வாழுறது சொகுசான விஷயம்.. அங்கீகாரம்..அதனாலத்தான் அப்பா நம்மள கண்டுக்கவே இல்லைன்னு நினைச்சேன்.. ஆனா அந்த எண்ணம் எப்பவோ மாறி போச்சும்மா..”

“..”

“என் தொழிலை நான் புரிஞ்சுக்கும்போதெல்லாம் அப்பாவை அதிகமா புரிஞ்சுகிட்ட மாதிரி இருக்கும்மா” என்றான் சத்யன். சத்யனின் தலையை பாசமாக கோதிவிட்டார் சுலோட்சனா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.