(Reading time: 14 - 28 minutes)

அமேலியா - 30 - சிவாஜிதாசன்

Ameliya

மேலியா ஏனோ சில நாட்களாகவே மனக்கவலையில் ஆழ்ந்திருந்தாள். தான் மீண்டும் தனிமையில் சிக்கிவிட்டோமா என்று கூட அவள் பயந்தாள்.

வீட்டில் நடப்பவை எல்லாம் அவளுக்கு விசித்திரமாய் தோன்றின. மேகலா ஒருவார காலமாகவே அடிக்கடி வெளியில் சென்று விதவிதமான பொருட்களை வாங்கி வந்து அவற்றை எல்லாம் உபயோகிக்காமல் பத்திரப்படுத்துகிறாள்.  

நாராயணன் முகத்தில் மகிழ்ச்சி காணப்படுகிறது. அதில் தான் முதன் முதலாய் ஒரு விஷயத்தை அமேலியா உணர்ந்தாள். நாராயணன் சிரித்து அவள் பார்த்ததேயில்லை. ஒரு மனிதர் இத்தனை நாள் சிரிக்காமல் இருக்க முடியுமா. இதற்கு முன் அவர் சிரித்ததே இல்லையா. இப்பொழுது மட்டும் அவர் சிரிப்பதற்கான காரணம் என்ன. அதுவும் வீட்டில் உள்ளவர்களிடம் பேசி சிரிக்காமல் தொலைபேசியில் யாருடனோ பேசி சிரிக்கிறார்.

தன் மேல் நாராயணனுக்கு பிரியமும் இல்லை கோபமும் இல்லை என்று அமேலியா ஏற்கனவே நன்றாக புரிந்து வைத்திருக்கிறாள். ஆனால், தன் மேல் நாராயணன் ஏதோ வருத்தம் கொண்டிருப்பதை அமேலியாவால் உணர முடிந்தது. அதற்கான காரணம் அவளுக்கு தெரியவில்லை. ஏனோ அவர் அமேலியாவை பார்ப்பதை தவிர்த்தார்.

மேகலா ஆடைகளை மடித்து பெட்டியில் அடுக்கிக்கொண்டிருந்தாள். காலை முழுதும் அவள் கடுமையாக வீட்டு வேலை செய்ததால் மிகவும் களைப்போடு காணப்பட்டாள். மேகலாவுக்கு உதவ விரும்பி அமேலியாவும் ஆடைகளை மடித்து வைக்க உதவினாள். அமேலியாவை புன்னகையோடு நோக்கினாள் மேகலா.

'ஆடைகளை எதற்கு பெட்டியில் அடுக்குகிறீர்கள்? நீங்கள் வெளியில் செல்கிறீர்களா?' என சைகையில் கேட்டாள் அமேலியா.

அமேலியா கூறியது உடனே புரியவில்லையென்றாலும் பிறகு புரிந்துகொண்ட மேகலா, 'நாங்கள் ஊருக்கு செல்ல போகிறோம்' என சைகையில் பதிலுரைத்தாள்.

'என்னையும் தானே அழைத்து செல்கிறீர்கள்?' பயம் கலந்த ஏக்கத்துடன் சைகையில் கேட்டாள் அமேலியா.

அவளுக்கு என்ன பதில் கூறுவது என்று வருந்திய மேகலா, 'நீ இங்கேயே இரு, நாங்க சீக்கிரமா வந்துடுறோம்' என சொன்னாள்.

மேகலா கூறியது அமேலியாவிற்கு புரியவில்லை. ஆனால், தன்னை அழைத்து செல்ல அவர்கள் விரும்பவில்லை என்பது மட்டும் புரிந்தது.

"அக்கா, நாங்க நாளைக்கு ஊருக்கு போறோம். அதுவும் ஏரோபிளேன்ல பறந்து போறோம்" என்று விமானத்தின் புகைப்படத்தை காட்டினாள் நிலா.

அதை வாங்கிப் பார்த்த அமேலியாவின் மனதில் சோகமிருந்தாலும் நிலாவைப் பார்த்து புன்னகைத்தாள்.

"தேவையானதை எல்லாம் எடுத்து வச்சாச்சா?" என்றபடி உள்ளே நுழைந்தார் நாராயணன்.

நாராயணன் உள்ளே நுழைந்ததும் அமேலியா மேகலாவின் பின்னால் சென்று மறைந்துகொண்டாள்.

"எல்லாம் எடுத்து வச்சிட்டு இருக்கேன்பா"

"அந்த பொண்ணை எப்போ கூட்டிட்டு போக போறிங்க?"

"வசந்த் வரேன்னு சொல்லிருக்கான். அவன் வந்ததும் கூட்டிட்டு போவோம்"

"அவனை ஏன் தொந்தரவு செய்யுற? நீ டாக்சில அழைச்சிட்டு போக வேண்டியது தான?"

நாராயணனின் உள்ளர்த்தம் மேகலாவுக்கு நன்றாகவே புரிந்தது. வசந்த் அமேலியாவை அழைத்துச் செல்வதை அவர் விரும்பவில்லை.

"அப்பா, அமேலியா என்ன அமெரிக்காவுக்கு டூரிஸ்ட் விசாவுல வந்திருக்கான்னு நினைச்சிட்டு இருக்கீங்களா?" மேகலா கோபம் கலந்த கிண்டலோடு கேட்டாள்.

தன் மகள் சொன்ன பதிலால் ஆத்திரமடைந்த நாராயணன் மேற்கொண்டு அந்த அறையில் இருக்க விரும்பாமல் நடையைக் கட்டினார்.

தன்னால் தான் அவர்கள் வாக்குவாதம் செய்கிறார்களோ என மனம் வருந்திய அமேலியா வேதனையோடு ஹாலுக்கு வந்து சோபாவில் அமர்ந்தாள். அவள் மனதில் பல கற்பனைகள் சிறகடித்து பறக்கத்  தொடங்கின. ஊருக்கு செல்வோர் திரும்பி வருவார்களா என எண்ணி பயந்தாள். மீண்டும் அவர்கள் வருவார்கள் என்றால் எத்தனை நாட்கள் ஆகும்? அவர்கள் வரும்வரை தன் நிலை என்ன? என பல கேள்விகள் அவள் மனதில் எழுந்தன.

தந்தை யூசுப்பின் நினைவு அமேலியாவுக்கு வந்தது. அந்த நேரத்தில் தான் தாயின் அரவணைப்பு அவளுக்கு தேவைப்பட்டது. ஏதேனும் மந்திர மாயம் நடந்து அடுத்த நிமிடத்தில் தன் வீட்டில் இருக்கக்கூடாதா என ஏங்கினாள்.

அவள் வணங்கும் அல்லா பல அற்புதங்களை நிகழ்த்தும் வல்லமை பொருந்தியவர் என சிறு வயது முதலே அவள் கேள்விப்பட்டிருக்கிறாள். அப்படியொரு அற்புதம் தன் வாழ்க்கையில் நடந்து, தன் வீட்டிற்கு சென்றால் எவ்வளவு நன்றாக இருக்கும்.  

தந்தை தாயைக் கண்டவுடன் வார்த்தையின்றி அழ மட்டுமே தோன்றும். நீண்ட நாள் கனவு கண்ட ஒரு சம்பவம், யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு நாள் நடந்தேறினால் அவர்களடையும் மகிழ்ச்சி முதலில் கண்ணீராகவே வெளிப்படும்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.