(Reading time: 10 - 19 minutes)

தொடர்கதை - மறைந்துவிடாதே  மாயா – 10 - லதா சரவணன்

Marainthu vidaathe Maaya

மக்குள் ஒதுக்கப்பட்ட நேரங்களின் வார்த்தைச் சொல்லாடல்களை தேடிக்கொண்டு இருக்கிறேன். வைரமுத்துவின் பாணியில் சொல்லவேண்டுமென்றால் கடல் மேல் விழுந்த ஒற்றைத்துளியைத் தேடுகிறேன். மீளவே முடியாத துயரத்தில் மீளத் துடிக்கும் விட்டில் பூச்சியின் விளக்கொளியில் எரிநிலைத்தான் எனக்கு ! 

ய் என்ன சுப்ரியா சர்ப்பரைஸா என்னை எதிர்பார்க்கலை இல்லை, போனமுறை மாதிரி இல்லாம சீக்கிரமே வந்திட்டேன் பாத்தியா ? எதிர்ப்பட்ட ரவியைப் பற்றி கவலைப்படாமல் அசிங்கமான இளிப்போடு சுப்ரியாவை நெருங்கினான் இளங்கோ....

இளங்கோ ப்ளீஸ் நான் இப்போ அதையெல்லாம் விட்டுட்டேன் போயிடுங்க,,

சுப்ரியாவிற்கு தவிப்பு அதிகரித்தது ஏற்கனவே இளங்கோவின் வருகையால் ரவியின் மனதில் என்ன ஓடிக்கொண்டு இருக்கிறது என்று புரியவில்லை, இருவருக்கும் ஏதேனும் அசம்பாவிதம் ஆகிவிடுமோ என்று தவிப்போடு இளங்கோவை கிளப்புவதிலேயே குறியாய் இருக்க, அவனோ அதையெதும் பொருட்படுத்தாமல் கள்ளுண்ட வண்டைப் போல,

நான் சொல்லிட்டுப் போனா மாதிரி பத்துப்பவுன் சங்கிலியோடு வந்திட்டேன்

என்று பாக்கெட்டில் இருந்து செயினை எடுத்துக்கொண்டு, அவளின் கையைப் பிடிக்கப் போக, சட்டென்று முன்னால் வந்தான் ரவி.

மிஸ்டர். இப்போ வெளியே போறீங்ளா இல்லை போலீஸைக் கூப்பிடவா ?

நீ யாருடா.. இவ பப்ளிக் பிராப்பர்ட்டி தானே, வந்தா வேலையை முடிச்சிட்டு போ ?! எங்களைத் தொந்தரவு பண்ணாதே ?

சுப்ரியாவின் பக்கம் இளங்கோ மேலும் காலெடுத்து வைக்க, பளாரென்று அறைந்தான் ரவி. எதை நினைத்து பயந்தாளோ அதே போல் கைகலப்பு வந்துவிட்டது இருவருக்கும். இளங்கோ வெறிபிடித்தவன் போல கத்திக்கொண்டே சென்றான்.

என்னை ஆள் வைச்சாடி அடிக்கிறே இதுக்கு நீ பதில் சொல்லியே ஆகணும். 

சுப்ரியாவிற்குள் சங்கடப்புழு ஒன்று நெளிந்தது.

ஸாரி ரவி நான்.....

நீ ஒண்ணும் சொல்ல வேண்டாம் பேசாம என்கூட கிளம்பு இனிமேல் இந்த இடம் உனக்கு சரிப்பட்டு வருமின்னு தோணலை, இதே போல் வெறிநாய்கள் வந்து அடிக்கடி குதறும். 

ரவி

மேற்கொண்டு பேச்சை வளர்க்க வேண்டாம் ரியா கிளம்பு,

அவனின் முகம் இறுக்கமாய் இருக்க, தன் துணிமணிகளை பேக் செய்ய ஆரம்பித்திருந்தாள் சுப்ரியா, ரவி யாருடனோ போன் பேசினான் அநேகமாக அது கல்பனாவாகத்தான் இருக்கும் என்று தோன்றியது. கிளம்பலாம் என்ற ஒற்றை சொல்லுடன் மறுபடியும் காரில் அமர்ந்தாள். எங்கே என்று கேட்க அவளுக்கும் சங்கடமாக இருக்க, ஆதரவாய் தோளில் சாய்த்துக்கொண்டான் ரவி.

விடு ரியா இதெல்லாம் மாறிடும். உனக்குன்னு ஒரு அடையாளம் கட்டாயம் கிடைக்கும். இந்த ஊர் வேண்டாம் நாம கோயம்புத்தூரில் உள்ள எங்க பண்ணை வீட்டுக்குப்போகலாம்

ஆனா ... கல்பனா

நான் அவகிட்டே போன்ல பேசிட்டேன், நாம முதலில் போகலாம். கல்பனா இரண்டு மூணு நாளில் வருவா ?! என்ன பாக்குறே ? நடப்பது எல்லாம் நன்மைக்குன்னு நினை.

ரவி அவளின் தலையில் செல்லமாய் குட்டினான், அப்படி வந்ததுதான் பண்ணைவீட்டிற்கு எதிர்பாராமல் வந்திருந்தாலும் அந்த இடத்தின் வனப்பும் அமைதியும் சுப்ரியாவிற்குள் ஒரு நல்ல மாற்றத்தை உருவாக்கியிருந்தது என்னவோ உண்மைதான். ஆனால் அது நிரந்தரமா என்பதை காலம்தான் சொல்ல வேண்டும்.

ன்ஸ்பெக்டரோடு வினிதா தன்னைச் சந்திக்க வருவாள் என்று நிரஞ்சனா யோசித்திருக்கவில்லை, அருகே லாயர் சண்முகம் வேறு இனிமே தன்னால் தப்ப முடியாது, அதிலும் வீராவின் உதைப்பில் விக்டரின் இரண்டு பற்களும் காணாமல் போய் இருக்க, அழுத்தமாய் ஒரு மெளனத்தோடு அவர்கள் எதிரில் அமர்ந்திருந்தாள் நிரஞ்சனா.

மிஸ். நிரஞ்சனா மாயாவை எப்படி கொலை செய்தீங்க ?

மிஸ்டர் இன்ஸ்பெக்டர் எனக்கும் சட்டம் தெரியும். மாயா எனக்கு விரோதிதான். ஆனா அவளை கொலை செய்யும் அளவிற்கு நான் போகலை, அவளோட நடவடிக்கைகளை கண்காணித்து வாய்ப்புகளைத் தட்டிப் பறிக்கணும் என்பதுதான் என்னோட நோக்கமே தவிர்த்து

பொய் வேண்டாம் நிரஞ்சனா

அதற்கு அவசியம் இல்லை இன்ஸ்பெக்டர் நான் சொல்வது உண்மை. நான் புனிதமாய் மதிக்கும் என் தொழில் மீது ஆணையாய் சொல்கிறேன். நான் பரம்பரையாக நாட்டியத் துறையில் இருப்பவள் என் உயிராய் அதை மதிக்கிறேன். ஒரு சிறு பிரச்சனையில் நான் ஒத்துக்கொண்ட நிகழ்வில் விலகிட எனக்கு பதில் ஆட தொடங்கியவள்தான் மாயா. அதன்பிறகு எனக்கு வாய்ப்புகள் குறையத் துவங்கியது. சென்ற இடங்களில் எல்லாம் அவளுக்கு கிடைக்கும் மகிழ்ச்சி என்னைப் பொறாமைப் படவைத்தது. பிடித்திருந்தால் தலையில் தூக்கி வைத்து ஆடியும், பிடிக்கவில்லை என்றால் தரையில் போட்டு மிதிப்பதும் தான் சமூகத்தின் வழக்கமாயிற்றே. அந்நேரத்தில் தான் மாயாவை நான் நேரடியாக ஒரு விழாவில் சந்திக்க வேண்டியதாகிவிட்டது. இளமையும் அழகும் பூத்துக் குலுங்கிய மாயா என்னிடம் கையெழுத்துப் பெற நின்றாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.