(Reading time: 14 - 28 minutes)

'தன் தந்தையை வேலைக்கு செல்ல அனுமதிக்காமல் அவர் மடியில் உறங்க வேண்டும், தாயின் கையால் உணவு உண்ண வேண்டும். தன் பெற்றோர்களின் ஆசைப்படி அவர்கள் பார்த்து வைத்திருக்கும் மாப்பிள்ளையோடு திருமணம் நடந்தால் கூட பரவாயில்லை' என எண்ணிய போதே அவள் கண்களில் கண்ணீர் ஊற்று பெருக்கெடுத்தது.

வாசற்கதவை திறந்து வசந்த் உள்ளே வந்தான். அவனைப் பார்த்ததும் தன் கண்களை வேகமாகத் துடைத்தாள் அமேலியா.

அமேலியாவின் மேல் தன் பார்வையை ஓடவிட்ட வசந்த், அவள் இயல்பான மனநிலையில் இல்லையென்பதை புரிந்துகொண்டான். பின்னர், மேகலாவின் அறைக்குள் நுழைந்தான்.

"அக்கா எல்லாம் தயார் தான?"

"இன்னும் கொஞ்சம் நேரமாகும்டா"

"அக்கா, ப்ளீஸ்! நான் ரொம்பவே சிரமப்பட்டு பெர்மிஷன் வாங்கிட்டு வந்திருக்கேன்"

"எல்லா வேலையும் நான் ஒருத்தி தானே பாக்குறேன்"

"ஏன்? அமேலியா உனக்கு ஹெல்ப் பண்ணலையா?"

"அவ ரொம்ப வருத்தமா இருக்கா. அதனால் தான் அவளை தொந்தரவு பண்ணலை"

"எதுக்கு சோகம்?"

"அவளை விட்டு நாங்க மட்டும் ஊருக்கு போறோம்ல"

"அமேலியாவையும் கூட்டிட்டு போக வேண்டியது தான?"

மேகலா வசந்தை முறைத்தாள்.

"கிண்டலா? இப்போ தான் வாய கொடுத்து அப்பா வாங்கிட்டு போனாரு"

வசந்த் சிரித்தான்.

"அப்படி அப்பா என்ன சொன்னாரு?"

"அது வேற விஷயம்"

"சரி, அமேலியா போட்டுக்க துணிகளை எடுத்து வை, கிளம்பலாம்" என்று கூறிவிட்டு அங்கிருந்து வெளியே வந்தான்.

அமேலியா அதே இடத்தில சிலை போல் அமர்ந்திருந்தாள். அவள் எதிரே உள்ள இருக்கையில் வசந்த் அமர்ந்தான். அவன் தன் முன்னால் இருப்பதைக் கூட அமேலியாவால் உணர முடியவில்லை. மற்றொரு இருக்கையில் இருந்த மேகஸின் ஒன்றை எடுத்து அதன் மேல் தன் கவனத்தை செலுத்தினான் வசந்த். அவ்வப்போது அவள் மேல் தன் பார்வையை மேய விடவும் அவன் தவறவில்லை.

வசந்தின் கண்களுக்கு அமேலியா வர வர அழகாகிக்கொண்டே வருவதாய் தோன்றியது. முதன் முதலாக அமேலியாவைப் பார்த்த தருணத்தை நினைத்து பார்த்தான். அழுக்கு படிந்த கூந்தலும் கிழிந்த ஆடையும் அணிந்திருந்தவளா என் எதிரில் இவ்வளவு அழகாக அமர்ந்திருப்பது!. வசந்திற்கே ஆச்சர்யமாய் இருந்தது.

மேகலாவின் கை அமேலியாவின் தோள்பட்டையில் விழுந்தது. கனவுகளில் இருந்து மீண்டது போல மேகலாவைப் பார்த்தவள், புரியாத பார்வையை அவள் மீது வீசினாள்.

'என்னுடன் வா' என்பது போல சைகை காட்டிவிட்டு முன்னே நடந்த மேகலாவை அமேலியா பின்தொடர்ந்தாள். மீண்டும் தன் அறைக்குள் நுழைந்த மேகலா வேறொரு பெட்டியில் அமேலியாவிற்கு துணிகளை எடுத்து வைத்தாள். எதற்காக இது என்பது போல் மேகலாவை நோக்கினாள் அமேலியா.

'கொஞ்ச நாளைக்கு வேறொரு வீட்டுல நீ இருக்கணும்' என்று சைகையில் கூறினாள் மேகலா. அமேலியாவிற்கு புரியவில்லை. ஆல்பம் ஒன்றை எடுத்து அதில் ஜெஸிகாவின் புகைப்படத்தை தேடிக் கண்டுபிடித்து அமேலியாவிடம் காட்டினாள் மேகலா.

"இவங்க வீட்டுல தான் நீ கொஞ்ச நாளைக்கு தங்க போற"

ஜெஸிகாவின் படத்தையே உற்று நோக்கிக்கொண்டிருந்தாள் அமேலியா. 'இவங்க வீட்டுல தான் நீ தங்க போற' மீண்டும் சைகையில் கூறினாள் மேகலா. அமேலியா ஒருவாறாக புரிந்துகொண்டாள்.

'எப்பொழுது போக வேண்டும்' என்று ஜாடையில் கேட்டாள்.

"இன்னைக்கே நீ அங்க போக போற"

அமேலியாவின் முகம் சோகமானது. அதைப் புரிந்துகொண்ட மேகலா, அவள் கன்னங்களை மெதுவாக வருடி, 'ஒரு மாசத்துல நாங்க வந்துருவோம்' என்று கூறி ஒரு சிறு பேப்பரில் அவர்கள் அமெரிக்கா திரும்பி வரும் நாளை எழுதிக் கொடுத்தாள். அந்த தேதியை சில நொடிகள் நோக்கினாள் அமேலியா.

"இந்த தேதியில் நாங்க இங்க வந்துருவோம். அப்புறம் நீ எங்க கூட இருக்கலாம்" இந்த முறை சைகையில் விளக்காமல் வார்த்தைகளால் கூறினாள் மேகலா. அவள் கூறியது புரிந்தது போல் தலையாட்டினாள் அமேலியா.

பெட்டியில் இருந்த ஒரு ஆடையை எடுத்து அமேலியாவிடம் கொடுத்து .அதை உடுத்திக்கொண்டு வருமாறு கூறினாள் மேகலா. சிறிது நேரத்தில் ஆடையை உடுத்திக்கொண்டு மேகலாவின் முன்னால் வந்து நின்றாள் அமேலியா. 

"இந்த ட்ரெஸ்ல நீ எவ்வளவு அழகா இருக்க தெரியுமா" என்று அவளது கன்னங்களை வருடினாள் மேகலா. அமேலியா புன்னகைத்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.