(Reading time: 24 - 48 minutes)

விவேக் ஸ்ரீநிவாசன் - 13 - வத்ஸலா

vs

ப்பா கிடைத்துவிட்டார்!!! எனக்கு என் அப்பா கிடைத்துவிட்டார் என்றே ஆர்ப்பரித்துக்கொண்டிருந்தது விவேக்கின் உள்ளம். மனம் கொள்ளா சந்தோஷம். தாமோதரனை தவிர வேறெதுவுமே நினைவிலில்லா சந்தோஷம்

வீட்டை நோக்கி காரை செலுத்திக்கொண்டிருந்தான் விவேக் ஸ்ரீனிவாசன். எப்போதும் அவனுக்குள் இருக்கும் அந்த வேகம் கொஞ்சம் மட்டுப்பட்டிருந்தது போலே தோன்றியது அவனுக்கு

‘நான் நானாக இல்லையோ??? மெல்ல புன்னகைத்துக்கொண்டான்.

வீட்டு வாசலுக்கு வந்து காரை நிறுத்திவிட்டு நிமிர்ந்து ஜன்னலின் வழியே பார்த்தவன் பார்வையில் மேலே வானத்தில் பறந்துக்கொண்டிருந்த ஒரு விமானம் விழுந்தது.

‘இல்லை இன்னும் ஒரு வாரத்திற்கு அந்த பக்கம் நான் வருவதாக இல்லை.’ சொல்லிகொண்டவன் கைப்பேசியை எடுத்து அலுவலகத்துடன் பேசி இருந்தான். கடந்த சில வருடங்களாகவே விடுப்பு என்ற ஒன்றை பற்றி நினைக்கக்கூட தோன்றாமல் வானத்தில் சுற்றிக்கொண்டிருந்தவன்தானே அவன். அலுவலகத்திலிருந்து விடுப்புக்கு மறுப்பு ஏதுமில்லை.

அங்கே காரின் டேஷ் போர்டில் இருந்த புகைப்படத்தில் சிரித்துக்கொண்டிருந்தார் ஸ்ரீனிவாசன்.

‘அப்பா நீங்க சிரிக்காதீங்க. எனக்கு லீவ் வேணும். அவ்வளவுதான் சொல்லிட்டேன்’  அப்பாவை பார்த்து தீர்மானமாக சொன்னான் அவன். ‘நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்பா எனக்கு லீவ் வேணும்.’ இன்னமும் சிரித்துக்கொண்டே இருந்தார் அப்பா.

‘போங்கப்பா..’ சொல்லிவிட்டு காரை விட்டு இறங்கினான். அவனுக்கே அவன் போக்கு ஆச்சரரியமாக இருந்தது.

‘நான் நானாக இல்லையோ???’

வானத்திலிருந்து ஒன்றிரண்டு மழைத்துளிகள் வந்து அவன் மீது விழ மேலே வானத்தை பார்த்து புன்னகைத்துக்கொண்டான் ஒரு முறை.

‘யார் அழைத்தாலும் நான் வருவதாக இல்லை’ உள் நோக்கி நடந்தான் அவன்.

அதே நேரத்தில் என்ன நடக்கிறது என்பதை அவள் உணரும் முன்னரே படிக்கட்டில் உருண்டிருந்தாள் ரஞ்சனி. அப்படியே சரிந்து தரையில் வந்து விழுந்தாள். அந்த அதிர்ச்சியிலிருந்து அவள் மீளவே பல நொடிகள் பிடித்தன அவளுக்கு. நிலை புரிந்த போது அவளது கரம் அவசரமாக பாய்ந்தோடுகிறது வயிற்றுக்கு

‘அய்யோ!!! எங்கே அடிப்பட்டிருக்கிறது எனக்கு??? குழந்தை??? என் குழந்தை!!! அதற்கு என்னவாயிற்றோ??? முடியவில்லையே. என்னால் எழ முடியவில்லையே!!!

‘அம்மா!!!’ வலியில் அவள் வாய்விட்டு அழைத்த அந்த கணம் அந்த நேரத்தில் அவளது அன்னையின் கரமாய் சட்டென அவளை நோக்கி நீண்டது விவேக்கின் கரம்.

‘என்னம்மா நீ கொஞ்சம் பார்த்து வரக்கூடாதா???’ இதமாய் வந்தன அவன் வார்த்தைகள். அவள் இந்த வீட்டுக்கு வந்த இத்தனை நாட்களில் அவன் அவள் முன்னால் வந்து பேசியது இதுவே முதல் முறை.

இப்போது வேறெதுவும் யோசிக்கும் மனநிலையில் அவள் இல்லை. அவன் கையை பற்றிக்கொண்டு சிரமப்பட்டு  எழுந்தாள் ரஞ்சனி.

‘என் குழந்தை..’ குரல் உடைய சொன்னாள் அவள். ‘எனக்கு ரொம்ப பயமா இருக்கு. எனக்கு ஹாஸ்பிடல் போகணும்..’ ப்ளீஸ் என்னை கூட்டிட்டு போங்க..’ படபடத்தாள் அவள். சரசரவென கண்ணீர் சுரந்தது அவள் கண்களிலிருந்து.

குழந்தையா??? அவள் வயிற்றில் குழந்தை இருக்கிறதா என்ன??? இப்போதுதான் இந்த விஷயமே புரிந்தது அவனுக்கு.

உடல் முழுதும் வலி எடுப்பது போன்றதொரு எண்ணம். பயப்பரவாகம் அவளுக்குள்ளே .  ‘என்னவாகிறது??? என்னவாகிறது எனக்கு???  அவன் தோள் பிடித்துக்கொண்டாள் அவள்

‘எனக்கு தலை ரொம்ப சுத்துத்து. பயமா இருக்கு என் குழந்தைக்கு ஒண்ணும் ஆகாதில்ல..’ அவனிடம் கேட்கும் போதே வெடித்து வருகிறது அழுகை.

அதெல்லாம் ஒண்ணும் ஆகாதும்மா..’ அவன் சொல்லிக்கொண்டிருக்கும் போதே வயிற்றிலிருந்து பந்தாக கிளம்பி எழுந்தது ஒரு குமட்டல். வாஷ் பேசினை நோக்கி ஓடினாள் ரஞ்சனி.

அழுகையும், வாந்தியும் சேர்ந்து அழுத்த அவள் குலுங்கிகொண்டிருந்தாள். கொஞ்சம் கூட அருவெறுப்பு இல்லாமல் அவள் அருகில் நின்று அவளுக்கு உதவிக்கொண்டிருந்தான் விவேக்.

‘ஏதோ ஆகப்போகிறது. ஏதோ நடக்கபோகிறது..’ பய பூகம்பம் அவளை உலுக்க உலுக்க கண்ணீர் வலுத்தது. பதற்றத்தின் உச்சியில் மொத்த உடலும் செயலற்று போன உணர்வு.

‘எனக்கு எனக்கு ஹாஸ்பிடல்.. போகணும்.. எனக்கு என் குழந்தை வேணும்..’ அவசரமாய் வயிற்றை வருடுகிறது அவள் கரம்.

‘ரஞ்சனி..’ முதல் முறையாக பேர் சொல்லி அழைத்தான் அவளை. ‘இவ்வளவு டென்ஷன் இப்போ நல்லதில்லைமா. நீ முதல்லே எதாவது குடி. ரிலாக்ஸ் பண்ணு சீக்கிரம்   ஹாஸ்பிட்டல் போயிடலாம் ’

‘குழந்தைக்கு ஒண்ணும் ஆகாதில்ல..’

‘ஒண்ணும் ஆகாது உன் குழந்தைக்கு. தைரியமா இரு..நான் சொல்றேன்ல ’

‘நிஜமா ஒண்ணும் ஆகாதா???

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.