(Reading time: 24 - 48 minutes)

மற்ற யாரிடமும் எதுவும் பேசாமல் அந்த அறையை விட்டு வெளியே வந்திருந்தான் சுதர்ஷன். சரியாக அந்த நேரத்தில் அங்கே எதிர்ப்பட்டாள் அவள். ஹாசினி.. அவள்தானே அது!!! ஆம் அவளேதான்!!! சொல்லிகொண்டான் அவன்.

ஹாசினியை சில முறைகள் ஹரிணியுடன் பார்த்திருக்கிறான் சுதர்ஷன். அவள் மருத்துவர் எனவும் தெரியும் அவனுக்கு மனம் ஏதேதோ முடிவுகளுக்கு வர நேராக அவளிடம் சென்று நின்றான் அவன்.

‘நீங்க ஹரிணியோட சிஸ்டர் ஹாசினிதானே???

‘எஸ். நீங்க???’

நான் அவ  ஃபரெண்ட். சுதர்ஷன். அவ கூட படிச்சவன். அங்கே உள்ளே இருக்கிறது உங்க அப்பாதானே??? கேட்டும் விட்டான் அவளிடம்.

‘எங்கப்பாவா??? யாரு??? அவள் தெரியாதது போல் கேட்க...

‘அதுதான் மிஸ்டர் தாமோதரன்’ என்றான் இவன் பட்டென. அவனிடம் என்ன சொல்வது எனத்தெரியாமல் இவள் திகைக்க அவனே தொடர்ந்தான்.

‘ரொம்ப தேங்க்ஸ் டாக்டர் ஹாசினி..’

‘புரியலை எதுக்கு தேங்க்ஸ்...’

‘உங்க அப்பாவை விவேக் முன்னாடி கொண்டு வந்ததுக்கு. ஹரிணிக்கு இது தெரியாதுன்னு நினைக்கிறேன். தெரிஞ்சிருந்தா அவ கண்டிப்பா இதை செய்திருக்க மாட்டா. அவகிட்டே எப்படியாவது பேசி இதை நடத்திடணும்னுதான் வந்தேன். நீங்களே செய்துட்டீங்க. தயவு செய்து ஹரிணி அவரை பிரிச்சு கூட்டிட்டு போகாம பார்த்துக்கோங்க...’

நீங்க விவேக்குகும் பெஸ்ட் ஃபரெண்டா’ அவன் சொன்ன விதத்தை பார்த்து புன்னகையுடன் ஹாசினி  கேட்க

‘இல்ல பெரிய துரோகி..’ என்றான் அவன். அவள் குழப்பத்துடன் அவனை பார்க்க அன்று ஸ்ரீநிவாசனுக்கு நடந்ததை விளக்கினான் அவளுக்கு.

அவன் சொல்ல சொல்ல அதிர்ச்சியில் இறுகிப்போய் நின்றிருந்தவள் சில நொடிகள் கழித்து நடுங்கும் குரலுடன் கேட்டாள்

‘அப்போ ஹரிணி நினைச்சிருந்தா கூட எங்க டாக்டரை ஒரு வேளை காப்பாத்தி இருந்திருக்கலாம் இல்லையா???

‘ஆங்.. இல்லை அது வந்து.. நான்.. தப்பு என் மேலேதான்..’ இவள் இப்படி கேட்பாள் என எதிர்ப்பார்க்காத சுதர்ஷன் தடுமாற

‘தப்பு உங்க மேலே மட்டுமில்ல..’ என்றாள் அவள் இறுக்கமாக.

‘ப்ளீஸ்.... ஹாசினி நான் ஹரிணி மேலே குற்றம் சொல்ல வரலை. விவேக் சந்தோஷமா இருந்தா எனக்கு கொஞ்சம் திருப்தி அவ்வளவுதான்’ சொன்னான் சுதர்ஷன்.

‘ஒரு உயிரை எல்லாருமா சேர்ந்து அழிச்சிருக்கீங்க. ச்சே மனுஷங்களா நீங்க...’ வெடித்தாள் பட்டென. ‘இதிலே அவன் சிரிச்சா சந்தோஷம் அது இதுன்னு.. தயவு செய்து என் முன்னாடி நிக்காதீங்க’

‘இல்ல ஹாசினி..’

‘ப்ளீஸ் கெட் அவுட்..’ ஹாசினி கத்த அதற்கு மேல் அங்கே நிற்க முடியாமல் தளர்ந்து நகர்ந்தான் சுதர்ஷன்.

சில நிமிடங்கள் கழித்து மனம் கொஞ்சம் தெளிந்தது போல் இருக்க தோட்டத்தில் தான் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்து நடந்தான் விவேக். ‘மறுபடியும் சுதர்ஷன் கண்ணில் பட்டுவிடக்கூடாது’ என்ற வேண்டுதலுடன்.

‘மன்னிக்க மாட்டேன்பா. நான் அவனை மட்டும் மன்னிக்க மாட்டேன்’ ஜபித்துக்கொண்டேதான் வந்தான் விவேக்.

அதே நேரத்தில் ஹாசினியுடன் பேசிவிட்டு வெளியே வந்துக்கொண்டிருந்தான் சுதர்ஷன். அவன் தலைக்குள் பல நூறு அலைகள் அடித்துக்கொண்டிருக்க கார் நிறுத்துமிடத்தை நோக்கி அவன் நடக்க அவனுக்கு எதிரே விவேக் வந்துக்கொண்டிருக்க தன்னை நோக்கி வேகமாய், அதிவேகமாய்  வந்துக்கொண்டிருந்த காரை கவனிக்கவில்லை சுதர்ஷன்.

திடீரென அவனுக்கு பின்னால் வெகு அருகில் கார் வந்ததை சுதர்ஷன் உணர்ந்து செய்வதறியாது தடுமாறி நிற்க, அவனை எப்படி பார்த்தான்  எப்படி நிகழந்தது, என்ன நிகழ்ந்தது என அவனுக்கு புரிவதற்கு முன்னே அவன் மீது பாய்ந்து அவனை நகர்த்திக்கொண்டு போயிருந்தான் விவேக்.

‘டேய்......அறிவில்லை உனக்கு. ரோட்டை பார்த்து வர்றதில்லையா???’ தன்னையும் அறியாமல்  எகிறியது விவேக்கின் குரல். அது அவனது அனிச்சை செயல்.

நொடிகள் நகர்ந்த பின்னரே தான் என்ன நிகழ்ந்தது என இருவருமே உணர்ந்தனர். சுதர்ஷனின் கண்களில் இப்போது நீர் படலம். ‘எப்படிப்பட்ட மனிதன் இவன்??? இன்று என் உயிரையும் எனக்கு திருப்பி கொடுத்திருக்கிறானே!!!’

அதுதான் விவேக்!!! அதுதான் ஸ்ரீனிவாசனின் மகன் விவேக். எதிரே நிற்பவன் துரோகியாக இருந்தாலும், நண்பனாக இருந்தாலும் அவன் விவேக் ஸ்ரீனிவாசனாகவே இருப்பான்!!!

சட்டென அவனை விட்டு விலகி தலையை உதறிக்கொண்டு நடந்தான் விவேக். ஒரு முறை நிமிர்ந்து மேலே வானத்தை பார்த்துக்கொண்டான் அவன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.