(Reading time: 18 - 36 minutes)

நிகிலுக்கு நிச்சயத்திருக்கும் ஸ்வேதாவின் தந்தை, பிரபல நாயகன் யுகேந்தர். அவரும் ‘எந்தவித வில்லங்கமும் இல்லாத நடிகர்’ என்று நற்பெயர் பெற்றவர். நிர்மலா தன் பிள்ளைகளை வளர்த்த விதம் போலவே, ஸ்வேதாவை அவளின் அம்மா வளர்த்திருந்தார்.

திரை உலகில் பிரவேசிக்கும் வரை நிகில், ஸ்வேதா இருவருமே அடுத்தவர் பற்றி அறிந்தது இல்லை…! பெண் பார்க்கும் வரை ஒருத்தரை மற்றவர் நேரில் பார்த்தது கூட இல்லை. ஸ்வேதா, சமீபத்தில் தேசிய விருது வாங்கிய போது தான், அப்படி ஒரு ஆடை வடிவமைப்பாளர் தங்கள் துறையில் இருப்பதுவே நிகிலுக்கு தெரிய வந்தது. திரைத் துறை நிழல் கூடப் படாமல் நிர்மலாவும், ஸ்வேதாவின் அம்மாவும், தங்கள் குழந்தைகளை பொத்திபொத்தி வளர்த்திருந்தனர். முழுக்க முழுக்க பெற்றோர்களால் முடிவு  செய்யப்பட்ட  திருமணம் தான் நிகிலுடையது.

றுநாள் படப்பிடிப்பு தளம்…

நிகிலின் வருகையால், அங்கே ஒரே பரபரப்பாக இருந்தது. பார்வையாளர்கள், போட்டியிடும் இளைஞர்கள், அவர்களின் நெருங்கிய குடும்பத்தினர் என்று நிகிலோடு பேச, புகைப்படம் எடுக்க பெரிய போட்டி  நிலவியது.

“இன்று ஒரு நாள் தான் நிகிலால் வர முடியும். அதனால், படப்பிடிப்பு உடனே ஆரம்பிக்க வேண்டும்” என்று சக்கரவர்த்தி தலையிட்டு, மைக்கில் அறிவித்த பிறகே,... நிலைமை கட்டுக்குள் வந்தது.

முன் தினம் சொல்லப்பட்டு, இன்று திரையில் ஓடிய அந்தக் காட்சிக்கு ஏற்ப ஒவ்வொரு ஆளாக,  நடிக்க ஆரம்பித்தனர்.

“மதன் இன்னும் கொஞ்சம் எமோஷன் காமிக்கணும்…” என்று நடுவர் அங்கே சொல்ல,...

“இந்தப் பய அடுத்த ரவுண்டுக்கு போவானாங்கற டென்ஷன்லேயே, எனக்கு மோஷன் பிச்சிக்கிட்டு போகுது…! இதுல எமோஷன் பத்தலையா இவங்களுக்கு” என்று புலம்பும் தன் கணவரை, மதனின் அம்மா முறைக்க,... அவர் கப்பென்று வாயை மூடினார்.

“ஓகே கைஸ்… ஒரு சின்ன ப்ரேக் எடுப்போம்… அரை மணி நேரம் தான்,  அப்புறம் எல்லாரும் அவங்கவங்க பொசிஷன்ல இருக்கணும்.  ப்ரேக் டைம்…” என்று இயக்குனர் குரல் கொடுக்க,...

தங்களை ரெஃப்ரெஷ் செய்துக் கொள்ள, கஃபி, டீ அருந்த, ஒத்திகை பார்க்க, என்று ஆளாளுக்கு அங்கே இங்கே நடக்க ஆரம்பித்தனர்.

ரசிகர்கள் தன்னை சூழும் முன், அவசரமாக தன் அறைக்குள் புகுந்த நிகில், காற்று வாங்க, பால்கனியில் வந்து நின்றான். அப்போது… அவனின் மனம் முழுவதும் ஸ்வேதாவின் /அவளின் நினைவுகளே.  அவளை பார்த்து ஒரு மாதம் தான் ஆகிறது என்பதை அவனால் நம்ப முடியவில்லை. ஒரு மாதத்திலேயே பல வருடங்களாக அவனுக்கு உயிராக இருக்கும் பெற்றோர், தங்கையை போலே அவள் அவனுடைய  மனதிற்கு வெகு நெருக்கமாகி இருந்தாள்.  பெற்றவர்கள் பேசி திருமணத்திற்கு தேதியும் நிச்சயித்திருந்தார்கள். இப்போதெல்லாம் அவனுக்கு அவளின் நினைவு மட்டுமே.

இப்போது கூட ஸ்டுடியோ பார்க்கிங்கில் அவனுக்கு முன் இருந்த பைக்கில் இருப்பவள் அவளாகவே அவனுக்கு தெரிந்தாள். ச்சேச்சே... அவளாவது இப்படி இன்னொருவனுடன் நெருக்கமாக பைக்கில் பயணம் செய்வதாவது. அவன் நினைத்து முடிக்கும் முன் பைக்கில் இருந்தவள் திரும்பினாள். அது அவளே தான்…!

தன் ஆபீஸ் அறையின் பால்கனியில் நின்றிருந்த நிகிலால் தான் சற்று முன் கண்ட காட்சியை நம்ப முடியவில்லை.

‘ஸ்வேதா…’ இப்போது அவன் சுவாசத்தோடு கலந்து விட்ட பெயர்…! பெற்றோரின் விருப்பதிற்காகவும், ஒரே துறையில் பணிபுரிவதால், இந்த திரைத்துறையின் நல்லது கெட்டதுகள் புரிந்த ஒத்த குடும்ப பின்னணி, சம அந்தஸ்து, என்பதை எல்லாம் கணக்கிட்டுத் தான் ஸ்வேதாவுடனான திருமணத்திற்கு அவன் முதலில் ஒப்புக் கொண்டான்.

ஸ்வேதா…! நடிகனான தனக்கு ஏற்ற அழகான பெண்ணாக தான் ஆரம்பத்தில் அவளை பார்த்தான். ஆனால், இந்த ஒரு மாத காலத்தில், ஸ்வேதாவின்  குணம், தன் குடும்பத்தினரோடு பழகும் விதம், தொழில் பற்று, இதை எல்லாம் கண்ட பிறகு, தன் பெற்றோர் தனக்கு மிகவும் பொருத்தமான ஜோடியைத் தேர்ந்தெடுத்து இருக்கின்றனர் என்பதை நினைத்து, பெருமகிழ்ச்சி அடைந்திருந்தான்.

“டொக்டொக்…” கதவு தட்டப்பட்டு, மெதுவே திறக்கப்பட்டது.

“சார்… சாரி ஃபோர் டிஸ்டர்பன்ஸ்… ஷாட்டுக்கு ரெடி ஆகிட்டோம்” உதவியாளர் வந்து சொல்ல,... மெளனமாக படப்பிடிப்பு நடக்கும் பகுதிக்கு வந்தவனுக்கு அந்த பைக் காட்சியே மனதை நிறைத்தது.

நிகிலின் கெட்ட நேரம்… அதே போன்றதொரு காட்சி இப்போது திரையில்…! ஒரே வித்தியாசம்… ஸ்வேதாவின் இடத்தில் யாரோ ஒரு துணை நடிகை…! அடுத்தடுத்த போட்டியாளர்கள் தங்கள் முழு முயற்சியை கொடுத்து, நடித்தனர்.

வெறும் நடிப்பாக நினைத்து, முதல் மூன்று போட்டியாளர்களுக்கு தன் கருத்தை  சுலபமாக சொல்ல முடிந்தவனால், அவன் மனம் இப்போது இருந்த நிலையில், நிழலையும், நிஜத்தையும் பிரித்தறிய முடியாமல், மிகவும் குழப்பமாக இருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.