(Reading time: 15 - 29 minutes)

கைகடிகாரத்தை பார்த்தான்.மணி காலை பதினொன்று!!

இதற்கு மேலும் உறங்குவது சரியல்ல என்று எழுந்தான்.உடலின் சோம்பல் நீங்க நல்ல குளியல் போட மனம் ஏங்கியது.

தனது பெட்டியை தேடினான்.அதை காணவில்லை.அறை எங்கும் தேடினான்.கிடைப்பதாக இல்லை.இறுதியாக அலமாரியை திறந்தான்.அவனது உடைமைகள் அனைத்தும் நேர்த்தியாக அதில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

யாருடைய வேலை இது?என்றப்படி மாற்றுடை எடுத்துக்கொண்டு குளிக்க சென்றான்.

சிறிது நேரத்தில் குளித்துவிட்டு கீழிறங்கி வந்தான்.

"வாப்பா!"-அவனுக்காக காத்திருந்தவராய் கூறினார் செந்தில்நாதன்.

"ராத்திரி என் ரூமுக்கு யார் வந்தா?"

"ஏன்?"

"டிரஸ் எல்லாம் அடுக்கி இருக்கே அதான்!"

"அதை விடுப்பா!நீ சாப்பிடு!வள்ளி..வந்து பரிமாறு வா!"-அவர் அழைத்ததும் வள்ளி ஓடிவந்து பரிமாறினாள்.

"நான் 2 வாரத்துல கிளம்பிடுவேன்!"

"ஏன்?கொஞ்ச நாள் இருக்கலாம்ல!"

"முக்கியமான வேலையை விட்டுட்டு வந்திருக்கேன்!நான் போய் தான் செய்யணும்!"

"ம்..சரிப்பா!"

"நீயும் என்கூட அமெரிக்கா வர!"

"எ..என்னது?"

"நீயும் அமெரிக்கா கிளம்பி வா!அங்கே உனக்கு சிட்டிசன்ஷிப் ரெடி பண்றேன்!இனி என்கூடவே இரு!"

"நீ முதல்ல சாப்பிடு!இதைப்பற்றி அப்பறம் பேசலாம்!"

"தப்பிக்க மட்டும் நினைக்காதே!உன்னை கூட்டிட்டு போக தான் நானே வந்தேன்!"-என்றப்படி ஒரு இட்லியை பிய்த்து,சாம்பாரில் நனைத்து வாயில் வைத்தான்.அவனது முகம் உடனே சுருங்கியது.கேள்வியாக பார்த்தான்.

"என்னாச்சு?"

"சமையல் யார் பண்ணா?"

"அது...நான்தான்யா!'-என்றாள் வள்ளி.

"நீயா?"

"ஆமா!ஏன் நல்லா இல்லையா?"

"இல்லை...அது..உண்மையிலே நீதான் பண்ணியா?"

"இல்லை தம்பி!இது கௌரி பண்ணது!"-என்றார் செந்தில்நாதன்.

அவளது பெயரைக் கேட்டதும் ஒரே நேரத்தில் அதிர்ச்சி,கோபம்,ஆச்சரியம்,காதல் என பல உணர்ச்சிகள் முந்துக்கொண்டு வந்தன.

"கௌரியா?"

"ம்..கௌரி இங்கே தான் இருக்கா!"-அவன் புரியாமல் விழிக்க,சமையலறையிலிருந்து மெல்ல எட்டிப் பார்த்தாள் அவள்.

ஆறு வருடங்களுக்கு முன் பார்த்த பார்வை அது!!மனதில் எழுந்த காதலை சட்டென மனதிலே புதைத்தான் அசோக்.

"இவ இங்கே என்ன பண்றா?எதுக்காக என் வீட்டில இருக்கா?"-உச்சக்கட்ட கோபத்தை உமிழ்ந்தான் அசோக்.

"தம்பி! அமைதியா இரு!"

"உனக்கு எவ்வளவு பட்டாலும் புத்தி வராதா?அவளை எதுக்காக வீட்டில சேர்த்த?எங்கே இருக்கான்...அன்னிக்கு அவ்வளவு மரியாதை தந்த பெரிய மனுஷன்?கூப்பிடு அவனை..."

"அவர் வர மாட்டாரு!"

"அப்பறம் பொண்ணை மட்டும் எதுக்கு அனுப்பினான்?காரியம் சாதிக்கவா!"-அவனது பேச்சில் கண்ணீர் ததும்ப நின்றவள்,அவனது சொல்லில் நொறுங்கிப் போனாள்.

"அசோக்!"-ஓங்கி அவனது கன்னத்தில் அறைந்தார் செந்தில்நாதன்.

"என்னடா பேசுற நீ?ஊர் எல்லையை தாண்டியதும் மனசை கொன்னுட்டியா என்ன?"-அவன் தனது கன்னத்தை ஒரு கையால் தாங்கியப்படி அவரை அதிர்ச்சியாக பார்த்தான்.

கௌரியோ அங்கிருந்து அழுதப்படி.ஓடிவிட்டாள்.

"ஏன்டா இப்படி பண்ற?"

"அப்பா!எல்லாத்தையும் என்னால மறக்க முடியாதுப்பா!அவ அப்பா உன்னை எப்படி எல்லாம் அவமானப்படுத்தினான்!"

"அதுக்கு அந்தப் பொண்ணு என்னடா பண்ணுவா?குழந்தை மனசுடா அவளுக்கு!இப்படி ஒரே வார்த்தையால..."

"போதும் நிறுத்துப்பா!என்னால எதையும் மறக்க முடியாது!"

"உன்னோட இந்த பகை அவசியமில்லாதது!"

"என்னால யாரையும் மன்னிக்க முடியாது!"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.